Published : 28 May 2022 04:44 PM
Last Updated : 28 May 2022 04:44 PM
புள்ளி மான், கஸ்தூரி மான், கவரி மான் எனப் பல வகை மான் இனங்களைக் கேள்விப்பட்டிருப்போம். இவை அல்லாமலும் உலகில் பல மான் இனங்கள் இருக்கின்றன. நாம் இதுவரை பார்த்திராத, கேள்விப்பட்டிராத மான் இனங்களில் சிலவற்றைப் பற்றிப் பார்க்கலாம்.
ஒகாபி: வரிக்குதிரையின் சில அம்சங்களையும் ஒட்டகச்சிவிங்கியின் சில அம்சங்களையும் கொண்டுள்ள மானினம் இது. அதனால் இது செயற்கையாக உருவாக்கப்பட்ட விலங்கு அல்ல. கால் பகுதியில் வரிக்குதிரையைப் போல் கோடுகளுடன் உள்ளது.
வாய்ப்பகுதி நீண்டு ஒட்டகச்சிவிங்கியைப் போன்றது. இதன் உயரம் 4 அடி 11 அங்குலம் வரை இருக்கும். இதன் நீளம் 8 அடி வரைக்கும் எனச் சொல்லபபடுகிறது. இலைகளையும் பழங்களையும் தின்று உயிர்வாழும் தாவர உண்ணி இது. இந்த இனம் மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவில் இட்டூரி காட்டுப் பகுதியில் வாழ்கிறது.
சாய்கா மான்
மானைப் போன்ற உடல் அமைப்பு கொண்ட இந்த விலங்கு, யானையின் தும்பிக்கையைப் போல் வாய்ப்பகுதியைக் கொண்டது. இதன் உயரம் 3 அடி வரை இருக்கும். நீளம் 5 அடி வரை இருக்கும். ரஷ்யா, சீனா, உஸ்பெஸ்கிதன், கஜகஸ்தான், துருக்மெனிஸ்தான் ஆகிய பகுதிகளில் இவை வாழ்கின்றன. வட அமெரிக்கப் பகுதிகளிலும் பிரிட்டிஷ் தீவுக்கூட்டங்களில் இது காணப்படுவதாகச் சொல்லப்படுகிறது. இவை தாவர உண்ணியாகும். இதன் கொம்புகள் சீன மருத்துவத்தில் பிரபலம். அதற்காக இவை வேகமாக வேட்டையாடப்பட்டுவருகிறது. அதனால் இந்த இனம் அழியும் விளிம்பில் இருக்கிறது.
டிக் டிக் மான்
உலகின் குள்ளமான மான் இனம் இதுதான். 40 செண்டி மீட்டர் உயரம் வரைதான் வளரும். நம்முடைய முழங்கை நீளம் எனச் சொல்லலாம். நீளம், 70 செண்டி மீட்டர் வரை இருக்கும். 3இலிருந்து 6 கிலோ வரைதான் எடை இருக்கும். இந்த மான் ஆபத்தை உணர்த்த டிக்… டிக்… என ஓசை எழுப்புமாம். ஆண் மான்களைவிடப் பெண் மான்கள் எழும்பும் ஓசைதான் பரவலாக ஒலுக்குமாம். அதனால் இப்பெயரை மான்கள் பெற்றன. கிழக்கு ஆப்பிரிக்காவில் இவை அதிகமாகக் காணப்படுகின்றன. இவை குட்டையான புற்கள் உள்ள பகுதிகளில் வாழ்கின்றன. இவையும் தாவர உண்ணிதான்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT