Last Updated : 30 Nov, 2016 10:05 AM

 

Published : 30 Nov 2016 10:05 AM
Last Updated : 30 Nov 2016 10:05 AM

வகுப்பறைக்கு வெளியே: அறிவியல் ஆசான்கள் 2- பூமியின் வடிவத்தைச் சொன்னவர்

பண்டைய கிரேக்க விஞ்ஞானிகளில் குறிப்பிடத்தக்கவர் எரடாஸ்தனிஸ். அவர் முக்கியமான கணிதவியலாளர். ஆனால், புவியியல் என்றொரு புதிய துறைக்கு வித்திட்டவர்.

எரடாஸ்தனிஸ் வாழ்ந்த காலத்தில் அவருக்கு 'பீட்டா' என்றொரு பட்டப் பெயர் உண்டு (கிரேக்க எழுத்துகளில் முதலாவது ஆல்பா, இரண்டாவது பீட்டா). அன்றைக்கு மத்திய தரைக்கடல் சுற்றுவட்டாரப் பகுதியில் வாழ்ந்தவர்களில் பெரும்பாலான துறைகளில் இரண்டாவது முக்கிய அறிஞராக அவர்தான் திகழ்ந்தார். அதனால்தான் அப்படி அழைக்கப்பட்டார்.

பகா எண் சல்லடை

கி.மு. 276-ல் சைரீன் என்ற நகரில் அவர் பிறந்தார். அந்த நகரம் தற்போது லிபியாவில் உள்ளது. புதிய கண்டுபிடிப்பால் உற்சாகமடைந்து, 'யுரேகா, யுரேகா' என்று கத்திய ஆர்கிமிடீஸின் சமகாலத்தைச் சேர்ந்தவர். எரடாஸ்தனிஸ், ஏதென்ஸில் தத்துவவியலும் கணிதமும் படித்தார்.

பகா எண்களை (Prime numbers) கண்டுபிடிக்க நம்பகமான, தர்க்கரீதியிலான ஒரு முறையை அவர் கண்டறிந்தார். அதற்கு 'Sieve of Eratosthenes' என்று பெயர். அதாவது, பகா எண்களைச் சலிக்கும் சல்லடை. இந்த முறை மேம்படுத்தப்பட்டு நவீன எண் கோட்பாட்டின் முக்கியப் பகுதியாக இப்போதும் இருந்துவருகிறது.

முதல் வரைபடம்

அந்தக் காலத்தில் பூமி தட்டையானது, பூமிதான் பிரபஞ்சத்தின் நடுவில் இருக்கிறது என்றெல்லாம் பல விஞ்ஞானிகளே நம்பிக்கொண்டிருந்தார்கள். இன்றைக்கு இருப்பது போல நவீனக் கருவிகள் எதுவும் இல்லாத கி.மு. 240-ல், பூமி கோள வடிவம் கொண்டது என்பதை எரடாஸ்தனிஸ்தான் கணித்தார். அது மட்டுமில்லை, பூமியின் மொத்த அளவைக் கிட்டத்தட்ட சரியாக அவர் கணித்தும் சொன்னார். அதேபோல, பூமியின் அச்சு 23.5 டிகிரி (பாகை) சாய்ந்திருப்பதையும், நிலநடுக்கோட்டையும்கூடக் கிட்டத்தட்ட அவரே கணித்திருந்தார்.

சையீன், அலெக்சாண்ட்ரியா ஆகிய நகரங்களில் விழுந்த சூரிய ஓளியின் சாய்வை, இரண்டு நகரங்களுக்கு இடையிலான தொலைவைக் கணக்கிட்டு, பூமியின் சுற்றளவையும் கிட்டதட்ட சரியாகக் கணித்தார். கிளியோமெடீஸின் 'மெட்டியோரா' என்ற புத்தகத்தில் இது பதிவு செய்யப்பட்டுள்ளது.

புதியதோர் துறை

புவியியலுக்கு அடிப்படையாகத் திகழும் பூமியின் முதல் வரைபடத்தை உருவாக்கியவர் எரடாஸ்தனிஸ்தான். இந்த வரைபடத்தில் பிரிட்டன் தீவுகள் முதல் இலங்கைத் தீவுவரையும், காஸ்பியன் கடல் முதல் எத்தியோப்பியாவரையும் அவர் வரைந்து காண்பித்திருந்தார். அந்த வரைபடத்தில் தீர்க்க ரேகைகளையும் இணை கோடுகளையும் அவர் வரைந்திருந்தார். நவீன வரைபடங்களில் குறிப்பிடப்படும் அட்சரேகை, தீர்க்கரேகையை ஒட்டி அந்தக் கோடுகள் அமைந்திருந்ததை சாதாரண விஷயமாகக் கருத முடியாது. இப்படியாகப் புவியியல் என்ற புதிய துறையைக் கண்டறிந்தவர் என்ற பெருமையை எரடாஸ்தனிஸ் பெற்றார்.

அவர் முன்வைத்த 'Geography' என்ற புதிய பெயரால்தான், ஆங்கிலத்தில் அந்தத் துறையை இன்றுவரை நாம் அழைத்துக்கொண்டிருக்கிறோம். கிரேக்க மொழியில் Geo என்றால் பூமி; , graphy என்றால் ஆராய்ச்சி செய்யும் துறை என்று அர்த்தம்.

மிகப் பெரிய கவுரவம்

புவியியல், கணிதம் மட்டுமல்லாமல் தத்துவவியல், வானியல், வரலாறு, நகைச்சுவை, நாடகம், கவிதை ஆகிய துறைகள் சார்ந்தும் எரடாஸ்தனிஸ் பல்வேறு நூல்களை எழுதியுள்ளார். அவருடைய பல்துறை அறிவு காரணமாக, பண்டைய கிரேக்கத்தில் மிகவும் மதிப்புமிக்க கல்வியியலாளருக்கான முக்கியப் பதவி அவரைத் தேடி வந்தது. பண்டைய உலகத்தின் மிகப் பெரிய ஆராய்ச்சி நிறுவனமாகத் திகழ்ந்த அலெக்ஸாண்டிரியாவின் மாபெரும் நூலகத்தின் இயக்குநர் பதவிதான் அது. எரடாஸ்தனிஸ் பெற்ற மாபெரும் கவுரவம் என்று இதைச் சொல்லலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x