Published : 23 Jul 2014 04:14 PM
Last Updated : 23 Jul 2014 04:14 PM
வடக்கு கரோலினா பகுதியில் ‘பிரவுன் மவுண்டென்’ என்ற மலை உள்ளது. இதிலென்ன விஷேசம் என்று கேட்கிறீர்களா? இது விந்தையான ஒரு மலை. இரவு நேரங்களில் இது விசித்திரமாக ஒளிரும். இப்படி மலை ஒளிர்வது இப்போது ஏற்பட்டதோ என்று நினைக்க வேண்டாம்.
சில நூற்றாண்டுகளாகவே இரவு நேரத்தின்போது, இப்படித்தான் இந்த மலை ஒளிருகிறதாம். மலைப் பகுதியில் பந்து போன்ற ஒளி தெரிவதும், பிறகு மத்தாப்பு போலச் சிதறுவதுமாகச் சில விநாடிகள் நீடிப்பதைக் காண மக்கள் கூட்டம் கூடுகிறது.
அமெரிக்காவின் இந்த ஒளி பெரும்பாலும் ஊதா, பிரவுன் வண்ணங்களில் தோன்றுவது வாடிக்கை. சில நேரங்களில் பச்சை, மஞ்சள், சிவப்பு எனப் பிற நிறங்களிலும் மலை ஒளிரும்.
இதை மலையின் வெகு தூரத்தில் இருந்தே இதைப் பார்க்க முடிகிறதாம். சில சமயங்களில் முழு நிலவு போன்ற வடிவில் இந்த மலை ஜொலிக்கவும் செய்கிறது என்கிறார்கள் அங்கு வாழும் மக்கள்.
ஆரம்பக் காலத்தில் மலைக் காட்டுக்குள் ஏற்படும் தீ விபத்தினால் இந்த ஒளி ஏற்படுகிறது என்றே பலரும் நினைத்தார்கள். ஆனால், இந்த மலையை ஆராய்ந்தபோது இது உண்மை இல்லை என்பது தெரியவந்தது.
பிரவுன் மவுண்டென் ஒளிர்வது பற்றி யாருக்கும் சரியான காரணம் தெரியவில்லை. விஞ்ஞானிகளும் இதைப் பலமுறை ஆய்வு செய்துவிட்டார்கள். ஆனாலும் உண்மை புலப்படவில்லை.
உண்மையைக் கண்டறிய விஞ்ஞானிகள் தொடர்ந்து முயற்சி செய்து வருகிறார்கள். விஞ்ஞானிகளாலேயே கண்டுபிடிக்க முடியாததால் பேய் இருப்பதாகவும், வேற்றுக் கிரகவாசிகள் வசிப்பதாகவும் பல கட்டுக் கதைகள் உலா வருகின்றன.
எது எப்படியோ, விஞ்ஞானிகள் உண்மையைக் கண்டறியாத வரை மலை ஒளிர்வது இயற்கை அதிசயம் அல்லவா?
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT