Last Updated : 14 Jul, 2022 01:52 PM

 

Published : 14 Jul 2022 01:52 PM
Last Updated : 14 Jul 2022 01:52 PM

கிளி… கிளி… கிழி… கிழி... - இ. ஹேமபிரபா

பிறந்தது மதுரை என்றாலும், வளர்ந்தது எல்லாம் முசிறியிலிருந்து முப்பது கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் காட்டுப்புத்தூரில்தான்.
எங்கள் வீட்டுக்குக் கீழே பாத்திரக்கடை வைத்திருந்தார் அசோக் மாமா. அவரே பழைய புத்தகங்கள், பொருள்களை வாங்கும் கடையும் நடத்தினார். அவருடைய வீடும் பழைய பொருள்கள் கடையும் அடுத்தடுத்து இருந்தன.

சிறுமி ஹேமபிரபா

நான், என் தங்கை, அசோக் மாமாவின் மகள், அவர் உறவினரின் குழந்தைகள் என்று எல்லாரும் ஒன்றாக விளையாடுவோம். எங்கள் வீட்டின் ஒருபக்கம் பழைய பொருள்கள் கடை என்றால், அடுத்த பக்கம் காவல் நிலையத்தைச் சேர்ந்த துணை ஆய்வாளரின் வீடு. ஏனோ அந்த வீட்டில் பெரும்பாலும் யாருமே இருக்க மாட்டார்கள். வீட்டின் வெளியே ஒரு வேப்பமரம் இருக்கும். அந்த இடம் நிழலாகவும் குளிர்ச்சியாகவும் இருக்கும் என்பதால் எங்களுக்கு மிகவும் பிடித்த இடம். எப்போதும் அங்கேதான் விளையாடுவோம்.

எங்களுக்கு எவ்வளவோ பொம்மைகள் வாங்கிக் கொடுத்திருப்பார்கள். ஆனாலும் பழைய பொருள்கள் கடையில் இருக்கும் உடைந்த பொம்மைகள் மீது ஆசையாக இருக்கும். அந்தப் பக்கம் போனாலே தினமும் ஒரு பொம்மை கிடைக்கும் என்பதால், அந்தக் கடையில் புதிதாக பொம்மை வந்திருக்கிறதா என்று எப்போதும் தேடிக்கொண்டிருப்போம்.


அந்தக் கடையில் பழைய நாளிதழ்களையும் புத்தகங்களையும் எடைக்குப் போடுவார்கள். இப்போது சிறார்களுக்கு விற்பது போல பெரிய விளக்கப்படம் (chart) எல்லாம் அப்போது இல்லை. ஏதாவது நாளிதழில் வரும் படங்களை வெட்டித்தான் குழந்தைகளுக்குக் காண்பிப்பார்கள்; கற்றுத் தருவார்கள். ஒரு நாளிதழில் வந்திருந்த ‘கிளி’யின் படத்தை எடுத்துவந்து, “கிளி, கிளி” என்று அம்மா சொல்லிக் கொடுத்தார். நான் காகிதத்தைக் ‘கிழி’க்கச் சொல்கிறார் என்று நினைத்து கிழித்துவிட்டேன்! இப்படி என்னுடைய கற்றலிலும் விளையாட்டிலும் பிரிக்க முடியாத அங்கமாக அந்தக் கடை இருந்தது.

சிறு வயதிலிருந்தே கதைகள் கேட்பது, வாசிப்பது என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும். அம்மாவும் அப்பாவும் நிறைய கதைகளைச் சொல்வார்கள். அவர்களுக்கு நான்கைந்து கதைகள்தாம் தெரியும் என்பதால், அவர்களே கதைகளை உருவாக்கி எங்களுக்குச் சொல்வதும் உண்டு. நான்காம் வகுப்பிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக கதைகளை வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொடுத்தார்கள். வீட்டில் ‘கோகுலம்’ வாங்குவார்கள். அதில் வரும் கதைகள், தகவல்களை வாசிக்க அவ்வளவு பிடிக்கும்! அதுபோக, தினத்தந்தி, தினமலர் போன்ற பத்திரிகைகளில் சிறுவர் இதழ்கள் வெளிவரும். அவற்றையும் பழைய பேப்பர் கடையிலிருந்து எடுத்து வந்து வாசிப்பேன்.


நான்காம் வகுப்பு கோடை விடுமுறையில் அப்பா என்னை நூலகத்துக்கு அழைத்துச் சென்றார். பூச்சி, தேனீ, பட்டாம்பூச்சி என்று வித்தியாசமாகப் பன்னிரண்டு சிறார் கதைகளைக் கொண்ட புத்தகம் அது. அன்றைக்கே எல்லாக் கதைகளையும் வாசித்துவிட்டேன். மறுநாளில் இருந்து நானே தனியாக நூலகம் சென்று, புத்தகம் எடுத்து வந்தேன். தினமும் ஒரு சிறார் புத்தகம். ஐம்பது கதைகளாவது இருக்கும் புத்தங்களைத் தேடி எடுப்பேன். ஒரே நாளில் வாசித்துவிட்டு, மறுநாள் காலை நூலகம் செல்வதற்குத் தயாராக நிற்பேன்.

“எப்பப் பார்த்தாலும் கையில ஒரு புக்க வச்சுக்கிட்டு படிச்சுக்கிட்டே இருக்க, வேற ஏதாவது செய்ய மாட்டியா?” என்று செல்லமாக அம்மா கோபப்படுவார். உடனே நண்பர்கள் எல்லாரும் சேர்ந்து சைக்கிள் ஓட்டச் சென்றுவிடுவோம். வாடகை சைக்கிள் கிடைக்கும். அவரவர் உயரத்துக்கு ஏற்றவாறு சைக்கிளைத் தேர்ந்தெடுத்து, ஒன்றிரண்டு மணி நேரம் சைக்கிள் ஓட்டுவோம். இப்படியே எங்கள் விடுமுறை கரைந்துவிடும்.

ஆராய்ச்சியாளர் ஹேமபிரபா

ஒன்பதாம் வகுப்பு வரை அந்த வீட்டில் இருந்தோம். அதுவரை அந்தப் பழைய புத்தகக்கடை என் வாழ்க்கையில் முக்கியமானதாக இருந்தது. பாரதியார் கவிதைகளை அங்கேதான் கண்டெடுத்தேன். நான் மீண்டும் மீண்டும் வாசித்த சுஜாதாவின் ‘ஏன்? எதற்கு? எப்படி?’ புத்தகமும் பழசாகத்தான் என் கைகளுக்கு வந்தது. பழசாயிருந்தாலும் புதுசாயிருந்தாலும் புத்தகம் புத்தகம்தானே!


கட்டுரையாளர், இஸ்ரேல் டெக்னியான் தொழில்நுட்ப நிறுவனத்தில் ஆராய்ச்சியாளர், எழுத்தாளர்.

இதுபோன்ற பயனுள்ள கட்டுரைகளை தவறவிடாமல் படிக்க: https://www.hindutamil.in/web-subscription

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x