Published : 27 Dec 2016 04:52 PM
Last Updated : 27 Dec 2016 04:52 PM
குழந்தைகளே! புது வருஷம் பிறக்க இன்னும் மூன்று தினங்கள்தான் உள்ளன. புத்தாண்டு அன்று நீங்கள் என்ன செய்வீர்கள்? கேக் வெட்டி கொண்டாடுவீர்கள், கோயில், சர்ச்சுக்குப் போவீர்கள், ‘ஹேப்பி நியூ இயர்’ என்று வாழ்த்துகளைப் பரிமாறிக்கொள்வீர்கள். சரி, வெளி நாடுகளில் புத்தாண்டை எப்படிக் கொண்டாடுவார்கள்? பெரும்பாலும் வண்ண வண்ண வாண வேடிக்கைகள், இரவு முழுவதும் இசை நிகழ்ச்சி என விடிய விடிய கொண்டாட்டங்கள் நடைபெறும். ஆனால், சில நாடுகளில் விநோதமாகக் கொண்டாடுவதும் உண்டு. நாடுகளின் வித்தியாசமான சில புத்தாண்டுக் கொண்டாட்டங்களையும் புத்தாண்டு தகவல்களையும் பார்ப்போமா?
# புத்தாண்டுக் கொண்டாட்டத்தின்போது அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகர டைம்ஸ் சதுக்கம் களைகட்டி காணப்படும். இந்தப் பகுதியில் கழிவறைகள் குறைவு. அதனால், புத்தாண்டுக் கொண்டாட்டத்தில் பங்கேற்கும் பெரியவர்கள் குழந்தைகளைப் போல ‘டயபர்’ மாட்டிக்கொண்டு விடிய விடிய நடனமாடுவார்கள்.
# மிகக் குறைந்த அளவில் மக்கள் தொகை உள்ள தென் துருவப் பகுதியிலும் புத்தாண்டு களைகட்டியிருக்கும். அண்டார்ட்டிகாவில் புத்தாண்டு அன்று முதல் நாள் இரவு பெரிய விருந்து நடக்கும். வழக்கத்தைவிட அன்று குளிர் நடுநடுங்க வைக்கும். அந்த நடுங்கும் குளிரில் இசைத்தபடி, நடனமாடிப் புத்தாண்டை வரவேற்கிறார்கள். இந்தக் குளிர் நிகழ்ச்சியை ‘ஐஸ்ஸ்டாக்’ என்று அழைக்கிறார்கள்.
# புத்தாண்டு அன்று தாய்லாந்தில் ஒருவர் மீது ஒருவர் தண்ணீரைப் பீய்ச்சி அடித்துக்கொள்வார்கள். அதற்காகத் தாய்லாந்து நகர வீதிகளில் தண்ணீரும், தண்ணீரைப் பீய்ச்சியடிக்கும் கருவியின் விற்பனை அமோகமாக நடக்கும். புத்தாண்டை ஜாலியாக வரவேற்பது இவர்களின் பாணி.
# ரஷ்யாவில் ஜனவரி 1 , 14 என இரண்டு நாள் புத்தாண்டைக் கொண்டாடுகின்றனர். பண்டைய காலத்தில் ஜூலியன் காலண்டர்படி ஜனவரி 14-ம் தேதி புத்தாண்டு கொண்டாடப்பட்டது. கிரகோரியன் காலண்டர் பழக்கத்துக்கு வந்த பிறகு புத்தாண்டு ஜனவரி 1 என்றானது. எனவே ரஷ்யர்களில் சிலர் புத்தாண்டோடு பழைய புத்தாண்டு நாளையும் சேர்த்தே கொண்டாடுகிறார்கள்.
# புத்தாண்டு அன்று தென் ஆப்ரிக்காவின் ஜோகன்னஸ்பெர்க் நகரின் சில பகுதிகளில் பழைய பொருட்களைச் சேகரிப்பார்கள். பின்னர் அவற்றைக் கட்டிடங்களின் மேல் கொண்டு சென்று தெருவில் கொட்டுவார்கள். புத்தாண்டு அன்று இப்படி ஒரு கேளிக்கை அவர்களுக்கு.
# 2000-ம் ஆண்டு புத்தாயிரத்தை முன்னிட்டு லண்டனில் ஒரு இசைக்கோவையை கம்ப்யூட்டரின் உதவியுடன் உருவாக்கினார்கள். இந்த இசை லண்டன் டிரினிட்டி பாய்வார் கலங்கரை விளக்கத்தில் தினமும் இசைக்கப்பட்டு வருகிறது. ‘லாங் பிளேயர்’ என்றழைக்கப்படும் இந்த இசைக்கோவை 1999-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதி தொடங்கியது. இந்த முழு நீள இசைக்கோவை 2999-ம் ஆண்டுதான்
முடிகிறது. நீங்கள் இந்த இசையின் முதல் பகுதியைக் கேட்க வேண்டுமானால் 3000-ம் ஆண்டு வரை உயிரோடு இருந்தால்தால் முடியும்.
# பண்டைய ஹவாய் தீவில் புத்தாண்டை நான்கு மாதங்கள் கொண்டாடித் தீர்த்துவிடுவார்களாம். புத்தாண்டையொட்டிப் போரைக்கூட நிறுத்திவிடுவார்கள். நான்கு மாதங்களுக்கு இசை, பாட்டு, நடனம் எனக் கொண்டாடியிருக்கிறார்கள்.
# எத்தியோப்பியா நாட்டுக்கு மொத்தம் 13 மாதங்கள். அதனால், அவர்கள் தற்போது 2009-ம் ஆண்டில்தான் இருக்கிறார்கள். நாள் கணக்கின்படி அவர்களுக்கு செப்டம்பர் 11-ம் தேதிதான் புத்தாண்டு பிறக்கிறது.
# கொரியா போன்ற சில ஆசிய நாடுகளில் பிறந்த உடனே குழந்தைக்கு ஒரு வயதாகி விடுவதாகக் கணக்கிடப்படுகிறது. அதுபோல் புத்தாண்டு அன்றும் ஒரு வயதைக் கூட்டிக் கொள்கின்றனர். இதனால் டிசம்பர் 29-ம் தேதி பிறக்கும் குழந்தைக்கு, இரண்டு நாட்கள் கழித்து, புத்தாண்டு அன்று 2 வயதாகிவிடுவதாகக் கணக்கிடப்படுமாம்.
# 2006-ம் ஆண்டு வரை சர்வதேச விண்வெளி மையத்தில் புத்தாண்டு அன்று விண்கலம் சுற்றுவது தானாகவே நின்றுவிடும். கம்ப்யூட்டரில் ஆண்டு மாறுவதில் ஏற்பட்ட தொழில்நுட்ப பிரச்சினை காரணமாக இப்படித் தற்காலிகத் தடை ஏற்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT