Published : 27 Sep 2017 11:14 AM
Last Updated : 27 Sep 2017 11:14 AM
எ
ல்லா விஷயத்துக்கும் நக்கலும் நையாண்டியும் அம்மா ஊருக்குள்ள நிறைய இருக்கும். அதுல ஒண்ணு பேரு. எல்லாருக்கும் ரெண்டு பேரு, மூணு பேரு இருக்கும். செல்லப் பேரு, பள்ளிப் பேரு, பட்டப் பேரு… இது பத்தாதுன்னு விளையாட்டுப் பேரு வேற இருக்கும். ஆனா அம்மாவுக்கு மட்டும் இதையெல்லாம் தாண்டி இன்னும் நிறைய பேரு உண்டு. அம்மா சின்னப் புள்ளையில கடைக்குப் போயிருக்காங்க. அந்தக் கடைக்காரருக்கு அம்மாவ நல்லாவே தெரியுமாம். இருந்தாலும் உன் பேரென்னன்னு கேட்டாங்களாம். அம்மா கோவமா ‘விளக்கெண்ணெய்’ அப்டின்னு சொன்னாங்களாம். அதுலருந்து அம்மாவ அவுங்க வெளக்கெண்ணெய்னுதான் கூப்புடுவாங்க. வெளக்கெண்ணெய் மகனா நீன்னு என்னைப் பார்த்து கேட்ட அன்னிக்குதான் எனக்கே இந்தக் கதை தெரியும். அம்மாகிட்ட வந்து முழுக் கதையும் கேட்டேன். சின்னப்புள்ளையா இருந்த அம்மாவும் அவங்க தோழிகளுடம் சேர்ந்து பேசிக்கிறதுதான் முக்கியம். அதையே எல்லா இடத்துலயும் பேசுவாங்களாம்.
யாராவது என்னன்னுகேட்டா, ‘வெளக்கெண்ணெய்’னு சொல்லுவாங்களாம். எங்கன்னு கேட்டா, ‘தொங்க’ன்னு பதில் சொல்லுவாங்களாம்.
“இது மாதிரி பேரிக்கா, ஊறுகா, நார்த்தங்கா கதையும் ஃபேமஸ். இது அடிக்கடி நடக்காட்டியும் அதைப் பத்தி பெரிய கதை ஓடிக்கிட்டே இருக்கும். ஒரு தடவ அமீர் வீட்டுக்கு அவுங்க அத்தை வந்திருந்தாங்க. அவுங்களுக்கு ஊருக்குள்ள எல்லாரையும் தெரியும். கல்யாணமாகிப் போனதுக்கப்புறம் ரொம்ப வர்றதுல்ல. வரும்போது எல்லாரப்பத்தியும் விசாரிச்சி தெரிஞ்சிக்குவாங்க. நீ யாருன்னு கேட்டதும் கடகடன்னு, ‘எம் பேரு பேரிக்கா, என் ஊரு ஊறுகா, என் நாடு நார்த்தங்கா’ன்னு சொன்னேன். அவுங்களுக்குச் சிரிப்பாவும் வந்துச்சி, என்னைப் பத்தி தெரிஞ்சே ஆகணும்னு ஆயிடுச்சி. சொல்லிப்புட்டு ஓடுன என்னைத் தொரத்திக்கிட்டு வந்து புடிச்சாங்க. ‘அடியாத்தி பொம்பளப் புள்ளைக்கு இப்டி வாயி, ஓட்டம் வேற… சொல்லு, நீ யாரூட்டு புள்ளை?’னு கேட்டாங்க. திருப்பியும் அதையே சொன்னேன். குண்டு கட்டா தூக்கி தோள்ல வச்சிக்கிட்டு அவுங்க அம்மாகிட்ட போய் நடந்ததைச் சொன்னாங்க. ‘இவளா... அந்தக் குட்டை லச்சுமி பேத்தி’ அப்டின்னு அவுங்க சொன்னாங்க. ‘ஓஹோ… சுண்டக்கா மகளா இவ… அதான் நார்த்தங்காவா ஆயிட்டாளாக்கும். அது சரி’ அப்டிங்கவும் எனக்குக் கோவம் பொத்துகிட்டு வந்து, ‘எம்பேரு லோகேஸ்வரி’ அப்டின்னு சொல்லிட்டு அங்கருந்து ஓடி வந்துட்டேன்” அப்படின்னு அம்மா சொன்னாங்க.
ஏழு ஏழுமலை, ஆறு ஆறுமுகம், மூணு முருகன், அஞ்சு அஞ்சலை இருப்பாங்க அம்மா ஊர்ல. பட்டப் பேரு இல்லன்னா கொஞ்சம் கஷ்டம்தான். ஆனால் அம்மாவுக்கு மாதிரி அப்பப்ப ஒரு பேரு இருக்கவுங்க கொஞ்சம் பேருதான். எனக்குதான் எத்தன பட்டப்பேரு அப்டின்னு அம்மா ஆரம்பிச்சா கதை குடுகுடுன்னு ஓடும்.
“ஊரையே சுத்தி வர்றதைத் தாங்க முடியாத அந்த வாசமில்லா சந்தனம், நாங்க வேற அவரை மாமான்னு கூப்புடணும். அவர் எனக்கு வச்ச பேரு ‘தடிப்பய தாண்டவராயினி’. வாய் கூசாம கூப்புடுவாரு. பதிலுக்கு நாத்த சந்தனம், நா..த்த்த சந்தனம்னு சொல்லிக்கிட்டே ஓடிவிடுவேன். குண்டா இருப்பனா அதனால எல்லோருக்கும் அதுவே என் பேரா மாறிடும். தொம்ப, குருது, குண்டுன்னு வாயிக்கு வந்ததைச் சொல்வாங்க. சச்சா தாத்தா ஒருத்தர் இருக்கார். அவருக்குப் புள்ளைங்கைப் பேர ஞாபகம் வச்சிக்க முடியாது. ஆனா ஒவ்வொரு தடவையும் ஒரு பேருவச்சி கூப்புடுவாரு. ‘பேரிச்சம்பழமா அது அங்கபோறது, இங்க வா’ன்னு சொல்லுவாரு. தலையில பூ வச்சிருந்தோம்னு வச்சிக்க, ‘மல்லிப்பூ இங்க ஒரு நிமிஷம் ஓடிவா’னு சொல்லுவாரு. குதிச்சி குதிச்சி ஓடுனம்னா ‘புள்ளி மானா அது?’ அப்படிம்பாரு. சச்சா தாத்தா தனியா வாழ்ந்தாரு. அவருக்கு எங்க உதவி வேணும். நாங்களும் ஆசையா செய்வோம். பேரு மட்டுமா அழகா வைப்பாரு. முட்டாயி பாட்டில்ல அழகழகா, கலர் கலரா முட்டாய் வச்சி, திங்க குடுப்பாரு. அது மாதிரி பெரிய அக்காங்க விளையாடுற விளையாட்டுல ஆள் பத்தலன்னா சின்ன புள்ள ஒண்ணை கணக்குக்குச் சேர்த்துக்குவாங்க. அப்ப எம்பேரு ‘ஒப்புக்குச் சப்பானி’ . அவ ஒப்புக்குச் சப்பானி, அவளைப் போய் குறி வைக்காதீங்கன்னு பேசிக்குவாங்க. இதெல்லாம் பிரச்சினையா இருக்காது. ‘தாடி மகளா நீ? தலப்பா மகளா நீ?’ அப்டின்னு அப்பாவோட பட்டப் பேர வச்சி என்ன கூப்டும்போது ஒரு மாதிரியிருக்கும். எனக்கு பரவால்ல, குட்டச்சி குமாரின்னு ஒருத்தியிருந்தா, அவ அப்பா சுருட்டு குடிப்பார். ‘சுருட்டு மவளா நீ?’ அப்டின்னா எப்டியிருக்கும். பாவம் அவ.
“அது மாதிரியே ஒருத்தருக்கு பேரு மல்லாட்ட, ஒருத்தர் பேரு நண்டு, சீரகம்…எங்க வாத்தியாருக்கே நாங்க பட்டப் பேரு வைப்போம். அடிக்கடி முக்குற மாதிரி செய்வார், அவர் முக்குனி. நடந்துகிட்டே தூங்குவார் அவரு தூங்குமூஞ்சி. மத்த பேரையெல்லாம் இப்ப சொல்ல ஒரு மாதிரி இருக்கு. கூடப்படிக்கிற எல்லாருக்கும் பேரு இருக்கு. எங்க வகுப்புல ரெண்டு கருப்பய்யா. ஒருத்தன் சாமியாடி கருப்பையா வாரத்துக்கு ரெண்டு தடவையாவது சாமி வந்துடும். எங்களுக்குப் பாடமே நடக்காது. இன்னொருத்தன் மூக்கு சீந்தி கருப்பையா. இப்படிப் பேரு இல்லாதவங்களே இருக்க மாட்டாங்க. எங்கப்பா என்ன செல்லம்மான்னு கூப்புடுறதுதான் இப்பயும் எனக்குப் புடிச்ச பேரு. அது பட்டப் பேரில்ல, செல்லப் பேருன்னு எல்லாரும் சொல்லுவாங்க. ஜவாஹர்லால் நேரு இங்கிலந்து சென்று பாரிஸ்டர் பட்டம் பெற்றார். இதைப்படிக்கும் போதுகூட எங்களுக்கு நாங்க வச்சிக்கிற பட்டப் பேருதான் கண்ணுக்கு முன்னாடி வந்துது. அப்புறமாதான் விவரம் தெரிஞ்சுது.”
அம்மா, “உங்க பள்ளிக்கூடத்துல உனக்கு என்ன பட்டப்பேரு சொல்லு?” அப்படின்னு எங்கிட்ட கேப்பாங்க. நல்ல பிள்ளைகளுக்கு அதெல்லாம் இல்லை அப்டிம்பேன். “அப்படின்னா ரெண்டு தப்பு பண்ண வேண்டியதுதான?”ன்னு சொல்லுவாங்க. அது சரிதான். கோழிக்குஞ்சு, ஒட்டடக்குச்சின்னு நாங்க வைக்கிற பேரு அம்மாவுக்கு ஈர்ப்பாவே இருக்கிறதில்ல.
(சேட்டைகள் தொடரும்)
தொடர்புக்கு: saalaiselvam@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT