Published : 05 Oct 2016 11:16 AM
Last Updated : 05 Oct 2016 11:16 AM
சென்னை விமான நிலையத்தில் கண்ணாடிகள் நொறுங்கி விழும் விபத்து செய்தியை டி.வி., செய்திதாள்களில் பார்த்திருப்பீர்கள். இதேபோலவே சூடான நீரையோ, காபியையோ கண்ணாடி டம்ளரில் ஊற்றும்போது அது விரிசல் விட்டு வெடித்ததைப் பார்த்த அனுபவம் உங்களுக்கு உண்டா? சிலருக்காவது இந்த அனுபவம் கிடைத்திருக்கும். கிராமத்துக் கடைகளில் டீ குடித்தால் நீங்கள் ஒரு காட்சியைப் பார்க்கலாம். கண்ணாடி டம்பளரில் டீயை ஊற்றிவிட்டு, அதில் எவர்சில்வர் ஸ்பூனைப் போட்டுச் சர்க்கரையைக் கலக்குவார்கள். சில வீடுகளில்கூடக் கண்ணாடிக் கோப்பைகளில் டீயை ஊற்றுவதற்கு முன்பு அதில் ஒரு எவர்சில்வர் கரண்டியைப் போட்டு வைத்திருப்பார்கள்.
கண்ணாடிக் கோப்பைகள் ஏன் உடைகின்றன என்ற ரகசியத்தைத் தெரிந்துகொண்டால், கரண்டியை டம்ளர்களில் போடும் நம் நாட்டு அறிவியல் அறிவை நினைத்து நீங்களெல்லாம் ஆச்சரியப்பட்டுப் போவீர்கள்.
ஏன் உடைகின்றன?
கண்ணாடி டம்ளரில் சூடான காபியை ஊற்றும்போது அது உடனடியாக டம்ளர் முழுவதும் சூடாகிவிடாது. முதலில் கண்ணாடியின் உட்புற அடுக்கு சூடாகும். வெப்பத்தால் இந்த உட்புற அடுக்கு விரிவடையும். உட்புற அடுக்கு விரிவடையும்வரை வெளிப்புற அடுக்கு குளிர்ந்தே இருக்கும். வெளிப்புறத்தைவிட உட்புறம் மேலும்மேலும் விரிவடைவதால் ஒரு கட்டத்தில் கண்ணாடி டம்ளர் வெடித்துச் சிதறுகிறது. கண்ணாடி வெடிப்பதற்கு இதுதான் காரணம்.
தடிமனான கண்ணாடிக் குவளைகளைப் பயன்படுத்தினால் வெப்பத்தால் உடைவதிலிருந்து பாதுகாக்க முடியுமா என்ற கேள்வி உங்களுக்கு எழலாம். ஆனால், முடியாது. ஏனென்றால், அடுக்குகள் அதிகமாகும்போது அது இன்னும் வேகமாகவே உடைந்து சிதறும். உடையாத கண்ணாடி டம்ளர்கள் வேண்டுமானால் அதன் சுவர்கள் மெலிதாக இருக்க வேண்டும். அது போலவே கண்ணாடி டம்ளரின் அடிப்பகுதி பலமானதாக இல்லாமல் மெலிதாக இருக்க வேண்டும். ஏனெனில் காபியைக் கண்ணாடி குவளையில் ஊற்றும்போது அதன் பக்கவாட்டுப் பகுதிகளைக் காட்டிலும் அடிப்பகுதி மிக வேகமாகச் சூடாகி உடைந்துவிடும்.
சூடான நீரால் மட்டுமல்ல, சில சமயம் குளிர்ந்த நீராலும்கூடக் கண்ணாடி டம்ளர்கள் உடைந்துவிடுவதுண்டு. இதற்கு என்ன காரணம்? மிகக் குளிர்ந்த நீரில் கண்ணாடி டம்ளரை வைத்தால், அதன் வெளிப்புற அடுக்கு குளிர்ந்து சுருங்க ஆரம்பிக்கும். இது உட்புற அடுக்கை வேகமாக அழுத்துவதால் கண்ணாடி டம்ளர் உடைகிறது.
எப்படி?
அப்படியென்றால் குளிரிலும், வெப்பத்திலும் உடையாமல் இருக்கும் கண்ணாடிக் கோப்பைகள் இல்லவே இல்லையா? முன்பே சொன்னதுபோல இதற்குக் கண்ணாடி கோப்பைகளின் பக்கவாட்டுப் பகுதிகள் மெலிதாக இருக்க வேண்டும். இந்த அறிவியல் தத்துவத்தைப் பயன்படுத்திதான் கொதிகலன்களில் (பாய்லர்கள்) நீர்மட்டக் கருவிகள் செய்யப்படுகின்றன. கொதிகலன்களின் நீர்மட்டக் கருவிகள் மெலிதான கண்ணாடிச் சுவர்களால் தயாரிக்கப்படுகின்றன. அதனால் நீர்மட்டக் கருவிகளில் வெப்பநிலை சீராகப் பரவி உடையாமல் இருக்கச் செய்கிறது.
காரணம்
அதெல்லாம் சரி, டீ கடைகளில் சூடான டீயைக் குடிக்கும்போது கண்ணாடி டம்ளர்கள் உடைவதில்லையே என்று நீங்கள் கேட்கலாம். நாம் குடிக்கிற டீ அவ்வளவு சூடாக இல்லை என்பதே உண்மை. இருந்தாலும், கிராமத்து டீக்கடைகளிளோ வீடுகளிலோ ஸ்பூனைப் போட்டுக் கொடுப்பதற்குக் காராணம் இல்லாமல் இல்லை. ஒருவேளை கொடுக்கும் டீ ரொம்பவும் சூடாக இருந்தால், டம்ளரில் போடப்படும் ஸ்பூன் அந்த வெப்பத்தை தாங்கிக்கொண்டுவிடும். இதனால், சூடு குறைந்து கண்ணாடி விரிவடைவது தடுக்கப்பட்டுவிடும். இதனால், கண்ணாடி உடையாமல் இருக்கும்.
சென்னை விமான நிலையத்தில் கண்ணாடி உடைவதற்கும் இதுதான் காராணம். வெப்பம் காரணமாகக் கண்ணாடியின் உள் அடுக்கு அழுத்தம் அதிகரித்து உடைந்திருக்கலாம் அல்லது குளிர்ச்சியின் காரணமாக வெளிப்புற அடுக்கு குறைந்தும் உடைந்திருக்கலாம்.
கண்ணாடிக்குள் எத்தனை அறிவியல்!
(காரணங்களை அலசுவோம்)
கட்டுரையாளர்: அரசுப் பள்ளி ஆசிரியர்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT