Published : 18 May 2022 07:55 AM
Last Updated : 18 May 2022 07:55 AM
நீண்ட நேரம் கை விரல்களும் கால் விரல்களும் தண்ணீருக்குள் இருந்தால் சுருங்கிவிடுகின்றனவே ஏன், டிங்கு?
- அனஃபா ஜகபர், 10-ம் வகுப்பு, பொன்ஜெஸ்லி பப்ளிக் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி, நாகர்கோவில்.
கைகளும் கால்களும் கடினமான வேலைகளைச் செய்யக்கூடியவை. அதனால் கை, கால்களைப் பாதுகாப்பதற்காகத் தோலில் சீபம் என்கிற எண்ணெய் சுரக்கிறது. சாதாரணமாகத் தண்ணீரில் கைகளை வைத்து வேலை செய்யும்போது சீபம் சுரந்து, தோலுக்குள் தண்ணீர் செல்லாமல் பாதுகாத்துவிடுகிறது. அதிக நேரம் தண்ணீரில் கைகள் இருக்கும்போது, அந்த அளவுக்குச் சீபம் சுரக்காது. அதனால், தண்ணீர் தோலுக்குள் நுழைந்துவிடுகிறது. கை, கால்களில் சுருக்கம் தோன்றிவிடுகிறது. தண்ணீரைவிட்டு விரல்களை எடுத்த சிறிது நேரத்தில், மீண்டும் சீபம் சுரந்து விரல்கள் இயல்பு நிலைக்குத் திரும்பிவிடும், அனஃபா ஜகபர்.
துறவிகள் ஏன் காவி நிற உடைகளை அணிகிறார்கள், டிங்கு?
- ஜி. இனியா, 5-ம் வகுப்பு, தி விஜய் மில்லினியம் மேல்நிலைப் பள்ளி, கிருஷ்ணகிரி.
அந்தக் காலத்தில் துறவிகள் பெரும்பாலும் காடுகளிலும் நீர்நிலைகளுக்கு அருகிலும்தான் வசித்தார்கள். இயற்கையோடு இணைந்து வாழ்க்கையை நடத்தினார்கள். அப்போது வெள்ளையைவிட, காவி நிறம் அவர்களுக்கு வசதியாக இருந்தது. அதற்குப் பிறகு ஒவ்வொரு நிறத்துக்கும் ஒவ்வொரு காரணத்தை மக்கள் உருவாக்கினார்கள். அதில் காவி நிறம் தியாகத்தைக் குறிப்பதாகச் சொல்லப்பட்டது. ஆசை, உறவு என அனைத்தையும் துறந்தவர்கள் துறவிகள் என்பதைக் காண்பிக்கும் விதத்தில் காவி நிற உடைகளையே இன்று வரை அணிந்துகொண்டிருக்கிறார்கள், இனியா.
நம் உடலில் வியர்வை ஏன் உருவாகிறது, டிங்கு?
- க. மணிகண்டன், 8-ம் வகுப்பு, பிச்சாண்டி நடுநிலைப் பள்ளி, போடிநாயக்கனூர், தேனி.
மனிதர்களாகிய நாம், வெப்பரத்தப் பிராணிகள் என்று படித்திருப்பீர்கள். அதாவது, வெளியில் வெப்பநிலை எப்படி இருந்தாலும் நம் உடலில் வெப்பநிலை ஒரே சீராக வைத்துக்கொள்ளக்கூடிய தகவமைப்பை இயற்கை வழங்கியிருக்கிறது. நம் உடலின் வெப்பநிலை 98.6 ஃபாரன்ஹீட். வெளியில் வெப்பநிலை அதிகரிக்கும்போது நம் உடல் வெப்பநிலையும் அதிகரிக்க ஆரம்பிக்கும்.
உடனே, நம் தோலில் உள்ள வியர்வைச் சுரப்பிகள் வேலை செய்ய ஆரம்பித்துவிடும். வியர்வையை உற்பத்தி செய்து, தோலுக்கு அனுப்பும். தோல், நீரை ஆவியாக மாற்ற வெப்பம் தேவை அல்லவா? நம் உடலிலிருந்து வெப்பத்தை எடுத்து, நீரை ஆவியாக்கும். அப்போது உடல் வெப்பநிலை இயல்பை நோக்கிக் குறைய ஆரம்பித்துவிடும். அதே போல நாம் ஓடும்போது, உடற்பயிற்சியின்போது, கடினமான வேலைகளைச் செய்யும்போது உடலில் உள்ள உறுப்புகள் வேகமாக இயங்க ஆரம்பிக்கும். அப்போது அவற்றுக்கு அதிகமான ஆற்றல் தேவைப்படும்.
நாம் சாப்பிடும் உணவிலிருக்கும் சத்துகளை எரித்து, ஆற்றலாக மாற்றும். அப்போது உடல் வெப்பநிலை அதிகரிக்கும். அதைக் குறைப்பதற்காக வியர்வைச் சுரப்பிகள் வியர்வையை உற்பத்தி செய்யும். வியர்வை ஆவியாகி, உடல் வெப்பநிலை இயல்புக்குத் திரும்பும். வியர்வை மூலம் நம் உடலிலுள்ள கழிவுகளும் வெளியேறுகின்றன. மழைக்காலத்தில் வியர்வை சுரக்காததால், சிறுநீரகம் மூலம் கழிவுகள் வெளியேறுகின்றன. வெயில் காலத்தில் சிறுநீரகத்துடன் வியர்வையும் சேர்ந்து கழிவுகளை வெளியேற்றுகிறது, மணிகண்டன்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT