Published : 09 Nov 2016 12:13 PM
Last Updated : 09 Nov 2016 12:13 PM

காரணம் ஆயிரம் 08: உடலைக் குண்டாக்கும் குளுகுளு நீர்!

ஒரு கையில் பீட்சா, இன்னொரு கையில் கூல்ட்ரிங்க்ஸோடு வெளுத்து வாங்குபவரா நீங்கள்? அப்போ சீக்கிரமாகவே குண்டாகிவிடுவார்கள். கூல்ட்ரிங்ஸ் மட்டுமில்லை, தொடர்ந்து ‘ஐஸ் வாட்டர்’குடித்து வந்தாலும் உடல் குண்டாகிவிடும். நாம் புழக்கத்தில் உப்புத் தண்ணீர், சப்பைத் தண்ணீர், நல்ல தண்ணீர் என்று நீரின் சுவைக்குத் தகுந்த மாதிரிப் பெயர் வைத்து அழைக்கிறோம் (கோயம்புத்தூர் பகுதிகளில் உப்பு சப்பில்லாமல் வரும் தண்ணீரைச் சப்பைத் தண்ணீர் என்று சொல்வார்கள்).

அறிவியல் அடிப்படையிலும் நாம் தண்ணீரை மூன்று வகையாகப் பிரிக்கலாம். ஹைட்ரஜனும் ஆக்ஸிஜனும் சேர்ந்ததுதான் நீர். ‘இயற்கையில் ஹைட்ரஜன் மூன்று விதமான வடிவங்களில் கிடைக்கிறது என்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கிறார்கள். ஒவ்வொரு வித ஹைட்ரஜனும், ஆக்ஸிஜனுடன் இணையும் போது நமக்கு மூன்று விதமான நீர் கிடைக்கிறது. அவை, ப்ரோடியம் தண்ணீர், டியூட்ரியம் தண்ணீர், டிரைடியம் தண்ணீர்.

பொதுவாகக் குழந்தைகளுக்கு ‘ஐஸ்கட்டி’ மிகவும் பிடித்தமான பொருள். ஐஸ்கட்டியை வைத்து விளையாடுவது என்றால் அவர்களுக்குக் கொள்ளை சந்தோஷம். சர்பத்தில் போட்டிருக்கும் ஐஸ்கட்டியைக்கூட எடுத்து வைத்துக்கொண்டு விளையாடுவார்கள். ஐஸ்கட்டி மீது அவர்களுக்கு ஆர்வம் ஏற்படுவதன் பின்னணியில் அழகான உளவியல் காரணம் இருக்கிறது. குழந்தைகள் மட்டுமல்ல, எல்லா உயிரினங்களுக்குமே இந்த ஐஸ்கட்டி மீது ஓர் ஈர்ப்பு ஏற்படவே செய்கிறது (ஐஸ்கிரீம் பிடிக்காதவர்கள் உண்டா என்ன?).

குட்டிச் சோதனை

நீங்களே இந்தச் சோதனையைச் செய்யலாம். உங்கள் வீடுகளில் செல்லப் பிராணிகள் வளர்த்தால் இந்தச் சோதனையைச் செய்து பார்க்க முடியும். நான்கைந்து ஆட்டுக் குட்டிகள் இருந்தால் அவற்றை இரண்டு குழுக்களாகப் பிரித்துக்கொள்ளுங்கள். ஒரு குழுவில் உள்ள ஆட்டுக்குட்டிகளுக்குச் சாதாரணத் தண்ணீரைக் கொடுத்துவரவும். இன்னொரு குழுவில் உள்ள குட்டிகளுக்கு ஐஸ்கட்டி உருகியும் உருகாமலும் இருக்கும் நீரை ( பாதி ஐஸ் கரைந்து மிதக்கும் தண்ணீரை) கொடுத்துவரவும்.

தண்ணீர் குடிக்கும்போதே சில அழகான காட்சிகளைப் பார்க்க முடியும். ஐஸ்கட்டி உருகி நிற்கும் தண்ணீரைக் குடிக்க அடிதடியே நடக்கும். அதன் மெல்லிய நல்ல சுவைதான் ஐஸ்கட்டி தண்ணீரைப் போட்டி போட்டுக்கொண்டு குடிக்கக் காரணம். இப்படியே இரண்டு அல்லது மூன்று மாதங்கள் தண்ணீர் காட்டுங்கள்.

காரணம் என்ன?

ஐஸ்கட்டியில் இருப்பது ஹைட்ரஜனின் இரண்டாவது வடிவமான டியூட்ரியம். இந்த ட்யூட்ரியம் உள்ள நீர் (அதாவது கன நீர்) உயிரினங்களின் வளர்ச்சியை வேகப்படுத்தக்கூடியது. அதனால்தான் இந்தக் கன நீரைக் குடிக்கும் உயிரினங்களின் வளர்ச்சியும் வேகப்படுத்தப்படுகிறது.

அது எப்படிக் கன நீர் உயிரினங்களின் வளர்ச்சியை வேகப்படுத்துகிறது?

நீர் திரவ நிலையில் இருக்கும்போது அதன் மூலக்கூறு கட்டமைப்பு ஒரு மாதிரியாகவும், அதே நீர் பனிக்கட்டியாக மாறும்போது பனிக்கட்டியின் மூலக்கூறு கட்டமைப்பு வேறு மாதிரியாகவும் மாறிவிடுகிறது.

உயிரினங்களின் உடலுக்குள் இருக்கும் நீர்ச்சத்து பனிக்கட்டியின் மூலக்கூறு கட்டமைப்பைப் போலவே இருக்கிறது. எனவேதான் பனிக்கட்டி உருகிய தண்ணீரைக் குடிக்கும்போது அது உடலில் உள்ள நீருடன் உடனடியாகக் கலந்துவிடுகிறது. அதேசமயம் பனிக்கட்டி நீரும் உடலில் உள்ள நீரும் ஒரே மாதிரியான மூலக்கூறு அமைப்பைப் பெற அவசியமும் இல்லாமல் போகிறது. எனவே சக்தி விரயமாவதில்லை. இதனால், விலங்குகள் பருகும் ‘ஐஸ் வாட்டர்’ உடனடியாகத் திசுக்களின் வளர்ச்சிக்குச் சென்றுவிடுகிறது.

சாதாரணத் தண்ணீரைக் குடிக்கும்போது அதன் மூலக்கூறு கட்டமைப்பானது உடலில் உள்ள நீர்ச்சத்துக்கு ஏற்ற மூலக்கூறு கட்டமைப்புக்கு மாற அதிக சக்தியை எடுத்துக்கொள்ளும்.

இப்போது உங்களுக்கு ஒரு சந்தேகம் எழலாம். பனிக்கட்டியின் மூலக்கூறு கட்டமைப்பில் டியூட்ரியம் அதிகம் இருக்கும். ஆனால், நாம் பனிக்கட்டியைச் சாப்பிடுவதில்லை. உருகிய நீரைத்தானே குடிக்கிறோம். உருகிய நீர் என்பது சாதாரண நீர்தானே என நீங்கள் நினைக்கலாம். உங்கள் சந்தேகம் சரிதான். சாதாரண நீர் பனிக்கட்டியாக மாறும் தருணத்திலும், இந்தப் பனிக்கட்டி நீராக உருகும் தருணத்திலும் (அதிகக் குளிர்ச்சியாக இருக்கும் தருணம்) அது பனிக்கட்டியின் மூலக்கூறு கட்டமைப்பையே பெற்றிருக்கிறது.

தண்ணீர் மட்டுமல்ல, மிகவும் குளிர்ச்சியாக உள்ள எந்த ஒரு பானமும் பனிக்கட்டியின் மூலக்கூறு அமைப்பையே கொண்டிருக்கும். எனவேதான் குளிர்பானங்களைத் தொடர்ந்து குடித்துவந்தால் குண்டாகிவிடுகிறோம்.

உடல் குண்டாகாமல் இருக்கக் கூல்டிரிங்க்ஸ் குடிக்கக் கூடாது என்று சொல்வதற்கு இப்போது காரணம் புரிந்துவிட்டதா?

(காரணங்களை அலசுவோம்)

கட்டுரையாளர்: அரசுப் பள்ளி ஆசிரியர்
தொடர்புக்கு: suriyadsk@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x