Published : 15 Feb 2023 06:08 AM
Last Updated : 15 Feb 2023 06:08 AM

டிங்குவிடம் கேளுங்கள்: செயற்கை நுண்ணறிவு பயன்பாட்டுக்கு வந்துவிட்டதா?

- ஜி. இனியா, 5-ம் வகுப்பு, தி விஜய் மில்லினியம் மேல்நிலைப் பள்ளி, கிருஷ்ணகிரி.

நம்மைச் சுற்றிலும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் (Artificial Intelligence) இயங்கிக்கொண்டுதான் இருக்கிறது. உங்கள் கம்ப்யூட்டர், டிவி, ஸ்மார்ட் போன் ஆகியவற்றில், ‘அலெக்சா, ரைம் சொல்லு’, ‘அலெக்சா, பாட்டுப் போடு’, ‘அலெக்சா, ஜுராசிக் பார்க் காட்டு’ என்றெல்லாம் பலரும் சொல்லிக்கொண்டிருக்கிறார்களே... இவர்கள் செயற்கை நுண்ணறிவுக்குதான் கட்டளையிட்டுக் கொண்டிருக்கிறார்கள், இனியா. அதுவும் நம் கட்டளைக்கு ஏற்ப வேலைகளைச் செய்கிறது.

அமேசானிலோ நெட்ஃப்ளிக்ஸிலோ நீங்கள் எந்த மாதிரியான திரைப்படங்களைப் பார்க்கிறீர்கள், தேடுகிறீர்கள் என்பதை எல்லாம் பகுத்து, நீங்கள் இந்தத் திரைப்படங்களைப் பாருங்கள் என்று அதுவே ஒரு பட்டியலைப் பரிந்துரைக்கிறது! ஃபேஸ்புக்கில் வரும் விளம்பரங்களில் ஒரு பொம்மையையோ புத்தகமோ உடையையோ க்ளிக் செய்து பார்த்தீர்கள் என்றால், நீங்கள் வாங்கப் போகிறீர்கள் என்று நினைத்து அவை தொடர்பான விளம்பரங்களாகவே உங்களுக்குக் காட்டும்.

போனில் நாம் அனுப்பும் குறுஞ்செய்திகளையும் அது பகுத்துப் பார்க்கிறது. உங்கள் நண்பனுக்கு ஒரு புத்தகத்தை நீங்கள் பரிந்துரைக்கிறீர்கள். அடுத்து என்ன சொல்வீர்கள் என்பதை செயற்கை நுண்ணறிவு யூகித்துவிடுகிறது. நீங்கள் ‘மு’ என்ற எழுத்தை அழுத்தும்போதே, ‘முடிந்தால் படித்துப் பாரு’ என்று காட்டுகிறது! செயற்கை நுண்ணறிவு வரையும் படங்கள் இப்போதே பயன்பாட்டுக்கு வந்துவிட்டன. அடுத்து கட்டுரை, செய்தி, புத்தகம் எல்லாம் எழுத ஆரம்பித்துவிடும் என்கிறார்கள்.

நீங்கள் டிங்குவிடம் கேட்கும் கேள்விகளுக்குக்கூட செயற்கை நுண்ணறிவே பதில் சொல்லவும் கூடும். கம்ப்யூட்டர் பயன்பாட்டுக்கு வந்தபோது, மனிதர்கள் பயந்ததுபோல் இப்போது செயற்கை நுண்ணறிவைக் கண்டு அச்சம் கொள்கிறார்கள். கம்ப்யூட்டர் தொழில்நுட்பத்தைக் கையாண்டதுபோல, செயற்கை நுண்ணறிவையும் மனிதர்கள் வெற்றிகரமாகக் கையாள்வார்கள்.

கடலில் நீரே இல்லை என்றால் எப்படி இருக்கும், டிங்கு?

- ச. பவித்ரா, 6-ம் வகுப்பு, அரசு உயர்நிலைப் பள்ளி, ஏகாட்டூர்.

பூமி உருவானபோது கடலே இல்லை. 35% நிலப்பகுதியாகவும் 65% ஆழமான பள்ளங்களுமாகவும் இருந்தன. கோடிக்கணக்கான ஆண்டுகளுக்குப் பிறகு நீராவி உருவாகி, அது குளிர்ந்து அசுர மழையாகப் பொழிந்தது. அப்படி ஆயிரக்கணக்கான ஆண்டுகள் மழையாகப் பொழிந்த நீர் எல்லாம் பள்ளத்தில் சேர்ந்து, கடலாக மாறியது. கடலில் இப்போது நீர் இல்லை என்றால், பூமியின் பெரும்பகுதி ஆழமான பள்ளங்களாகக் காட்சி அளிக்கும், பவித்ரா.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x