Published : 07 Jun 2022 06:15 PM
Last Updated : 07 Jun 2022 06:15 PM

டோபோவும் ஜிம்மியும் - கதை

ஆர். பத்மகுமாரி

குளிருக்குச் சுகமாகப் போர்த்திக்கொண்டு படுத்திருந்தான் சங்கர்.

“சங்கர் கண்ணா, எழுந்திரு. உன் பறவைகள் ரெண்டும் பசியால் கத்திக்கிட்டிருக்கு. எழுந்து சாப்பாடு கொடு” என்று எழுப்பினார் பாட்டி.

‘பறவைகள்’ என்று சொன்னவுடன் போர்வையை உதறித் தள்ளிவிட்டு ஓடினான் சங்கர். அங்கே அப்பா அவனுக்காக வாங்கித் தந்த பறவைக் கூண்டில் நான்கு குருவிகள் இங்கும் அங்கும் பறந்துகொண்டிருந்தன. அவற்றுக்குத் தானியங்களை எடுத்துப் போட்டான் சங்கர். அவை சாப்பிடுவதைக் கண்டு அவனுக்கு மகிழ்ச்சியாக இருந்தது.

சங்கருக்குச் செல்லப்பிராணிகள் வளர்க்க வேண்டும் என்று ஆசை. ஆனால், நாய்க்குட்டி வாங்கித் தர முடியாது என்று அப்பா சொல்லிவிட்டார். நாய்க்குப் பதிலாகத்தான் இந்தக் குருவிகளை வாங்கிக் கொடுத்திருந்தார். ஆனாலும், அவனுக்கு எப்படியாவது ஒரு நாய்க்குட்டி வாங்க வேண்டும் என்கிற எண்ணம் இருந்துகொண்டே இருந்தது.

அருகில் இருந்த பூங்காவில் ஞாயிற்றுக்கிழமை மாலை சங்கர் விளையாடிக்கொண்டிருந்தபோது தூறல் விழுந்தது. மழை அதிகமாவதற்கு முன் வீட்டுக்குப் போய்விட வேண்டும் என்று ஓடினான். வழியில் பழுப்பு நிறத்தில் ஒரு நாய்க்குட்டி அங்கும் இங்கும் ஓடிக்கொண்டிருந்தது. உடனே, சங்கர் அதைத் தூக்கிக்கொண்டான்.

நாய்க்குட்டியுடன் வந்த சங்கரைப் பார்த்தவுடன் அப்பாவுக்குக் கோபம் வந்துவிட்டது. சத்தம் கேட்டு வெளியே வந்த பாட்டி, “கோபப்படாதே! பாவம் சின்னப் பிள்ளைதானே. இந்த நாயைத் தோட்டத்துல வச்சு வளர்க்கட்டும்” என்றார்.

“எந்தக் காரணம் கொண்டும் வீட்டுக்குள்ள கொண்டுவரக் கூடாது” என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார் அப்பா.

சங்கரின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. பாட்டிக்கு நன்றி சொன்னான்.

நாய்க்குட்டிக்கு ‘ஜிம்மி’ என்று பெயர் வைத்தான். தினமும் பள்ளிக்கூடம் போவதற்கு முன்னும் பள்ளிவிட்டு வந்த பிறகும் ஜிம்மிக்கும் குருவிகளுக்கும் உணவு கொடுப்பது, விளையாடுவது என்று மகிழ்ச்சியாக இருந்தான்.

அன்று சங்கருக்குப் பிறந்தநாள். கண்விழித்துப் பார்த்தபோது ஒரு அட்டைப்பெட்டி இருந்தது. பிறந்தநாள் பரிசு என்று புரிந்தது. ஆவலுடன் பிரித்தான்.

வெள்ளி நிறத்தில் ஒரு நாய் பொம்மை இருந்தது. அதன் கண்கள் கறுப்பு நிறத்தில் மின்னின. சங்கர் ஆச்சரியத்தோடு அதைப் பார்த்துக்கொண்டிருந்தான்.

அங்கே வந்த அவன் அப்பா, “இது ரோபாட் நாய். இதன் வயிற்றுக்குக்கீழ் உள்ள பட்டன்களை அழுத்தி, செய்ய வேண்டிய வேலைகளைப் பதிவு செய்தால், அந்த வேலைகளை எல்லாம் செய்யும்” என்றார்.

“ஏதாவது வேலையைச் செய்யச் சொல்லி கருவியில் பதிவு செய், பார்க்கலாம்” என்றார் அப்பா.

சங்கர், “குரைத்துக்கொண்டே வீட்டுக்குள் ஓடு” என்று உத்தரவு இட்டான்.

உடனே குரைத்துக்கொண்டே ஓடியது நாய். சங்கருக்கு மகிழ்ச்சி பிடிபடவில்லை. இந்த இயந்திர நாய்க்கு ‘டோபோ’ என்று பெயர் வைத்தான்.

டோபோ வந்த பிறகு சங்கர் ஜிம்மியையும் குருவிகளையும் கவனிப்பதே இல்லை. பாட்டி ஒரு நாள் சங்கரிடம், “ஜிம்மி பாவம். அதை நீ திரும்பிக்கூடப் பார்க்கறதே இல்லை. அது உன்னையே போகும்போதும் வரும்போதும் ஏக்கத்துடன் பார்க்குது. வாலை ஆட்டுது. ஜிம்மியுடன் விளையாடு” என்றார்.

சங்கர், “நீங்களே ஜிம்மியைக் கவனிச்சுக்கோங்க. எனக்கு டோபோ போதும்” என்று சொல்லிவிட்டான்.

ஒரு நாள் மாலை டோபோவுடன் பந்தை உருட்டி விளையாடிக்கொண்டிருந்தான் சங்கர். ஜிம்மியும் விளையாட ஆரம்பித்தது. திடீரென்று காதை விடைத்துக்கொண்டு குருவிகளின் கூண்டை நோக்கி ஓடியது ஜிம்மி. சங்கருக்கு ஒன்றும் புரியவில்லை. அவனும் ஜிம்மியின் பின்னால் ஓடினான். அங்கு ஜிம்மி ஒரு பாம்பை மிரட்டிக்கொண்டிருந்தது.

அங்கு வந்த பாட்டி, “இந்தக் குருவிகளைப் பிடிக்க பாம்பு வந்திருக்கு... ஜிம்மி அதைக் கவனிச்சு, குரைத்து விரட்டிவிட்டிருச்சு. உன் குருவிகளைச் சரியான நேரத்துல காப்பாத்திருச்சு! உயிருள்ள நாய்க்கும் இயந்திர நாய்க்கும் உள்ள வித்தியாசம் இதுதான். ஜிம்மி குருவிகளைக் காப்பாத்த ஓடியிருக்கு. இயந்திரம் என்பதால் சும்மா உட்கார்ந்திருக்கு. நீ கட்டளை இட்டால் மட்டுமே அது வேலை செய்யும். ஜிம்மிக்குக் கட்டளை தேவை இல்ல” என்றார்.

தன் தவறு புரிந்தவுடன் ஜிம்மியைத் தூக்கி வைத்துக்கொண்டு, மன்னிப்பு கேட்டான் சங்கர்.

இதுபோன்ற பயனுள்ள கட்டுரைகளை தவறவிடாமல் படிக்க: https://www.hindutamil.in/web-subscription

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x