Last Updated : 23 Nov, 2016 11:18 AM

 

Published : 23 Nov 2016 11:18 AM
Last Updated : 23 Nov 2016 11:18 AM

சித்திரக்கதை: வழி தவறிய கோழிக்குஞ்சு!

பொழுது இருட்டிவிட்டது. கருஞ்சாம்பல் கோழிக்குஞ்சு அதைக் கவனிக்கவில்லை. வீட்டுக்குப் போகலாம் என்று அம்மாக் கோழி அழைத்த குரலையும் கவனிக்க வில்லை. பொதுவாக அம்மாக் கோழியை விட்டுக் குஞ்சுகள் கொஞ்சம் தூரம் போய்விட்டாலோ, ஏதும் ஆபத்தை உணர்ந்தாலோ அம்மாக் கோழி அடித்தொண்டையில் ஒரு குரல் கொடுக்கும். உடனே எல்லாக் குஞ்சுகளும் பாய்ந்து வந்து அம்மாவின் சிறகுக்கு அடியில் பதுங்கிக்கொள்ளும்.

போன வாரம் எவ்வளவு எச்சரித்தும் கறுப்புப்புள்ளிக் கோழிக்குஞ்சு கேட்காமல் அம்மாக் கோழியை விட்டுத் தூரமாய்ப் போய் இரை தேடிக்கொண்டிருந்தது. அப்போது திடீரென்று எங்கிருந்தோ ஒரு பருந்து பறந்து வந்தது. அம்மாக் கோழி சுதாரித்துப் பருந்தை விரட்டுவதற்குள் கருப்புப்புள்ளிக் கோழிக்குஞ்சு பருந்தின் கால்களில் சிக்கிக்கொண்டது. கிய்யா…கிய்யா… என்று அலறிய கறுப்புப்புள்ளிக் கோழிக்குஞ்சின் சத்தம் அப்படியே வானத்தில் கலந்துவிட்டது.

அதே தவறை இன்று கருஞ்சாம்பல் கோழிக்குஞ்சும் செய்துவிட்டது. அம்மாவை விட்டுத் தூரமாக வந்த கருஞ்சாம்பல் கோழிக்குஞ்சு, ஒரு விசித்திரமான புழுவைப் பார்த்தது. அது மற்ற புழுக்களைப் போல் செல்லாமல் உடலைக் குறுக்கி எழுந்து வேகமாகச் சென்றது. கருஞ்சாம்பல் கோழிக்குஞ்சுக்கு அது வேடிக்கையாக இருந்தது. அப்படியே அதைப் பார்த்துக்கொண்டிருந்தது. கருஞ்சாம்பல் கோழிக்குஞ்சைப் பார்த்த புழு பயந்துவிட்டது.

“ஐயோ, ..என்னைத் தின்னுராதே கோழிக்குஞ்சே”

“ ச்ச்சேச்சே, உன்னைத் திங்க மாட்டேன். எனக்கு வயிறு நெறைஞ்சிருச்சு”

புழு நிம்மதிப் பெருமூச்சு விட்டது. அந்தப் புழு ஒரு நொடிக்குள் உடலைக் குறுக்கித் தூக்குவதைப் பார்த்துக் கொண்டே கோழிக்குஞ்சு கேட்டது.

“ஆமா, எங்கே நீ அவசரமா போற?”

“ஓ, அது ஒரு பெரிய கதை.”

“கதையா, எனக்குக் கதைன்னா ரெம்பப் பிடிக்கும். சொல்லேன்.”

“தூரமா தெரியுதுல்ல அந்தக் கீகாட்டைச் சேர்ந்தவன் நான். ஒரு செம்மறி ஆடு நான் குடியிருந்த செடியை மேய்ஞ்சிருச்சு. அப்ப அதோட உடம்புல ஏறிக்கிட்டேன். இப்பதான் அதோட உடம்ப உதறிச்சு. கீழே விழுந்து என்னோட வீட்டைப் பார்க்கப் போய்க்கிட்டிருக்கேன். ரொம்ப நேரமாச்சு; இருட்டப்போகுது”.

அப்போதுதான் கோழிக்குஞ்சுக்குத் தன்னுடைய அம்மா ஞாபகம் வந்தது. கூடு ஞாபகம் வந்தது. சுற்றிப்பார்த்தது. திசையே தெரியவில்லை. கிய்யா..கிய்யா.. என்று கத்தியது. பதிலில்லை. கருஞ்சாம்பல் கோழிக்குஞ்சுக்குப் பயமாகிவிட்டது.

‘இந்த இருட்டுக்குள் என்னோட அம்மாவை எப்படித் தேடுவேன்? இனிமேல் அம்மாவைப் பார்க்கவே முடியாதா?’. அதற்கு அழுகை வரும்போல இருந்தது.

அப்படியே இருட்டுக்குள் நடந்துபோய்க்கொண்டிருந்தது கோழிக்குஞ்சு. அப்போது ஒரு எலி எதிரே ஓடி வந்தது. பயத்தில் கோழிக்குஞ்சு, கிய்யா... கிய்யா... என்று கூப்பாடு போட்டது. ஓடி வந்த எலி நின்று,” ஏன் சத்தம் போடுதே? இந்த இருட்டுக்குள்ளே என்ன பண்றே?” என்று கேட்டது.

“எலியண்ணே, என்னோட வீடு உங்களுக்குத் தெரியுமா? கிய்யா கிய்யா...”

அதைக்கேட்ட எலி, “ஏய், உன் வீடு எனக்கு எப்படித் தெரியும்? என்று கேட்டுவிட்டு ஓடிவிட்டது. கோழிக்குஞ்சு வருத்தத்துடன் தலையைத் தொங்கப்போட்டுக்கொண்டே நடந்தது. அப்போது ஒரு புதருக்குள் இருந்து உஸ்ஸ்.. உஸ்ஸ்.. உஸ்ஸ் என்று மூச்சு விடுகிற சத்தம் கேட்டது. கோழிக்குஞ்சு நின்றது. அந்தப் புதருக்கு அருகே போய், “பெரிய மூச்சு விடற அண்ணே. என் வீடு எங்கே இருக்குன்னு தெரியுமா?” என்று கேட்டது.

சத்தமே இல்லை. இருட்டில் கோழிக்குஞ்சுக்கு எதுவுமே தெரியவில்லை. பின்புறம் லேசான சத்தம் கேட்டது. திரும்பிப் பார்த்தால், அம்மாடி… ஒரு பெரிய பாம்பு கோழிக்குஞ்சை மோந்து பார்த்துக்கொண்டிருந்தது. கோழிக்குஞ்சு நடுக்கத்தில் அலறியது. ஆனால் பாம்பு, “ஸ்ஸ்ஸ்ஸ்ஸ், அடடா! இப்பத்தான் ரெண்டு தவளைகளைச் சாப்பிட்டேன். ஓடிப்போ கோழிக்குஞ்சே ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்” என்று சொல்லிவிட்டுப் புதருக்குள் சென்றது.

நல்லவேளை! தப்பிச்சோம் பிழைச்சோம் என்று அந்த இடத்தை விட்டு ஓடியது கோழிக்குஞ்சு. அப்போது திடீரென்று கோழிக்குஞ்சின் தலைக்கு மேலே வெளிச்சம் தெரிந்தது. அண்ணாந்து பார்த்தது கோழிக்குஞ்சு. ஆகா! என்ன ஆச்சரியம்! வரிசையாகப் பச்சை நிறத்தில் மின்மினிப்பூச்சிகள் பறந்து விளையாடிக்கொண்டிருந்தன. ஒரு நொடி அப்படியே வாயைப் பிளந்தபடி பார்த்துக்கொண்டிருந்தது கோழிக்குஞ்சு. விளையாடிக்கொண்டிருந்த மின்மினிப்பூச்சி ஒன்று கோழிக்குஞ்சின் முன்னால் வந்து பறந்தது.

“ ஏய், யார் நீ? இங்க என்ன பண்ணிக்கிட்டு இருக்கே?” என்று கேட்டது. அந்தப் பச்சை விளக்குக்காரியை ஆச்சரியத்துடன் பார்த்துக்கொண்டே, “ கிய்யா கிய்யா... நான் என் வீட்டைத் தேடிக்கிட்டிருக் கேன். எங்கம்மா என்னைக் காணாமல் தேடிக்கிட்டிருப்பா. உனக்கு என் வீடு எங்கேயிருக்குன்னு தெரியுமா? எனக்குப் பயமாருக்கு. கிய்யா கிய்யா” என்று சொல்லி அழுதது. அதைப் பார்த்த மின்மினிப்பூச்சிக்குப் பாவமாக இருந்தது.

“அடடா! உன் வீடு எனக்குத் தெரியாதே.”

“நான் என்ன பண்ணுவேன்” என்று புலம்பியபடி அப்படியே உட்கார்ந்து விட்டது கோழிக்குஞ்சு. மின்மினிப்பூச்சி உடனே அந்த இடத்தை விட்டுப் பறந்துபோய்விட்டது. கோழிக்குஞ்சு என்ன செய்வது என்று தெரியாமல் அப்படியே கண்களை மூடிவிட்டது.

சில நொடிகளில் கோழிக்குஞ்சைச் சுற்றி நூற்றுக்கணக்கான மின்மினிப்பூச்சிகள் பச்சைப்பசேல் என்ற வெளிச்சத்தைச் சிந்தியபடி பறந்துகொண்டிருந்தன. கண்களைத் திறந்த கோழிக்குஞ்சு அசந்துபோய்விட்டது.

“கோழிக்குஞ்சின் வீட்டைத் தேடுவோம்

கோழிக்குஞ்சின் வீட்டைத் தேடுவோம்…”

என்று மின்மினிகள் சேர்ந்திசை பாடின. அப்படியே அவை ஊர்வல மாகக் கோழிக்குஞ்சின் முன்னால் பறந்து போயின. கோழிக்குஞ்சுக்கு இப்போது பயமில்லை. எழுந்தது தைரியமாக நடந்தது. தன் பிஞ்சுக் குரலால், “கிய்யா அம்மா. கிய்யா.கிய்யா அம்மா... அம்மா...” என்று கத்திக்கொண்டே நடந்தது. அப்போது தூரத்தில் ஒரு சத்தம்.

“ க்ர்ர்ர்ரே… க்ர்ர்ர்ரே… மகளே எங்கே இருக்கே. க்ர்ர்ர்ரே… க்ர்ர்ர்ரே…”

அந்தச் சத்தத்தைக் கேட்டதும் அவ்வளவுதான் கோழிக்குஞ்சுக்கு உடம்பெல்லாம் புல்லரித்தது.

“கிய்யா அம்மா கிய்யா. நான் இங்கே இருக்கேன்” என்று கத்திக்கொண்டே ஓடியது. அந்த ஓட்டத்துக்கு ஏற்ப மின்மினிகளும் பறந்து, பாதையெங்கும் ஒளியைச் சிந்தின. கொஞ்ச தூரத்திலேயே கோழிக்குஞ்சின் வீடு தெரிந்தது. தேடிக்கொண்டிருந்த அம்மாக் கோழியும் பச்சை நிற ஒளியில் கோழிக்குஞ்சு வருவதைப் பார்த்து விட்டது. கருஞ்சாம்பல் கோழிக்குஞ்சும் அம்மாவைப் பார்த்து ஓடியது. அப்படியே அம்மாக் கோழி தன் சிறகுகளை விரித்துக் கோழிக்குஞ்சை அணைத்துக்கொண்டது.

பிறகென்ன?

அம்மாக் கோழியும், கோழிக்குஞ்சும் மின்மினிகளுக்கு நன்றி சொல்லின. மின்மினிகள் மகிழ்ச்சியோடு பறந்து போயின. அவை பறந்து போன பாதை பச்சை நிறமாய் ஒளிர்ந்ததை இரண்டும் பார்த்துக்கொண்டே நின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x