Published : 25 May 2022 06:13 PM
Last Updated : 25 May 2022 06:13 PM
‘சாக்கடல்’ என்று நாம் அழைத்தாலும் அது கடல் அல்ல. நான்கு பக்கங்களிலும் நிலத்தால் சூழப்பட்ட மிகப் பெரிய ஏரி. அதே போல இந்தக் கடலில் விழுந்தால் மூழ்க முடியாது. அதனால் உயிர் இழக்கும் வாய்ப்பும் இல்லை. பிறகு ஏன் ‘சாக்கடல்’ என்று பெயர்?
இந்த ஏரித் தண்ணீரின் தன்மைதான் ‘சாக்கடல்’ என்கிற பெயரைக் கொடுத்திருக்கிறது. சாக்கடல் தண்ணீரை எடுத்துச் சுவைத்தால் அளவுக்கு அதிகமாக உப்புக் கரிக்கும். கடல் நீரின் உப்பைவிட, சாக்கடல் நீரின் உப்பு சுமார் பத்து மடங்கு அதிகமாக இருக்கும். அதாவது ஒரு லிட்டர் கடல் நீரைக் காய்ச்சினால் 35 கிராம் உப்பு கிடைக்கும். ஒரு லிட்டர் சாக்கடல் நீரைக் காய்ச்சினால் 345 கிராம் உப்பு கிடைக்கும் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்!
கடலில் சோடியம் குளோரைடு உப்புதான் அதிகமாக இருக்கும். அதாவது 97 சதவீதம் சோடியம் குளோரைடும் 3 சதவீதம் இதர உப்புகளும் இருக்கும். சாக்கடலில் 30 சதவீதம் மட்டுமே சோடியம் குளோரைடு இருக்கிறது. பொட்டாஷியம், புரோமைன், கால்சியம் போன்ற பிற உப்புகள் அதிகமாக இருக்கின்றன.
அளவுக்கு அதிகமான உப்பு சாக்கடலில் இருப்பதால்தான் மீன், நண்டு, தவளை போன்ற நீர்வாழ் உயிரினங்களோ தாவரங்களோ அதில் வாழ முடியவில்லை. அதனால்தான் இந்தக் கடலை ‘சாக்கடல்’ என்று அழைக்கிறார்கள்.
சாக்கடலில் உப்பின் அடர்த்தி அதிகமாக இருப்பதால்தான் மனிதனால் இந்தக் கடலில் மிதக்க முடிகிறது. நீரில் மூழ்கிவிடுவோம் என்கிற பயமின்றி நீச்சல் தெரியாமலே மிதந்துகொண்டே படிக்கலாம். விளையாடலாம்.
அது சரி, சாக்கடலில் மட்டும் ஏன் இவ்வளவு உப்பு? சாக்கடலுக்கு வெளியிலிருந்து வரக்கூடிய நீரின் அளவு குறைவு. ஆனால், சாக்கடலில் இருந்து ஆவியாகும் நீரின் அளவு அதிகம். அதனால் அளவுக்கு அதிகமான உப்பு கடலில் தங்கிவிடுகிறது.
உயிரினங்களால் இந்தக் கடலில் வாழ முடியாவிட்டாலும் சுற்றுலாப் பயணிகள் இந்தக் கடலை நோக்கிப் படையெடுக்கிறார்கள். சாக்கடல் மண்ணுக்கு மருத்துவக்குணம் இருப்பதாக நம்புகிறார்கள்.
சாக்கடல் எங்கே இருக்கிறது? மேற்கு ஆசியாவில் இஸ்ரேல், ஜோர்டான் எல்லையில் அமைந்துள்ளது. சுமார் 50 கி.மீ. தூரத்துக்கு இந்தக் கடல் விரிந்து பரவியிருக்கிறது.
இதுபோன்ற பயனுள்ள கட்டுரைகளை தவறவிடாமல் படிக்க: https://www.hindutamil.in/web-subscription
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT