Last Updated : 30 Nov, 2016 10:05 AM

 

Published : 30 Nov 2016 10:05 AM
Last Updated : 30 Nov 2016 10:05 AM

ஆப்பிள் புராணம்!

தினமும் ஒரு பழமாவது சாப்பிட வேண்டும் என்று பெரியவர்கள் சொல்வதைக் கேட்டிருப்பீர்கள். அமெரிக்காவில் டிசம்பர் ஒன்றாம் தேதி என்றால் ஆப்பிள் பழத்தை மட்டும்தான் சாப்பிடுவார்கள். ஏன் தெரியுமா? அன்றைய தினம் சிவப்பு ஆப்பிள்களைச் சாப்பிடுவதற்கான நாள். இதை ஒவ்வோர் ஆண்டும் அவர்கள் கடைபிடிக்கிறார்கள். அதற்குப் பின்னால் ஒரு சுவாரசியமான விஷயமும் உள்ளது.

முன்பு ஆப்பிள் உற்பத்தியில் சீனா முதலிடத்தில் இருந்தது. இரண்டாமிடத்தில் அமெரிக்கா இருந்தது. 1880-ம் ஆண்டு அமெரிக்கா முழுவதும் சிவப்பு ஆப்பிள் மரங்களை நிறைய வளர்த்தார்கள். நிறைய புதுவகை ஆப்பிள்களையும் விவசாய ஒட்டுமுறையில் உருவாக்கினார்கள். இதில் ‘பென் டேவிஸ்’ வகை ஆப்பிள் எல்லாக் கடினமான வானிலையையும் தாக்குப்பிடித்தது. இந்த ஆப்பிள் மட்டும் நிறைய உற்பத்தி ஆனது.

அப்புறம், நூறாண்டுகளுக்குப் பிறகு 1980-ம் ஆண்டில் அமெரிக்காவில் சிவப்பு நிற ஆப்பிளான ‘ரெட் டெலிசீயஸ்’ வாஷிங்டன் நகரில் அதிகமாக உற்பத்தி ஆனது. அப்போது சிவப்பு ஆப்பிளைச் சாப்பிடுங்கள் என்று பிரசாரம் செய்தார்கள். இதுவே பின்பு சிவப்பு ஆப்பிளைத் தினமும் சாப்பிடுங்கள் (eat a red apple day) என்று ஒரு தினத்தைக் கடைபிடிக்கும் அளவுக்கு மாறியது.

சரி, அமெரிக்காவில் ஆப்பிள் தினம் கொண்டாடுவது இருக்கட்டும். பொதுவாகவே ஆப்பிள் சாப்பிடுவது ரொம்ப நல்லது. ‘தினமும் ஆப்பிள் சாப்பிட்டால் மருத்துவரைப் பார்க்கப் போக வேண்டியதில்லை’ என்று சொல்வதைக் கேட்டிருப்பீர்கள். அதற்குக் காரணம், அதில் நிரம்பியிருக்கும் சத்துகள்தான். ஆப்பிள் பழத்தில் ஏராளமான தாதுக்களும், வைட்டமின்களும் உள்ளன. ஆப்பிள் பற்றி இன்னும் சுவாரஸ்யமான விஷயங்களைப் பார்ப்போமா?

# ஆப்பிள்களில் சுமார் 7,500 ரகங்கள் உள்ளன. இந்தியாவில் 75 சதவீத ஆப்பிள்கள் ஜம்மு, காஷ்மீரிலேயே விளைகின்றன.

# ரெட் டெலிசீயஸ், கோல்டன் டெலிசீயஸ், மெக் இன்டோஷ், லால் அம்ப்ரி, சவுபாட்டியா அனுபம் ஆகியவை இந்தியாவில் விளையும் ஆப்பிள் ரகங்கள்.

# கஜகஸ்தானில் ஆப்பிள் மரங்கள் நிறைந்த காடு அல்மாட்டி நகரில் உள்ளது. அந்த ஊரின் பெயருக்கு ‘ஆப்பிள்களின் தந்தை’ என்று அர்த்தம்.

# பழத்தைவிடத் தோலில்தான் அதிகச் சத்து உள்ளது. அதனால் ஆப்பிள் சாப்பிடும்போது தோலுடன் சாப்பிடுங்கள்.

# ஆப்பிளைத் தண்ணீரில் போட்டால் மிதக்கும். இதற்குக் காரணம், ஆப்பிளில் 25 சதவீதம் காற்று நிரம்பியிருக்கிறது.

# மனிதர்களைப் போலக் குதிரைகள், குரங்குகள், சிம்பன்சிகள், கரடிகள், முயல்கள் போன்ற விலங்குகளும் ஆப்பிளை விரும்பிச் சாப்பிடும்.

# சீனாவில் பெரியவர்களைப் பார்க்கப்போகும்போது மரியாதை செலுத்த ஆப்பிள் பழத்தை வாங்கிச் செல்வார்கள்.

என்ன குழந்தைகளே, வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் நாமும் ஆப்பிள் சாப்பிடுவோமா?

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x