Published : 21 Dec 2016 10:46 AM
Last Updated : 21 Dec 2016 10:46 AM
மரத்துக்கு மரம் பறந்து பறந்து விளையாடிக்கொண்டிருந்தன அந்தப் பறவைக் குஞ்சுகள். சிட்டுக்குருவி, மைனா, பச்சைக்கிளி, புறா, மரங்கொத்தி என்று ஏகப்பட்ட பறவைகள். அவற்றின் கூச்சலில் அந்த இடமே பறவைகளின் கச்சேரி நடப்பது போன்ற சூழலை ஏற்படுத்தியிருந்தது.
அப்போது அங்கு வந்த காக்கைக் குஞ்சு பப்லு அவர்களது விளையாட்டைப் பார்த்து மகிழ்ந்தது. அவர்களுடன் விளையாட வேண்டும் என்ற ஆசை அதற்கும் வந்தது.
முதலில் பச்சைக்கிளியின் பக்கத்தில் போய், “என்னையும் விளையாட்டில் சேர்த்துக்குங்க…” என்று கேட்டது பப்லு. அதைக் கேட்டுச் சிரித்த கிளி. “போ… நீங்கதான் கூட்டம்கூட்டமா இருக்கீங்களே. எதுக்கு இங்க வர..” என்று பழிப்பு காட்டியது.
காக்கை முகம் வாடி போனது. ஆனாலும் முயற்சியைத் தளர விடாமல், அடுத்து மைனாவிடம் போய்க் கெஞ்சியது.
“மைனா அக்கா, என்னையும் ஆட்டத்துல சேர்த்துக்குங்க” என்றது பப்லு.
இதைக் கேட்ட மைனா, “நான் உனக்கு அக்காவா? காக்கைகளுக்கு இங்கு விளையாட அனுமதி கிடையாது” என்று கூற மற்ற எல்லாப் பறவைகள் வாய்விட்டுச் சிரித்தன. அதனைக் கேட்ட காக்கை கண்ணீர் விட்டு அழ ஆரம்பித்தது.
“அப்படியெல்லாம் சொல்லாதீங்கப்பா..” என்று பரிதாபமாகக் கெஞ்சியது பப்லு.
“அப்படிதான் சொல்லுவோம். உன் கொள்ளுத் தாத்தா பாட்டிக்கிட்டே வடை திருடிய கதை உனக்குத் தெரியுமா? உன் அம்மாகிட்டே போய்க் கேளு…” என்றது மரங்கொத்தி.
அதற்கு மேல் பப்லுவால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. தன் கொள்ளுத் தாத்தா வடை திருடினாரா? என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற கோபத்துடன் தன் சின்ன இறக்கையை அசைத்தபடி கூட்டுக்குத் திரும்பி வந்தது. அம்மா காகம் மரத்தில் இல்லை. சோகம் தாங்காமல் அப்படியே சோர்வாகக் கூட்டில் படுத்துத் தூங்கத் தொடங்கிவிட்டது.
சிறிது நேரத்தில் அம்மா காகம் அங்கு வந்தது. தாயின் சிறகடிப்புச் சத்தம் கேட்டவுடன் பப்லு விழித்துக்கொண்டது. அம்மாவைப் பார்த்தவுடனே அது கேவிக் கேவி அழத் தொடங்கியது.
பதறிய அம்மா காகம், “என்னாச்சு கண்ணு? ஏன் அழறே?” என்று தன் இறக்கையால் அதன் தலையைப் பாசத்துடன் வருடிக் கொடுத்தபடி கேட்டது.
“அம்மா, நம்ம கொள்ளுத் தாத்தா பாட்டிகிட்டே வடையைத் திருடினாராமே, உண்மையா?” என்று ஆதங்கத்துடன் கேட்டது பப்லு.
“யார் அப்படிச் சொன்னது?”.
“அந்த மைனாதான் சொன்னது”.
“எல்லாமே பொய் கண்ணா, உன் கொள்ளுத் தாத்தா வடை திருடினார்னு மட்டுமில்ல, அவர் ஒரு நரிகிட்டே அந்த வடையைக் கொடுத்து ஏமாந்துட்டார்ணும் கதை கட்டியிருக்காங்க” என்றது அம்மா.
“ஏன்மா அப்படிப் பொய் சொல்லனும்?”
“பொறாமைதான் செல்லம். மற்ற பறவைகள், அறிமுகம் இல்லாத மனிதர்கள் கிட்டே போகவே பயப்படும். நாம அப்படி இல்லே. ஒற்றுமைக்கும் பறவைகளில் நம்மைப் போல் ஓரினம் இல்லை. பகிர்ந்து உண்ணும் குணத்துக்கு நாம்தான் முன்னுதாரணம். பகிர்ந்து உண்ணும் இனத்தைச் சேர்ந்த உன் கொள்ளுத் தாத்தா, வடை திருடினார்னு சொல்றது கொஞ்சமாவது நம்ப முடியுதா?” என்று கேட்டது அம்மா. பப்லு யோசனையில் ஆழ்ந்தது.
“அப்புறம் ஏன் நம் தாத்தாவைப் பற்றி கதை பரப்பிவிடணும்?” என்று கேட்டது.
“நம் இனம் அறிவுத்திறன் மிக்கது. இதை அறிஞர்களே ஒப்புக்கிறாங்க. விஞ்ஞானிகள் நம் மூளையில் 'நிடோபோடாலியம்’ இருக்குண்ணு சொல்றாங்க. அது அறிவுத்திறனுக்குக் காரணமா இருக்குற செயல்பாட்டு பகுதி. இது மற்றப் பறவைகளைவிட நமக்கு ரொம்ப பெரிதாக உள்ளதாகக் கண்டுபிடிச்சிருக்காங்க. இதுக்கு உதாரணமா உன் எள்ளுத் தாத்தாவின் சரித்திரத்தையே சொல்லலாம்”.
“அது என்ன சரித்திரம்?” என்று ஆர்வமானது பப்லு.
“ஒரு கோடைக் காலத்துல எங்கும் தண்ணீர்ப் பஞ்சம். எல்லாப் பறவைகளும் தண்ணி கிடைக்காம தாகத்துல தொண்டை வறண்டு அலைஞ்சுக்கிட்டிருந்துச்சுங்க. குளம், குட்டை எல்லாம் வறண்டு போயிருந்தன. அப்போ கழுத்து நீளமாய் இருந்த ஒரு குடுவையின் கீழ்ப்பகுதியில் கொஞ்சூண்டு தண்ணி இருந்துச்சு. மற்றப் பறவைகள் எல்லாம் அந்தத் தண்ணீரை எப்படிக் குடிப்பதுன்னு தெரியாம குழம்பி நின்னுச்சுங்க. உன் எள்ளுத் தாத்தா அந்தக் குடுவையிலிருந்த தண்ணீரை எளிதாகக் குடிச்சாரு” என்றது அம்மா காகம்.
“அது எப்படிம்மா?” என்று ஆவலாகக் கேட்டது பப்லு.
தொண்டையைக் கனைத்துக்கொண்ட அம்மா தொடர்ந்தது. “அந்தக் குடுவைக்குப் பக்கத்திலேயே கொஞ்சம் கூழாங்கற்கள் இருந்துச்சு. அந்தக் கற்களையெல்லாம் எடுத்து வந்து குடுவையில் போட்டாரு உன்
எள்ளுத் தாத்தா. உடனே குடுவையின் கீழே இருந்த தண்ணி மேலே வர ஆரம்பிச்சது. உன் எள்ளுத் தாத்தா அந்தத் தண்ணியைக் குடிச்சாரு. இது அபார அறிவுத் திறமை இல்லையா?. இந்த அறிவுத் திறமையைத்தான் காகங்கள் தந்திரம் நிறைந்தவைன்னு பொய்யா கதை விடறாங்க. இப்பகூட தன்னோட அலகால் உடைக்க முடியாத கடினமான கொட்டைகளை, சாலையில் செல்லும் வாகனங்களின் சக்கரங்களுக்குக் கீழே வைச்சு, அவற்றைச் சுலபமா உடைத்துத் தின்னும் புத்திசாலிக் காக்கைகள் நிறைய உண்டு. மற்ற பறவைகளிடம் அந்தச் சாமர்த்தியம் இல்லை கண்ணா. இதையெல்லாம் தாங்கிக்க முடியாமதான் நம் வம்சத்தைப் பற்றி திருடன், ஏமாளி, முட்டாள்னு கப்ஸா விடறாங்க” என்றது அம்மா.
“ஹைய்யா சூப்பர்மா” என்றது பப்லு.
“இன்னும் சொல்றேன் கேட்டுக்க. நம்மை அசுத்தமான பறவைன்னுகூட சொல்லுவாங்க. அதுவும் பொய். பறவை இனத்தில் தலை முழுகிக் குளிக்கிற இனம் நாம்தான். நம் இனத்தில் யாராவது செத்துட்டா எல்லாச் சொந்தங்களையும் கரைந்து கூப்பிட்டு, மனிதர்களைப் போலவே இறுதி அஞ்சலி செய்யும் ஒரே பறவையும் நாம்தானே. எந்தச் சூழலையும், கஷ்டத்தையும்
சமாளித்து எளிதாக வாழ்ந்துடுவோம். பறவைக் காய்ச்சல் உள்ளிட்ட எந்தக் காய்ச்சலும் நம்மை ஒன்றுமே செய்ய முடியாது” என்று பெருமையுடன் கூறியது அம்மா.
“ஆனா, கறுப்பா இருக்கிறதால நம்மள கிண்டல் பண்றாங்களே. கறுப்பா இருக்குற மனுஷங்களகூட அண்டங்காக்கான்னு நம்ம பேரைச் சொல்லிக் கூப்பிடுறாங்களே. நாம சிவப்பாக வழியே இல்லையா? ” என்று ஏக்கத்துடன் கேட்டது குஞ்சு.
“நிறத்தில் என்ன இருக்கு ராஜா? மத்தவங்க நம்மை பாராட்டுற மாதிரி நம் செயல்கள் இருந்தால் போதும், அதுதான் நம்மை எப்பவும் ஞாபகத்துல வைச்சிருக்கும்” என்றது அம்மா.
சற்று நேரத்துக்கு முன் அழுத பப்லு இப்போது சந்தோஷமாகச் சிரிக்கத் தொடங்கியது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT