Published : 18 May 2016 11:57 AM
Last Updated : 18 May 2016 11:57 AM
வானத்தில் ஒரே ஒரு சிறு புள்ளி மட்டும் லேசாகக் கருத்திருந்தது. உலகத்தின் மொத்தப் பார்வையும் அதன்மேலே குவிந்திருந்தது. அன்றைக்கு எல்லா ஊடகங்களிலும் அதுதான் முக்கியச் செய்தியாக இருந்தது.
“பூமியில் மழை பெய்து சரியாக எட்டாண்டுகள், பதிமூன்று நாட்கள், நான்கு மணி நேரம், நாற்பதெட்டு விநாடிகள் ஆகிவிட்டன. பூமியிலுள்ள ஏரிகள், குளங்கள் என எங்கும் ஒரு சொட்டுத் தண்ணீர்கூடக் கிடையாது. இன்று வானம் அரிதாகக் கறுத்திருப்பதால், மழை பெய்யும் என்கிற எதிர்பார்ப்போடு எல்லா உயிர்களும் மண்ணில் காத்திருக்கின்றன. குடிக்க நீரில்லாமல் இதுவரை பலியானவர்கள் எண்ணிக்கை...”
தொலைக்காட்சியில் செய்தி வாசித்துக்கொண்டிருந்தவருக்கு நா வறண்டு, தொண்டை அடைத்தது. உலர்ந்த உதடுகள் ஒன்றோடொன்று ஒட்டிக்கொண்டன. அவரால் வாயைத் திறக்க முடியவில்லை. அதற்குமேல் செய்தியை வாசிக்க முடியாமல் திணறினார்.
வேகமாய் ஓடிவந்த நிலைய மருத்துவர், செய்தியாளரின் வாயில் மாத்திரை ஒன்றினை அவசரமாக திணித்தார்.
“ம்ம்... அப்படியே மாத்திரையை சப்புங்க. ம்ம்ம்...சீக்கிரம் சீக்கிரம்...” டாக்டர் சொல்லிக் கொண்டிருக்குபோதே, உதடுகள் உலர்ந்து, நாக்கில் துளியும் ஈரமின்றி, அப்படியே தலை சாய்த்து விழுந்தார் அவர்.
இப்படி தண்ணீர் இல்லாமல் செத்துப்போனவர்களின் எண்ணிக்கை தினமும் கூடிக்கொண்டே போனது.
பூமி எங்கும் வெயில் கொளுத்தியது. பயிர்கள் எல்லாம் காய்ந்து கருகிவிட்டன. பட்டுப் போன மரங்களின் கிளைகளெல்லாம் பாளம்பாளமாய் வெடித்திருந்தன. மருந்துக்குக்கூட ஒரு பச்சைச் செடியையோ, இலையையோ பார்க்க முடியவில்லை.
தாகத்தோடு வாயைத் திறந்தபடி வறண்டு கிடந்தன குளங்கள். குடிக்க நீர் தேடியலைந்து, எங்கும் ஒரு துளி நீர்க் கூடக் கிடைக்காமல் சோர்ந்து விழுந்து கிடந்தன பறவைகள்.
எங்கேயும் ஈரப்பதம் என்பதே இல்லை. குழந்தைகள் பலமாக சத்தம் போட்டு அழுதார்கள். ஆனால், ஒருவர் கண்ணிலும் சொட்டுக் கண்ணீர்க்கூட வரவேயில்லை.
வெயில் வெளுத்து வாங்கியது. ஆனால், யார் உடம்பிலும் ஒரு துளிகூட வியர்வை வடியவில்லை.
‘எல்லா மரத்தையும் வெட்டிச் சாய்க்காதீங்கன்னு சொன்னேனே, கேட்டீங்களா?’
‘மழை நீரைச் சேமிக்கணும்னு நாம எத்தனை பேரு அக்கறையோட சேமிச்சோம்?’
‘குளம், ஏரிகளைத் தூர் வாரி ஆழப்படுத்தமா அதையெல்லாம் குப்பையைப் போட்டு மூடிட்டு, எங்கப் பாத்தாலும் கட்டடமா கட்டுனீங்கள்ல, இப்ப வெறும் கான்கிரீட் வீடு குடிக்க தண்ணீர்க் கொடுக்குமா?’
‘நாம ஒரு செடியாவது நட்டோமா..? நாடே இப்படி பாலைவனமா மாறிப்போச்சே..!’
எங்கெங்கும் குரல்கள் எதிரொலித்தன.
திடீரென்று வானில் இடி இடித்தது. மேகங்கள் அங்குமிங்குமாய் கலைந்தோடின.
“இதுதான் நான் பூமிக்குத் தரும் கடைசிச் சொட்டு மழைத்துளி! முடிந்தால் இந்த ஒரு சொட்டு மழைத்துளியைச் சேமித்து உயிர் பிழைத்துக்கொள் ” என்றபடி, தன் கடைசிச் சொட்டு மழைத்துளியையும் பூமியில் சிந்திவிட்டுப் போனது வானம்.
“தண்ணீ...தண்ணீ...” என்கிற பெரும் அலறல் காதருகே எதிரொலித்தது.
திடுக்கிட்டு எழுந்தான் மாதவன். உடம்பெல்லாம் லேசாக நடுங்கியது.
‘அய்யோ… என்னது பகல் கனவா?’ என்று கையைக் கிள்ளிப் பார்த்துக்கொண்டான்.
“வலிக்கிது. ஆமா… நாம இதுவரை கண்டது வெறும் கனவுதான்!” என்று அவனுக்குள்ளேயே சொல்லிக்கொண்டான்.
நேற்றிரவு ஊருக்குப் போகும் முன் அம்மாவோடு நடந்த உரையாடல் மாதவனின் நினைவுக்கு வந்தது.
“ மாதவா, அம்மா ஊருக்குப் போறேன். வர ரெண்டு நாளாகும். தண்ணிக் குழாயெல்லாம் மறக்காம மூடி வை. தண்ணிய ஒழுக விட்டு வீணாக்காதே. தோட்டத்தில செடியெல்லாம் தண்ணீ இல்லாம காஞ்சுக் கிடக்கும். போயி கொஞ்சம் தண்ணீ விடுடா, சரியா?” என்றாள்.
“போம்மா, எனக்கு நிறைய வேலையிருக்கு. தோட்டத்துச் செடிக்கெல்லாம் என்னால தண்ணி விட முடியாது. நீ வந்ததும் சேர்த்து விட்டுக்க. அதுக்குள்ள எதுவும் செத்துடாது!” என்று அம்மாவிடம் மாதவன் ஒரேயடியாய் மறுத்துச் சொல்லிவிட்டான். அப்போது அம்மாவிடம் அப்படிப் பேசியது, இப்போது மனசை என்னவோ செய்தது.
“ச்சே… தண்ணிய வேஸ்ட் செய்யறது எவ்வளவு தப்பு. பாவம்… செடிகள்! அதுங்களுக்கும் தாகம் எடுக்கும்தானே..!”
பாத்ரூமிலிருந்து ‘சொட், சொட்’ என சத்தம் கேட்டது.
வேகமாய் எழுந்து போனான். பாத்ரூம் குழாயில் தண்ணீர் சொட்டிக்கொண்டிருந்தது. குழாயை நன்றாக மூடினான்.
வெளியே வந்த மாதவன், ஒரு வாளியை எடுத்தான். அதில், தண்ணீரைப் பிடித்தான்.
செடிகளுக்குத் தண்ணீர் விடும் ஆவலோடு தோட்டத்துக்குச் சென்றான் மாதவன்.
தோட்டத்துக் காற்று சிலுசிலுவென்று மாதவனின் முகத்தில் வீசியபடி வரவேற்றது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT