Published : 03 Feb 2023 04:05 PM
Last Updated : 03 Feb 2023 04:05 PM
எலிசபெத் பிளாக்வெல் 1821 பிப்ரவரி 3 அன்று இங்கிலாந்தில் பிறந்தார். எலிசபெத்தின் தந்தை சாமுவேல் தன்னுடைய குழந்தைகளுக்குச் சிறந்த கல்வியை அளிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். மேலும் குழந்தைகள் தங்கள் தனித்துவமான திறமைகளை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்றும் ஊக்குவித்தார். எலிசபெத்துக்கு 11 வயதானபோது, குடும்பம் அமெரிக்காவுக்குக் குடிபெயர்ந்தது.
அன்புக்குரிய தோழி ஒருவரின் மரணம் எலிசபெத்தை மிகவும் பாதித்தது. எனவே மருத்துவம் படிக்க விரும்பினார். அந்தக் காலத்தில் பெண்கள் மருத்துவம் படிக்கக்கூடிய வாய்ப்பு உருவாகவில்லை. அதனால் மருத்துவம் படிப்பதற்காக பிலடெல்பியாவிற்குக் குடிபெயர்ந்தார். அங்கு மருத்துவர் வில்லியம் எல்டர், மருத்துவர் ஜொனாதன் ஆலன் ஆகியோரிடம் தனிப்பட்ட முறையில் மருத்துவம் படித்தார் எலிசபெத். அப்போது பல்வேறு மருத்துவக் கல்லூரிகளுக்கு விண்ணப்பித்தார். ஆண் மருத்துவச் சங்கங்களில் இருந்து பெரும் எதிர்ப்பைச் சந்தித்தார். ஆண் வேடமிட்டுப் படி, அல்லது பாரிஸுக்குச் சென்று படி என்று நண்பர்கள் அறிவுறுத்தினார்கள்.
1847 இல் நியூயார்க்கில் உள்ள ஜெனீவா மருத்துவக் கல்லூரியால் எலிசபெத்துக்கு இடம் கிடைத்தது. ஆண்களுக்கு மத்தியில் ஒரே பெண்ணாக மருத்துவம் பயின்றார். முதல் மதிப்பெண்களோடு படிப்பை முடித்தார். பாரிஸுக்குச் சென்றார். அங்கு அவர் பெண்களுக்கான மருத்துவமனையில் பணிபுரிந்தார்.
1851இல் எலிசபெத் மீண்டும் அமெரிக்காவிற்குப் பயணம் செய்தார். ஆனால், எந்த மருத்துவமனையும் அவரை வேலைக்குச் சேர்க்கவில்லை. நியூயார்க் நகரில் ஏழைகளுக்காக ஒரு கிளினிக்கைத் தொடங்கினார். 1857ஆம் ஆண்டு இந்த மருத்துவமனை பெண்கள், குழந்தைகளுக்கான நியூயார்க் மருத்துவமனையாக மாறியது. 1868இல் நியூயார்க் மருத்துவமனையில், பெண் மருத்துவக் கல்லூரியைத் திறந்தார் எலிசபெத்.
1869 இல் இங்கிலாந்து சென்று, அங்கு தேசிய சுகாதார சங்கத்தை அமைக்க உதவினார் எலிசபெத். 1875 முதல் 1907 வரை பெண்களுக்கான லண்டன் மருத்துவக் கல்லூரியில் பேராசிரியராகவும் பணியாற்றினார். 1910ஆம் ஆண்டு 89 வயதில் இங்கிலாந்தில் இறந்தார்.
அமெரிக்காவின் முதல் பெண் மருத்துவர், கல்லூரியில் பட்டம் பெற்ற முதல் பெண் மருத்துவர் போன்ற சிறப்புகள் எலிசபெத் பிளாக்வெல்லுக்கு இருக்கின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT