Published : 27 Jul 2022 10:30 AM
Last Updated : 27 Jul 2022 10:30 AM

டிங்குவிடம் கேளுங்கள்: ஜவ்வரிசி எதிலிருந்து தயாரிக்கப்படுகிறது?

காந்தம் ஏன் இரும்பை மட்டும் ஈர்க்கிறது, டிங்கு?

- கா. நனி இளங்கதிர், 5-ம் வகுப்பு, ஒ.எம்.ஜி.எஸ். உயர்நிலைப் பள்ளி, காளையார்கோயில்.

காந்தம் இரும்பை மட்டும் ஈர்க்கிறது என்று சொல்வது தவறு. காந்தப்புலத்தால் விலக்கப்படும் பொருள்கள் காந்தப் பொருள்கள் (Diamagnetic) என்றும் கவரப்படும் பொருள்கள் இணை காந்தப் பொருள்கள் (Paramagnetic) என்றும் அழைக்கப்படுகின்றன. சில இணை காந்தப் பொருள்களில் நிலையான காந்தத்தன்மையை ஏற்படுத்த முடியும்.

இரும்பு, நிக்கல், கோபால்ட்டைப் போன்று காந்தப்புலத்திலிருந்து வெளியே எடுத்துவிட்டாலும் நிலையான காந்தமாகத் தொடரும் பண்பு உள்ள பொருள்கள் அயக்காந்தப் பொருள்கள் (Ferromagnetic) என்று அழைக்கப்படுகின்றன.

பிளாஸ்டிக் உட்பட எல்லாவற்றின் மீதும் காந்தத்தின் தாக்கம் இருந்துகொண்டுதான் இருக்கிறது, அதே நேரம், நாம் பயன்படுத்தும் பல பொருள்களில் இரும்பு கலந்திருப்பதால் காந்தத்தை வைத்துப் பார்க்கும்போது அவை ஈர்க்கப்படுகின்றன, நனி இளங்கதிர்.

பாயசத்தில் இருக்கும் ஜவ்வரிசி எதிரிலிருந்து தயாரிக்கப்படுகிறது, டிங்கு?

- பாண்டீஸ்வரன் அசோக்குமார், 4-ம் வகுப்பு, பிச்சாண்டி நடுநிலைப் பள்ளி, போடிநாயக்கனூர், தேனி.

இந்தோனேசியாவில் உள்ள ஜாவா தீவுகளில் சாகோ என்கிற ஒருவித பனை மரத்தின் தண்டுப்பகுதியில் இருக்கும் மாவிலிருந்து ‘ஜாவா அரிசி’ என்கிற ஜவ்வரிசி தயாரிக்கப்பட்டது.

இரண்டாம் உலகப் போர் காலகட்டத்தில் ஜவ்வரிசி கிடைக்கவில்லை. அதனால், தமிழ்நாட்டில் மரவள்ளிக் கிழங்கிலிருந்து ஜவ்வரிசியைத் தயாரித்தார்கள். ஜாவா அரிசிக்கும் மரவள்ளிக் கிழங்கு அரிசிக்கும் சுவையில் வித்தியாசம் இல்லை என்பதால், அதுவே இப்போது பயன்படுத்தப் படுகிறது, பாண்டீஸ்வரன் அசோக்குமார்.

விபத்தால் காயம் அடைந்தவரிடம் ஏன் பேச்சுக் கொடுக்கிறார்கள், டிங்கு?

- ஜி. இனியா, 5-ம் வகுப்பு, தி விஜய் மில்லினியம் மேல்நிலைப் பள்ளி, கிருஷ்ணகிரி.

விபத்தில் காயம் அடைந்தவர் மிகவும் பயந்திருக்கலாம், வருத்தமாக இருக்கலாம். அவருக்கு ஆறுதல் சொல்லும்விதத்தில், செவிலியர் பேச்சுக் கொடுப்பார். காயம் அடைந்தவருக்கு இதனால் நம்பிக்கையும் தைரியமும் ஏற்படும். அதுவே அவர் குணமாவதற்கான வாய்ப்பை அதிகரிக்கும் என்பதற்காகப் பேசுகிறார்கள், இனியா.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x