Published : 27 Jun 2022 02:27 PM
Last Updated : 27 Jun 2022 02:27 PM
மதுரைக்கு அருகில் வைகை ஆற்றங்கரையில் அமைந்துள்ள ஊர் திருப்புவனம். நான் பிறந்த ஊர். திசைக்கு ஓர் அரசு தொடக்கப் பள்ளி இருந்தது. நான் படித்தது மேற்குப் பள்ளி. இடைவேளை நேரத்தில் ஆற்றின் மணல்வெளியே எங்கள் விளையாட்டு மைதானம். இப்போது மணலே இல்லாமல் கட்டாந்தரையாகி புதர்ச்செடிகளோடு பொலிவிழந்து கிடக்கிறது, வைகை.
செந்தட்டிப் போர்
நான்கு அல்லது ஐந்தாம் வகுப்பில் பழந்தமிழ் அரசுகளைப் பற்றிப் படித்தோம். அதில் நாடுகளுக்குள் நடைபெறும் போர் எங்களுக்குப் பிடித்ததாக இருந்தது. எங்கள் வகுப்பில் விளையாட்டாகப் போரிட முடிவு செய்தோம்.
சோழர்களுக்கும் பாண்டியர்களுக்கும் போர். வார இறுதியில் பள்ளி முடிந்த பிறகு ஆற்றில் போருக்கான நாள் குறித்தாகிவிட்டது. நான் பாண்டியர் படை வீரன்.
சதியாலோசனை
போருக்கு இரண்டு நாட்களே இருந்தன. பாண்டிய வீரர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. நாம் ஓர் ஆயுதத்தைப் பயன்படுத்தலாமா என்று ஒரு வீரன் ரகசியமாகக் கேட்டான். கைச்சண்டை என்றுதான் இரு நாட்டுத் தலைவர்களும் முடிவு செய்திருப்பதாக எங்கள் படைத்தலைவர் கூறினார். நான் சொல்வது ஒரு செடியின் இலை என்று அந்த வீரன் கூறினான். எல்லோருக்கும் அது புதுமையாக இருந்தது.
செந்தட்டி என்கிற செடியின் இலை நமது உடலில் எங்கே பட்டாலும் அந்த இடத்தில் அரிப்பு ஏற்படும் என்று அந்த வீரன் கூறியதும் எங்களுக்குள் விவாதம் நடைபெற்றது. அரிப்பெல்லாம் தாங்க முடியாது என்று சிலர் வாதிட்டோம். தாங்கும் அளவுக்குதான் அரிக்கும் என்று சிலர் கூறினார்கள்.
செந்தட்டியைத் தடவினால் அரிக்கும். அதற்கு ஒரு மருந்து இருக்கிறது. அதைப் போட்டதும் அரிப்பு நின்றுவிடும் என்று அந்த வீரன் மருந்தைச் சொன்னதும் அனைவரும் சிரித்து விட்டோம். அந்த மருந்துக்காகவே செந்தட்டியை ரகசிய ஆயுதமாகப் பயன்படுத்த முடிவு செய்தோம். என்றாலும் அடுத்த நாள் அதை நாம் பரிசோதனை செய்து பார்ப்போம் என்று முடிவெடுத்தோம்.
ஆயுதப் பரிசோதனை
மறுநாள் காலை இடைவேளையின்போது ஆற்றங்கரை அரசமர பிள்ளையார் கோயிலில் பாண்டியர் படைக் கூட்டம். செந்தட்டி இலையை வீரன் காட்டினான். பரிசோதிக்க விரும்பியவர்களின் கைகளில் செந்தட்டி இலையை லேசாகத் தேய்த்தான். எனக்கும் தேய்க்கப்பட்டது. சுள்ளென்ற எரிச்சல். மருந்து போட்டதும் குளிர்ச்சியில் அரிப்பு நின்றது.
உள்ளங்கையில் செந்தட்டியை வைத்துக்கொண்டால் அரிக்காது. விரலின் மேற்புறம் படாமல் கவனமாக வைத்துக்கொள்ள வேண்டும். லேசான தோலில் பட்டாலே அரிக்கும் என்று பல்வேறு நுணுக்கங்கள் கற்றுத்தரப்பட்டன. எதிரி நாட்டுப் படையினரின் கைகளில் செந்தட்டியைத் தடவிவிட்டால் சுலபமாக அவர்களை மடக்கிக் கீழே தள்ளி விடலாம். போர் விதிகளின்படி கீழே விழுந்த வீரன் தோற்றவன் ஆவான்.
போர்க்களம்
போர் நாளன்று பகல் முழுவதும் ‘இது பாண்டியநாடு, எங்களுக்கே வெற்றி!’, ‘சோழருக்கே வெற்றி!’ என்று இருநாட்டு வீரர்களும் முழக்கமிட்டோம்.
மாலையில் போர்க்களத்தில் இருநாட்டு வீரர்களும் அணிவகுத்து நின்றனர். ஓரளவு ஒரே உயரமுடையவர்கள் எதிரெதிரே நிறுத்தப்பட்டோம். போர் தொடங்கியது. சில நொடிகளிலேயே சோழர் படையில் ‘ஐயோ, அரிக்குதே!’ என்ற அலறல் எழுந்தது. என்னோடு மல்லுக்கட்டியவனும் அலறினான். பதறிப்போனேன். இதைப் போட்டால் சரியாகிவிடும் என்று சொல்லி அவனுக்காக மருந்தை நானே தடவினேன். போர் நின்று போனது.
போர் நிறுத்த ஒப்பந்தம்
இரு நாட்டு வீரர்களும் கூடினோம். அடிதடி வலிக்கும் என்பதாலேயே மல்யுத்தம் என்று முடிவு செய்தோம். போரில் ஆயுதம் பயன்படுத்தியது தவறு என்று சோழர்கள் கோபமாகக் கத்தினார்கள். நாங்கள் நேற்றே செந்தட்டியைத் தடவிப் பார்த்து மருந்தும் போட்டுக்கொண்டோம். இருந்தாலும் ஆயுதத்தைப் பயன்படுத்தியது தவறுதான். மன்னித்துவிடுங்கள். நாங்கள்தானே மருந்தும் தடவினோம் என்று வருத்தத்தோடு எங்கள் படைத்தலைவர் மன்னிப்புக் கேட்டார். மருந்தை நாங்கள்தானே தடவினோம் என்றதும் அனைவரும் கோபம் மறந்து சிரித்துவிட்டனர்.
இனி போர் விளையாட்டே வேண்டாம். வழக்கம் போல அரசமர பிள்ளையார் கோயிலில் இருந்து ஆற்றுக்குள் குதித்து விளையாடுவோம் என்று அரசமரத்தை நோக்கி ஓடினோம்.
குளுகோஸ் மாத்திரை
விடுமுறை நாட்களில் தவறாமல் தினமும் நூலகத்துக்குச் செல்வோம். நூலகத்தைத் திறக்கும் முன்பே சென்று காத்திருப்போம். நூலகத்தில் இரண்டு அறைகள் இருந்தன. நூலகர் இருக்கும் அறையில்தான் உட்கார்ந்து வாசிப்போம். இரண்டு பெஞ்சுகளில் புத்தகங்களை அடுக்கி வைத்திருப்பார்கள். அடுத்த அறை முழுவதும் புத்தகங்கள் இருக்கும். பெரியவர்கள் மட்டுமே அங்கே செல்ல அனுமதி உண்டு. யாராவது புத்தகம் எடுக்க வந்தால் அந்த அறையைத் திறக்கும் போது, ‘பார்த்துட்டு மட்டும் வந்துடறேன் சார்’ என்று நூலகரிடம் கெஞ்சுவேன். தொடாமல் பார்த்துட்டு வந்துவிட வேண்டும் என்று அவர் சொன்னதும் மகிழ்ச்சியோடு உள்ளே போவேன். எவ்வளவு புத்தகங்கள்! சீக்கிரமே பெரிய ஆளாக ஆகவேண்டும் என்று ஆசையாக இருக்கும்.
நூலகத்தில்தான் துப்பறியும் சங்கர்லால், தமிழ்வாணன் போன்றோர் அறிமுகமாயினர். சிக்கலான நேரத்தில் குளுகோஸ் மாத்திரை சாப்பிட்டதும் அவர்களுக்கு ஐடியா கிடைக்கும்.
காசு சேர்த்து வைத்து மருந்துக்கடைக்குச் சென்று ‘குளுகோஸ் மாத்திரை இருக்கா?’ என்று கேட்டேன்.
“மாத்திரை எல்லாம் இல்லடா. குளுகோஸ்தான் இருக்கு” என்று கடைக்காரர் கூறியபோது வருத்தமாக இருந்தது.
அதெல்லாம் வெளிநாட்டில்தான் இருக்கும். பெரியவனாக ஆனதும் வெளிநாட்டுக்குப் போய், குளுகோஸ் மாத்திரையை வாங்கிச் சாப்பிட வேண்டும் என்று என்னைத் தேற்றிக்கொண்டேன்.
சில ஆண்டுகளுக்குப் பிறகு என் இளமைக் காலத்தில் செவ்வக வடிவில் குளுகோஸ் மாத்திரைகள் விற்பனைக்கு வந்தன. எனக்கோ மட்டற்ற மகிழ்ச்சி. அவ்வப்போது ஒரு பாக்கெட் வாங்கி வைத்துக்கொள்வேன். ஐடியா ஏதும் கிடைக்கவில்லை என்றாலும் இனிப்புப் பிடிக்கும் என்பதால் சில காலம் குளுகோஸ் மாத்திரைகளை மிட்டாயாகச் சாப்பிட்டேன்.
ஓர் அமானுஷ்யக் கடிதம்
ஏழாம் வகுப்பில் என்னை விடுதியில் சேர்த்தார்கள். அந்தக் காலத்தில் சில புகழ்பெற்ற ‘காலாபானி’ விடுதிப் பள்ளிகள் இருந்தன.
அருப்புக்கோட்டைக்கு அருகிலிருந்த கல்லூரணி என்கிற கிராமத்தில் விடுதியோடு கூடிய பள்ளி மிகவும் புகழ்பெற்றது. கண்டிப்புக்குப் பேர்போன அந்தப் பள்ளியில் சேர்க்கப்பட்டேன். எவ்வளவு கண்டிப்பு இருந்தாலும் விடுதி வாழ்க்கை எனக்குப் பிடித்திருந்தது.
அமானுஷ்ய சக்திகள் உடையவர்களைப் பற்றிய புத்தகத்தை நூலகத்தில் பார்த்தேன். ஆர்வத்தோடு எடுத்து வாசித்தேன்.
ESP (Extrasensory perception) சக்தி உடைய ஒருவரைப் பற்றிய கட்டுரையை வாசித்ததும் எனக்கு ஆச்சரியமாக இருந்தது. ஒருவரைப் பார்க்காமலேயே அவர் பயன்படுத்திய பொருளைத் தொட்டதும் அவரைப் பற்றிய விவரங்களைக் கூறி, எதிர்காலத்தில் நடக்கப்போவதையும் கூறுவது. நாராயணன் என்கிற ஒருவருக்கு எதிர்பாராமல் நடந்த விபத்திலிருந்து இந்தச் சக்தி கிடைத்தது என்று வாசித்ததும் எனக்கு ஆர்வம் பொங்கியது. கட்டுரையின் முடிவில் அவரது முகவரியும் இருந்தது.
அன்புள்ள ஐயா,
வணக்கம். நான் ஏழாம் வகுப்பு படிக்கிறேன். உங்களைப் பற்றி ஒரு கட்டுரையை வாசித்தேன். இப்போது நான் தொட்டுத் தொட்டு இந்தக் கடிதத்தை எழுதுகிறேன். இதை வாசிக்கும் போது என்னைப் பற்றி உங்கள் சக்தியால் அறிந்தவற்றை எனக்கு எழுதுங்கள்.
என்று எழுதி, பள்ளி முகவரியுடன் அனுப்பிவிட்டேன்.
ஓரிரு வாரங்களில் எனக்கு அவரிடமிருந்து பதில் வந்தது.
தம்பி, உனது கடிதம் கண்டு மிகவும் மகிழ்ச்சி. ‘நம்புங்கள் நாராயணன்’ என்கிற பெயரில் பத்திரிகைகளில் எதிர்காலம் குறித்து எழுதுகிறேன். நீ நன்றாகப் படித்து கலெக்டர், அல்லது டாக்டர் ஆக வேண்டும். சென்னைக்கு வந்தால் கட்டாயம் வீட்டுக்கு வர வேண்டும் என்றும் எழுதியிருந்தார்.
எப்போதாவது அவருக்குக் கடிதம் எழுதுவேன். உடனே பதில் அனுப்புவார். விடுதிகள் மாறியதில் அவரது முகவரியைத் தொலைத்துவிட்டேன். அவரும் என் பெற்றோரும் ஆசைப்பட்ட படிப்புகளை நான் படிக்கவில்லை என்றாலும் ஆசிரியராக ஆனேன்.
கட்டுரையாளர், ஆசிரியர், எழுத்தாளர்.
இதுபோன்ற பயனுள்ள கட்டுரைகளை தவறவிடாமல் படிக்க: https://www.hindutamil.in/web-subscription
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT