Published : 04 May 2016 12:08 PM
Last Updated : 04 May 2016 12:08 PM
உழைப்புக்கு இலக்கணமாகச் சொல்லப்படும் நாடு அது. இரண்டாம் உலகப் போரில் மிகப் பெரிய அழிவைச் சந்தித்த நாடு. ஹிரோஷிமா, நாகசாகி மீதான அணுகுண்டு வீச்சில் பல்லாயிரக் கணக்கானோர் இறந்துபோனார்கள். இது நடந்து 70 ஆண்டுகள் ஆகிவிட்டன.
அணுகுண்டு வீச்சின் பின்விளைவுகள் இன்னும் மறையவில்லை. ஆனால், அத்தனை அழிவுகளையும் பின்னுக்குத் தள்ளி, சக்திமிக்க நாடாக தலை நிமிர்ந்து நிற்கிறது அந்த நாடு. அதுதான் ஜப்பான்.
கடின உழைப்புக்குப் பெயர்போன நாடு. உலகில் இசைக்கப்படும் தேசிய கீதங்களில் மிகப் பழமையானது ஜப்பானுடையது. மிகச் சிறிய தேசிய கீதமும் இதுதான். ஐந்தே வரிகள்; 31 எழுத்துக்கள். அவ்வளவுதான்.
கீதம் நிறைவடைந்தது
கி.பி 794 - கி.பி. 1185-ம் ஆண்டுகளில் ஜப்பானை ஆண்ட ‘ஹீயன்' வம்சத்தின் காலத்தில் இயற்றப்பட்டது ஒரு பாடல். அதன் பெயர் ‘வாக்கா'. பல நூற்றாண்டுகளுக்கு முன்பு இயற்றப்பட்ட பாடல் என்பதால், அதிலுள்ள பல சொற்கள் இன்று ஜப்பானிலேகூடப் புழக்கத்தில் இல்லை.
அது என்ன வாக்கா?
தமிழில் பல செய்யுள் வகைகள் இருக்கின்றன அல்லவா? அதில் திருக்குறளும் ஒன்றுதானே? திருக்குறளில் எத்தனை சீர்கள்? முதல் வரியில் நான்கு; இரண்டாவது வரியில் மூன்று. இதே போல, ஜப்பானின் செய்யுள் வடிவம்தான் ‘வாக்கா'. மொத்தமே ஐந்து வரிகள்.
ஜப்பானின் பண்டைய இலக்கியங்கள், பழஞ்சீன மொழியிலேயே இயற்றப்பட்டன. இவை ‘கன்ஷி' எனப்பட்டன. ஆனால், ஜப்பானிய மொழியில் உருவானவை - ‘வாக்கா' பாடல்கள்.
பண்டிதர்களின் மொழியாக சீன மொழி கொண்டாடப்பட்டது. ஜப்பானிய மொழியோ இரண்டாம்பட்சமாகப் பார்க்கப்பட்டது. இந்த அவலத்தை நீக்கப் புறப்பட்டது ‘வாக்கா'. வெற்றியும் பெற்றது. இதில் சோகம் என்னவெனில், தமக்குப் புரியாத மொழியில் இருப்பதாக ஜப்பானின் இன்றைய தலைமுறையினர் ‘வாக்கா'வுக்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்!!
சரி, நாம் விஷயத்துக்கு வருவோம். ஜப்பானில் 1880-ம் ஆண்டின்போதே தேசிய கீதமாக இப்பாடல் தேர்வு செய்யப்பட்டு நடைமுறைக்கும் வந்துவிட்டது. 1945-ல், உலகப் போரில் தோல்வியை ஒப்புக்கொண்டு, ஜப்பானின் மன்னர் ஹிரோஹிடோ சரணடைந்தார். ஆனாலும் மன்னர் பதவியிலிருந்து, நீக்கப்படவில்லை. மறு ஏற்பாடு செய்யும் வரை அவரே மன்னராக நீடித்தார்.
முன்பு இருந்த தேசிய கீதமே தொடரட்டும் என்று மன்னர் தீர்மானிக்கிறார். ஆக, 1945-க்குப் பிறகும் அதுவேதான் இசைக்கப்பட்டது. மன்னராட்சியிலிருந்து, ஜப்பான் மக்களாட்சி ஜனநாயகத்துக்கு மாறியது. இது நடந்து அரை நூற்றாண்டுக்கு மேல் ஆகிவிட்டது. ஆனால், 1999-ம் ஆண்டில்தான், முறைப்படி சட்டம் இயற்றப்பட்டு, ஜப்பானின் தேசிய கீதம் என்ற அங்கீகாரத்தைப் பெற்றது.
இப்பாடலின் முதல் வரியான ‘கீமிகாயோ' என்ற பெயரிலேயே இது பரவலாக அழைக்கப்படுகிறது.
பின்னணி இசையெல்லாம் சேர்த்து, இந்த கீதம் பாடி முடிக்க ஆகும் நேரம் - 58 வினாடிகள்.
இப்பாடல் இப்படி ‘ஒலிக்கும்' :
“கீ.. மீ.. காஓ... வா..
சீயா... னீ.. யா..சீயா.. னீ....
சாஸா..ரே... ..ஷீ.. னோ..
இ..வாஓ.. தோ.. நாரிதே..
கோ கே னோ.. மூஸு மாதே.”
எவ்வளவு குட்டி தேசிய கீதம்?
சரி, என்னதான் சொல்கிறது உலகின் பழமையான தேசிய கீதம்? இப்பாடலின் கடைசியில் வரும் ‘ஆட்சி' என்ற சொல், அரசாட்சியைக் குறிப்பிடுவது அல்ல; நாட்டின் ஒட்டுமொத்த ஆளுமையைக் குறிக்கிறது. இதனை நினைவில் நிறுத்தி, பாடலின் பொருளைப் பார்ப்போம்.
தமிழாக்கம்:
“(இன்னும்) ஆயிரம், எண்ணாயிரம் தலைமுறைகளுக்கு,
(இன்றைய) சிறிய கூழாங்கற்கள்,
பச்சைத் தாவரங்கள் நிரம்பிய
குன்றுகளாக உயர்கிற (காலம்) வரை
நினது ஆட்சி தொடரட்டும்!”
(தேசிய கீதங்கள் ஒலிக்கும்)
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT