Published : 29 Mar 2023 06:10 AM
Last Updated : 29 Mar 2023 06:10 AM

டிங்குவிடம் கேளுங்கள்: சில மரங்களில் ஏன் கிளைகள் இல்லை?

ஒரு பூ எப்படிப் பழமாக மாறுகிறது, டிங்கு?

- ஆர். நரேஷ் குமார், 7-ம் வகுப்பு, அரசு மேல்நிலைப் பள்ளி, விழுப்புரம்.

மனிதர்களிலும் விலங்குகளிலும் இனப்பெருக்கம் நடைபெறுவது போலவே தாவரங்களும் இனப்பெருக்கம் செய்யும். பெரும்பாலான பூக்கும் தாவரங்களில் பூக்களில்தாம் இனப்பெருக்கம் நடைபெறும். அதை மகரந்தச் சேர்க்கை என்பார்கள். பெரும்பாலான தாவரங்களுக்குப் பூச்சிகள், பறவைகள், வெளவால்கள், காற்றின் மூலம் மகரந்தச் சேர்க்கை நடைபெறுகிறது.

ஆண் பூக்களில் இருந்து மகரந்தம் பெண் பூக்களில் உள்ள சூலகத்தில் சேரும் மகரந்தச் சேர்க்கையால் விதை உருவாகிறது. இனி பூச்சிகளை ஈர்க்க வேண்டிய அவசியம் இல்லை என்பதால், பூவின் இதழ்கள் உதிர்ந்துவிடுகின்றன. இதழ்கள் ஒட்டிக்கொண்டிருந்த உருண்டையான அடிப் பகுதி சிறிது சிறிதாகப் பெரிதாகி, காயாக மாறுகிறது. அந்தக் காய் குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு வேதி மாற்றம் நிகழ்ந்து நிறம் மாறி பழமாகிவிடுகிறது, நரேஷ் குமார்.

சில மரங்களில் கிளைகள் இருக்கின்றன. சில மரங்களில் கிளைகள் இருப்பதில்லையே ஏன், டிங்கு?

- மு. வர்ஷினி, 6-ம் வகுப்பு, அரசு உயர்நிலைப் பள்ளி, ஏகாட்டூர், திருவள்ளூர்.

பனையும் பனைக் குடும்பத்தைச் சேர்ந்த தென்னையும் கிளைகள் இன்றி மிக உயரமாக வளரக்கூடிய மர வகையைச் சேர்ந்தவை. இந்த மரங்களின் தண்டுப்பகுதியில் ஸ்கெலரன்கிமா (Sclerenchyma fibers) என்றழைக்கப்படும் கார்டிகல் நாரிழைகள் காணப்படுகின்றன.

இவை எளிமையான திசுக்களால் ஆனவை. இந்த நாரிழைகள் நேராக வளரக்கூடியவை. இவைதாம் மரம் உயரமாக வளர்வதற்கான உறுதியை அளிக்கின்றன. அதே நேரம் மரம் கிளை விடவும் இவை அனுமதிப்பதில்லை. அதனால்தான் பனை, தென்னை போன்ற மரங்கள் கிளைகள் இன்றிக் காணப்படுகின்றன, வர்ஷினி.

கால்குலேட்டரில் ‘ ’ பட்டன் மட்டும் பெரிதாக இருக்கிறதே, ஏன் டிங்கு?

- ஜி. இனியா, 6-ம் வகுப்பு, தி விஜய் மில்லினியம் மேல்நிலைப் பள்ளி, கிருஷ்ணகிரி.

கால்குலேட்டரில் அதிக அளவில் பயன்படுத்தப்படும் ஒரு பட்டன் என்றால் அது ‘கூட்டல் குறி’தான். அந்த பட்டன் மற்ற பட்டன்களைவிடப் பெரிதாக இருப்பதன் மூலம், வேகமாகப் பயன்படுத்துவதற்கு வசதியாக இருக்கிறது. கால்குலேட்டரில் இருக்கும் இடத்தைச் சரியாகப் பயன்படுத்திக்கொள்ளும் விதத்தில் ஒன்றிரண்டு பட்டன்கள் பெரிதாக வைக்கப்படுகின்றன, இனியா.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x