Published : 14 Sep 2022 10:21 AM
Last Updated : 14 Sep 2022 10:21 AM
புருவத்தால் என்ன பயன், டிங்கு?
- ஆர். நகுல், 4-ம் வகுப்பு, ஊ.ஒ.தொ. பள்ளி, கோவை.
புருவம், இமை, இமையில் இருக்கும் முடிகள் எல்லாமே நம் கண்களைப் பாதுகாப்பதற்காகத்தான் இருக்கின்றன. நெற்றியிலிருந்து வழியும் வியர்வை நேரடியாகக் கண்களுக்குள் செல்லாமல் புருவங்கள் பாதுகாக்கின்றன.
தூசி, பூச்சி போன்றவை கண்களுக்குள் செல்லாமல் இமைகள் பாதுகாக்கின்றன. கண்கள் உலர்ந்துவிடாமல் ஈரத்தன்மையுடன் இருப்பதற்காகத்தான் நாம் அடிக்கடி இமைகளைச் சிமிட்டுகிறோம், நகுல்.
மின்னணுக் கழிவு (E- waste) என்பது என்ன?
- வி. செளமியா, 8-ம் வகுப்பு, ஸ்ரீவிக்னேஷ் வித்யாலயா பள்ளி, திருச்சி.
நாம் பயன்படுத்தும் கணினி பாகங்கள், கைபேசி, சார்ஜர், சிடி, ஹெட்போன், டிவி, ஏசி போன்றவை எல்லாம் மின்னணு சாதனங்கள். இவை செயல் இழக்கும்போது மின்னணுக் கழிவுகளாக மாறிவிடுகின்றன. இந்தியாவில் பெரும்பான்மையான மின்னணுக் கழிவுகள் எரிக்கப்படுகின்றன.
அந்தப் பொருள்களில் இருக்கும் சிலிகான், காட்மியம், பாதரசம் போன்ற வேதிப்பொருள்கள், நிலத்தடி நீரில் கலந்து மாசுபடுத்துகின்றன. மின்னணுக் கழிவுகளை முறையாக அப்புறப்படுத்த வேண்டும். தேவை இல்லாமல் மின்னணு சாதனங்களைப் பயன்படுத்தக் கூடாது. கழிவுகளை மீண்டும் மறுசுழற்சி செய்து பயன்படுத்தினால், மின்னணுக் கழிவுகளைக் குறைக்கலாம், செளமியா.
என் பெற்றோர் பழைய சாதத்தில் சின்ன வெங்காயம் சேர்த்துச் சாப்பிடுகிறார்களே ஏன், டிங்கு?
- ர. யோகவர்ஷனா, 4-ம் வகுப்பு, பிச்சாண்டி நடுநிலைப் பள்ளி, போடிநாயக்கனூர், தேனி.
பழைய சாதம் லேசான புளிப்புச் சுவையுடன் இருக்கும். அதுக்குக் காரச் சுவையுடைய வெங்காயத்தைக் கடித்துக்கொண்டால், திகட்டாமல் சாப்பிட்டுவிடலாம். காய் சமைக்க நேரம் இல்லாதபோது, அவசரத்துக்கு இந்த வெங்காயம் கைகொடுக்கும். பழைய சாதமும் வெங்காயமும் நீண்ட காலமாகவே எளியவர்களின் விருப்பத்துக்குரிய கூட்டுஉணவாக இருந்து வருகின்றன, யோகவர்ஷனா.
நம் குரல் எப்படி உருவாகிறது, டிங்கு?
- எல். வினித்குமார், 7-ம் வகுப்பு, டான் பாஸ்கோ பள்ளி, சென்னை.
ஒரு தாளை எடுத்து வேகமாக அசைத்துப் பாருங்கள். ஒலி வருகிறதா? விசிறியை வீசும்போதும் ஒலி வருகிறதா? காற்றின் மீது அழுத்தமான விசையைச் செலுத்தி, அலைகளை ஏற்படுத்துவதன் மூலம் அனைத்துவிதமான ஒலிகளும் ஏற்படுகின்றன. நாம் பேசும்போது குரல்வளை நாளங்கள் அதிர்ந்து, காற்றில் அழுத்த அலைகளை உருவாக்குவதால் ஒலி வருகிறது. வாய், நாக்கு, மூக்கு, உதடு அனைத்தும் சேர்ந்து செயல்படும்போது பேச்சு ஒலி உருவாகிறது, வினித்குமார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT