Published : 30 Dec 2022 04:21 PM
Last Updated : 30 Dec 2022 04:21 PM
இந்தியாவின் மிகப் பெரிய போட்டியாகக் கருதப்படும் கோன் பனேகா குரோர்பதியின் 14வது சீஸன் தற்போது ஒலிபரப்பப்பட்டு வருகிறது. மாணவர்களுக்காக நடத்தப்படும் இந்த சீஸனில், டிசம்பர் 21 அன்று ஒலிபரப்பான நிகழ்ச்சியில், 14 வயது மாணவி ஒருவர் 50 லட்சம் ரூபாயை வென்றிருக்கிறார்!
ஜலந்தரைச் சேர்ந்த ஜப்சிம்ரன் கவுர், கேந்திரிய வித்யாலயாவில் எட்டாம் வகுப்பு படித்துவருகிறார். இவர் கலந்துகொண்ட நிகழ்ச்சியில், ஹாட் சீட்டில் அமர்வதற்கான கேள்வியில், 14 வயதான பி. ஷிவகாஷ் முழு மதிப்பெண்களைப் பெற்று, கேள்விகளை எதிர்கொண்டார். 12,50,000 ரூபாய் வென்று, நிகழ்ச்சியிலிருந்து வெளியேறினார். அடுத்து, பள்ளிச் சீருடையில் இருந்த ஜப்சிம்ரன் கேள்விகளை எதிர்கொள்வதற்காக ஹாட் சீட்டுக்கு வந்தார்.
சீருடையில் வந்த காரணத்தை அமிதாப் பச்சன் கேட்க, “நான் தேர்வுக்கு வந்ததாகவே நினைக்கிறேன். நான் இங்கே சொல்லும் சரியான பதில்கள் மூலம் என் பள்ளிக்குப் பெருமை சேர்க்க வேண்டும். அதனால்தான் சீருடையில் வந்தேன்” என்று சொல்லி, பார்வையாளர்களின் வரவேற்பைப் பெற்றார் ஜப்சிம்ரன்.
ஜப்சிம்ரனும் அவர் தந்தையும் இந்த நிகழ்ச்சியைத் தொடர்ந்து பார்த்துக்கொண்டு வருகிறார்கள். ஜப்சிம்ரனின் தந்தை பல்ஜித் சிங், ஒருமுறை நிகழ்ச்சியில் கலந்துகொண்டாலும் அவரால் பரிசுத் தொகையை வெல்ல முடியவில்லை. ஆனால், ஜப்சிம்ரன் ஜூனியர் நிகழ்ச்சிக்கான தேர்வில் வெற்றிபெற்று, தன்னுடைய புத்திசாலித்தனத்தால் நிகழ்ச்சியில் பங்கேற்கும் வாய்ப்பைப் பெற்றார்.
“என் பெற்றோர் இருவரும் வேலைக்குச் செல்கிறார்கள். அதனால் என் பாட்டி மஞ்சீத் கவுர்தான் என்னைக் கவனித்துக்கொள்வார். நிகழ்ச்சிக்குத் தேர்வான பிறகு, வீட்டிலும் பள்ளியிலும் நான் தயாராவதற்கான முழு ஒத்துழைப்பும் கிடைத்தது. நான் நிகழ்ச்சியில் கலந்துகொண்டதே எங்கள் எல்லாருக்கும் மகிழ்ச்சி. இதில் 50 லட்சம் ரூபாயை வென்றிருக்கிறேன் என்பது கூடுதல் மகிழ்ச்சி. என் பாட்டியின் மூட்டுவலிக்கான சிகிச்சைக்கும் என் எதிர்காலப் படிப்புக்கும் இந்தத் தொகையைப் பயன்படுத்துவேன். எனக்கு கல்பனா சாவ்லாவை மிகவும் பிடிக்கும். அதனால் ஐஐடியில் வானியற்பியல் படிக்க வேண்டும் என்பதை லட்சியமாக வைத்திருக்கிறேன்” என்கிறார் ஜப்சிம்ரன் கவுர்.
கேபிசி நிறுவன விதிகளின்படி 18 வயதான பிறகே, ஜப்சிம்ரனுக்கு 50 லட்சம் ரூபாய் வழங்கப்படும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT