Last Updated : 05 Oct, 2016 11:12 AM

 

Published : 05 Oct 2016 11:12 AM
Last Updated : 05 Oct 2016 11:12 AM

சீன நாட்டுப்புறக் கதை: டிராகன் ஆன சிறுவன்!

சீனாவின் ஒரு குட்டிக் கிராமத்தில் லிவாங் என்ற சிறுவன் இருந்தான். அந்தக் கிராமத்தில் ஒரு சின்ன வீட்டில் தன் அம்மாவோடு அவன் வசித்து வந்தான். அவனுடைய வீடு பச்சைப் பசேல் எனக் காட்சியளிக்கும் புல்வெளியின் மத்தியில் இருந்தது. மழைக்காலத்தில் அவனுடைய வீடு ரொம்ப அழகாக இருக்கும்.

லிவாங் ஒவ்வொரு நாளும் காலையில் எழுந்தவுடன் வீட்டைச் சுற்றியுள்ள புல்வெளியில் நடத்து செல்வான். அந்தப் புல்வெளியில் கொஞ்ச நேரம் படுத்துப் புரண்டு விளையாடுவான். அதன் பிறகு, பச்சைப் புற்களை வெட்டி ஒரு கூடையில் போட்டுக்கொள்வான். அந்தப் புற்களைத் தினமும் விவசாயி குவாங்கிடம் கொடுப்பான். அவர் அந்தப் புற்களைத் தன்னுடைய பசுக்களுக்குச் சாப்பிடக் கொடுப்பார். புற்களுக்குப் பதிலாக ஒரு ஜாடி நிறைய அரிசியை அவர் லிவாங்கிற்குக் கொடுப்பார். லிவாங்கிற்கு இதுதான் தினமும் வேலை.

என்ன ஆனதோ தெரியவில்லை. அந்தக் கிராமத்தில் இரண்டு ஆண்டுகளாக மழையே பெய்யவில்லை. ஒரு சொட்டு மழைக்கூடப் பெய்யாததால் பச்சை பசேல் என இருந்த புற்கள் எல்லாமே காய்ந்துபோயின. கிராமத்தை இப்படிப் பார்ப்பது லிவாங்கிற்குக் கவலையைத் தந்தது. விவசாயி வைத்திருக்கும் பசுக்களுக்குப் புல் கிடைக்காமல் பசியில் இருக்குமே என்றும் வருந்தினான். இருந்தாலும் எங்கேயாவது கொஞ்சமாவது புல் கிடைக்கிறதா என்று தேடினான் லிவாங். ஆனால், பச்சைப்புல் எங்கும் தென்படவில்லை.

ஒரு நாள்…

லிவாங் புற்களைத் தேடி நடந்துகொண்டிருந்தான். உயரமான ஒரு மலைத்தொடருக்குப் பின்னால் பசும்புற்கள் கொஞ்சம் இருப்பதை அவன் கண்டுபிடித்தான். கஷ்டப்பட்டு அங்கே சென்று அந்தப் புற்களை அறுத்து எடுத்துக்கொண்டு விவசாயியிடம் சென்றான். ஒவ்வொரு நாளும் அங்கே சென்று புற்களை அறுத்து எடுத்துச்செல்வான். ஆனால், அவன் அடுத்த நாள் சென்று பார்க்கும்போது அந்த இடத்தில் திரும்பவும் புற்கள் வளர்ந்திருக்கும். இந்த அதிசயத்தை லிவாங் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.

இப்படியே சில நாட்கள் கழிந்தன. ஒரு நாள்…

லிவாங் அரிவாளால் புற்களை அறுத்துக்கொண்டிருந்தான். அப்போது, பளபளவென மின்னிய தங்க மணியைக் கண்டான். அது பார்ப்பதற்கு அழகாக இருந்தது. அதில் மயங்கிய லிவாங், தங்க மணியை வீட்டுக்கு எடுத்துவந்தான்.

அந்தத் தங்க மணியை அரிசி ஜாடியில் போட்டுவைத்தான் லிவாங். அவன் மணியைப் போடும்போது காலியாக இருந்த அரிசி ஜாடி, அடுத்த நாள் பார்க்கும்போது அரிசியால் நிரம்பிக் கிடந்தது. ஒவ்வொரு முறையும், லிவாங் ஜாடியைக் காலி செய்த பிறகும் திரும்பவும் அரிசி நிரம்பிக்கொண்டேயிருந்தது.

இந்த அற்புதத்துக்கு அந்த மணிதான் காரணம் என்பதை லிவாங் அப்போதுதான் புரிந்துகொண்டான். அந்தச் சிறுவன் எல்லோரிடமும் அன்பும் கருணையும் கொண்டவன். அதனால், தனக்குக் கிடைத்த அரிசியை அந்தக் கிராமத்தில் இருந்த எல்லோருடனும் பகிர்ந்துகொண்டான். விவசாயியைத் தவிரக் கிராமத்தில் எல்லா மக்களும் மகிழ்ச்சியாக இருந்தனர். ஏனென்றால், விவசாயியின் பசுக்கள் புற்கள் இல்லாமல் பசியால் வாடிக்கொண்டிருந்தன. புற்கள் கிடைக்கக் காரணமாக இருந்த அந்தத் தங்க மணியை லிவாங்கிடமிருந்து எப்படியாவது வாங்கிவிட வேண்டும் என்று நினைத்தார் விவசாயி.

லிவாங்கைப் பார்க்க வந்தார் விவசாயி. “லிவாங், அந்தத் தங்க மணியை என்னிடம் கொடேன். உனக்குப் பணம், பண்ணை, வீடு எல்லாவற்றையும் தருகிறேன்” என்று சொன்னார்.

“அதை யாருக்கும் தர மாட்டேன். தயவுசெய்து அதைக் கேட்காதீர்கள்” என்று மறுத்தான் லிவாங்.

உடனே முகத்தைத் திருப்பிக்கொண்டு அங்கிருந்து கிளம்பிய விவசாயி, அந்தத் தங்க மணியைத் திருடிவிடுவது என முடிவெடுத்தார். ஒரு நாள் இரவு லிவாங் தூங்கிக்கொண்டிருந்தபோது, விவசாயி குவாங் அவனுடைய வீட்டுக்குள் நுழைந்தார். விவசாயி ஜாடியை எடுக்கும்போது சத்தம் கேட்டு விழித்துக்கொண்டான் லிவாங். இதைப் பார்த்ததும் குவாங் அங்கிருந்து ஓடிவிட்டார். தங்க மணியைக் காப்பாற்ற என்ன செய்யலாம் என யோசித்த லிவாங், எதுவும் யோசிக்காமல் ஜாடியில் இருந்த மணியை எடுத்து வாயில் போட்டு விழுங்கிவிட்டான்.

அதை விழுங்கியதும் அவனுடைய வயிறு எரிய ஆரம்பித்தது. எரிச்சல் அதிகமானது. அவனுக்குப் பயங்கரமாகத் தாகமும் எடுத்தது. உடனே வீட்டிலிருந்த எல்லாத் தண்ணீரையும் குடித்தான். அப்போதும் வயிறு எரிச்சல் அடங்கவில்லை. கிராமத்தின் எல்லா வீடுகளில் இருந்த தண்ணீரை வாங்கிக் குடித்துப் பார்த்தான். குளத்திலிருந்த தண்ணீரையும் குடித்துத் தீர்த்தான். ஏரிகளையும் காலி செய்தான். ஒரு முழு நதியையும் குடித்து ஏப்பம் விட்டான்.

ஆனாலும், லிவாங்கின் வயிறு எரிச்சல் அடங்கவேயில்லை. அதோடு அவனுடைய உடல் கொஞ்சம் கொஞ்சமாகச் சூடாகிக்கொண்டே போனது. அவன் மூச்சு விட்டாலே நெருப்பு வெளியே வந்தது. ஆரஞ்சு, மஞ்சள் நிறங்களில் தீச்சுடர்கள் அவன் வாயிலிருந்து வெளியே வரத்தொடங்கின.

கொஞ்சம் கொஞ்சமாக அவன் நெருப்பைக் கக்கும் ஓர் உயிரினமாக மாறிபோனான். அதன் பிறகு, அந்தக் கிராமத்தில் வாழமுடியாமல் அவன் ஒரேடியாக அங்கிருந்தே சென்றுவிட்டான்.

குழந்தைகளே! நெருப்பு கக்கும் டிராகன் படத்தைப் பார்த்தால் உங்களுக்கு இனி லிவாங் நினைவுக்கு வருகிறானா?!

ஓவியம்: பிரபுராம்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x