Last Updated : 26 Oct, 2016 11:57 AM

 

Published : 26 Oct 2016 11:57 AM
Last Updated : 26 Oct 2016 11:57 AM

வகுப்பறைக்கு வெளியே: நம்மைச் சுற்றி - இந்தியாவின் ரத்தக் குழாய்கள்!

உடம்புக்கு அவசியமான ஆக்சிஜனை உடல் முழுவதும் எடுத்துச் செல்லும் வேலையைச் செய்வது எது? ரத்தக்குழாய்கள்! இவற்றின் வழியாக ரத்தம் சென்று அந்த வேலையைச் செய்கிறது. அதுபோலவே, நாட்டுக்கு அவசியமான ஆக்சிஜன் போன்ற உயிர்நீரைத் தருபவை ஆறுகள். இந்த ஆறுகளின் சிறப்புகளைப் பார்ப்போமா?

> இமயமலையின் திபெத் பக்கத்தில் தோன்றி இமயமலைத் தொடரைத் தாண்டி பாய்ந்து கீழிறங்கி வருபவை சிந்து, பிரம்மபுத்திரா, சட்லஜ் ஆகிய ஆறுகள்.

> இந்தியா வழியாகப் பாயும் ஆறுகளில் மிக நீளமானது சிந்து (3,180 கி.மீ.). பாகிஸ்தானின் நீளமான நதியும் சிந்துதான். திபெத்தில் தோன்றி ஜம்மு காஷ்மீர் வழியாகப் பாயும் பண்டைய சிந்து நதி, அரபிக் கடலில் கலக்கும் இடம் பாகிஸ்தான் துறைமுகமான கராச்சி. திபெத்தில் இந்த ஆற்றுக்கு ‘சிங்கி காம்பன்' சிங்கத்தின் வாய் என்று பெயர்.

> இந்தியா வழியாகப் பாயும் ஆறுகளில் பரப்பளவில் மிகப் பெரியது பிரம்மபுத்திரா. இதுவே உலகின் 10-வது மிகப் பெரிய ஆறும்கூட.


சிந்து நதியைக் கடக்கும் பாபர் படை குறித்த ஓவியம்

> இந்தியாவுக்குள் மட்டும் பாயும் ஆறுகளில் நீளமானது கங்கை, தென்னிந்தியாவில் கோதாவரி (இதற்கு தென்னக கங்கை என்றொரு பெயரும் உண்டு).

> கங்கையின் தொடக்கப் பகுதி பாகீரதி என்றும், வங்கதேசத்தில் முடியும் பகுதி பத்மா என்றும் அழைக்கப்படுகிறது.

> பஞ்சாப்பில் பாயும் சட்லஜ், பியாஸ், ராவி, செனாப், ஜீலம் ஆகியவை பஞ்ச நதிகள் என்றழைக்கப்படுகின்றன. பாரசீக மொழியில் பாஞ்ச் (ஐந்து) + ஆப் (தண்ணீர்-ஆறு) ஆகியவை இணைந்தே பஞ்சாப் என்ற பெயர் உருவானது. இந்த ஐந்து ஆறுகள் மண்ணை வளப்படுத்தியதால்தான், வேளாண்மையில் சிறந்த மாநிலமாக பஞ்சாப் இருந்தது.

> உத்தரப் பிரதேசம்-மத்திய பிரதேசம் எல்லையில் உள்ள பூந்தேல்கண்டில் பேட்வா என்றொரு ஆறு பாய்கிறது. அது பாம்பு போல வளைந்து நெளிந்து செல்வதால்தான் பேட்வா எனப்படுகிறது. பேட்வா என்றால் பாம்பு என்று அர்த்தம்.


வங்கதேசத்தில் கங்கை ஆறு

> அடிக்கடி ஏற்படும் வெள்ளத்தால் மக்களின் உயிரையும் உடமையையும் சேதமடையச் செய்துவந்ததால் வங்கத்தில் பாயும் தாமோதர் நதி, ‘வங்கத்தின் துயரம்' எனப்பட்டது. ஆனால், இப்போது அந்த ஆற்றில் அணை கட்டப்பட்டு, தண்ணீர் தடுக்கப்பட்டுவிட்டது.

> இந்தியாவின் மிகப் பெரிய ஆறுகளாகக் கருதப்படும் பிரம்மபுத்திரா, கங்கை, கோதாவரி, கிருஷ்ணா, காவிரி, மகாநதி ஆகியவை வங்கக் கடலில் கலக்கின்றன.

> அரபிக் கடலில் கலக்கும் முக்கிய ஆறுகள் நர்மதை, தபதி, பெரியாறு.

> நர்மதை நதி இந்தியாவை வடக்கு, தெற்காகப் பிரிக்கிறது. நர்மதை என்பதற்கு ‘இன்பத்தைத் தருவது' என்று அர்த்தம்.

> கர்நாடகத்தின் மாண்டியா மாவட்டத்தில் உள்ள சிவசமுத்திரம் அருவியில் (காவிரி) ஆசியாவின் முதல் நீர்மின் நிலையம் 1902-ல் அமைக்கப்பட்டது. ஆரம்ப காலத்தில் கோலார் தங்க வயலுக்கு மின்சாரத்தை அனுப்பிய இந்த மின் உற்பத்தி நிலையம், இப்போதும் செயல்பட்டுவருகிறது.


கல்லணை

> காவிரி ஆற்றில் கரிகால் சோழன் கட்டிய கல்லணை, ஆங்கிலேயர் ஆர்தர் காட்டனால் மகத்தான அணை (Grand Anaicut) என்று புகழப்பட்டது. அணை கட்டும் நவீன வசதிகள் ஏதும் இல்லாத காலத்தில், பெரிய பாறைகளை ஆற்றில் இறக்கி, அவை மண்ணில் பதியப் பதிய புதிய பாறைகளை மேலே போட்டு கல்லணை கட்டப்பட்டது. இந்தப் பழைய கட்டமைப்பின் மீது 1839-ல் ஆங்கிலேயர் கட்டிய மடைக்கதவுகளுடன் கூடிய பாலத்தையே இப்போது நாம் பார்த்துவருகிறோம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x