Last Updated : 11 May, 2016 11:52 AM

 

Published : 11 May 2016 11:52 AM
Last Updated : 11 May 2016 11:52 AM

நீந்தும் சந்தைகள்!

பொருட்கள் வாங்க வேண்டும் என்றால் கடைகளைத் தேடி நாம்தான் செல்ல வேண்டும் இல்லையா? ஆனால், உலகின் சில இடங்களில் கடைகள் நம்மைத் தேடி வருகின்றன! இவை தண்ணீரில் மிதக்கக்கூடிய படகுக் கடைகள். தென்கிழக்கு ஆசிய நாடுகளான தாய்லாந்து, இந்தோனேஷியா, வியட்நாம் போன்ற நாடுகளில் மிதக்கும் சந்தைகள் அதிக அளவில் உள்ளன.

தண்ணீர் போக்குவரத்து இந்த நாடுகளில் முக்கியப் பங்கு வகிக்கிறது. தீவுகளாகவோ, ஆற்றுக் கழிமுகங்களாகவோ இந்த இடங்கள் அமைந்திருக்கின்றன. ஒரு காலத்தில் நீர் நிறைந்த அடர்த்தியான காடுகளைக் கொண்ட இடங்களாக இவை இருந்துள்ளன. காலப் போக்கில் மனிதர்கள் தங்கள் தேவைக்கு ஏற்ப நீர்நிலைகளைப் பயன்படுத்த ஆரம்பித்துவிட்டனர். தண்ணீர் போக்குவரத்து மூலமே சுற்றிலும் உள்ள நகரங்களின் சாலைகளை அடைகிறார்கள்.

நீர்நிலைகளுக்கு அருகே வசிக்கும் விவசாயிகள் இன்றும் தங்களின் பொருட்களைப் படகுகளில் எடுத்துச் சென்றுதான் விற்கிறார்கள். விவசாயிகள் தாங்கள் விளைவித்த பொருட்களைப் படகுகளில் ஏற்றிக்கொண்டு சிறிய துறைமுகங்களில் காத்திருக்கும் மொத்த வியாபாரிகளிடம் விற்கிறார்கள். மொத்த வியாபாரிகள் அந்தப் பொருட்களைப் பிரித்து, சில்லறை வியாபாரிகளிடம்

விற்பனை செய்கிறார்கள். அவர்கள் நகரின் பல பகுதிகளுக்கு எடுத்துச் செல்கிறார்கள்.

மிதக்கும் சந்தைகள் உலகம் முழுவதும் சுற்றுலாப் பயணிகளைக் கவர்கின்றன. அதனால் சுற்றுலாப் பயணிகளிடம் விற்பனை செய்வதற்காக எராளமான படகுக் கடைகள் தண்ணீரில் மிதந்தபடியே இருக்கின்றன. சிறிய படகுகளில் அடுப்பை வைத்து சுடச்சுட

உணவுகள், சூப், தேநீர்கூட விற்கிறார்கள். நூற்றுக்கணக்கான படகுகளில் பல வண்ணப் பொருட்களை, கரையில் நின்று பார்த்தால் பிரமாதமாக இருக்கும்.

அதிக அளவில் மிதக்கும் சந்தைகளைக் கொண்ட நாடு தாய்லாந்து. புகழ்பெற்ற மிதக்கும் சந்தைகளில் ஒன்று பாங்காக்கில் இருக்கும் டாம்னோயன் சடுவாக். இங்கே படகுகளின் எண்ணிக்கையும் அதிகம். மக்களின் எண்ணிக்கையும் அதிகம். இந்தச் சந்தை அதிகாலையிலேயே ஆரம்பித்துவிடும். மதியத்துடன் முடிந்துவிடும். பாங்காக்கில் உள்ள அம்பவா மிதக்கும் சந்தை மிகப் பெரிய சந்தை அல்ல.

இது மாலையில் மட்டும் இயங்கும் சந்தை. இப்படி இன்னும் சில சந்தைகள் தாய்லாந்தில் உள்ளன.

வியட்நாமின் மிகப் பெரிய மிதக்கும் சந்தை மெகோங் டெல்டா. தினமும் நூற்றுக்கணக்கான படகுகள் சுறுசுறுப்பாக இயங்கிக்கொண்டிருக்கும். இதே போல காய் பி மிதக்கும் சந்தையும் புகழ்பெற்றது.

இந்தியாவிலும் மிதக்கும் சந்தை எழில்கொஞ்சும் நகரின் தால் ஏரியில் இயங்கி வருகிறது. ஏரியில் மிதக்கும் படகு வீடுகளை நோக்கி, படகுகளில் பொருட்களைக் கொண்டு வருகிறார்கள். ஏராளமான

பொருட்கள் இங்கு கிடைக்கின்றன. ஜில்லென்ற குளிரையும் தூரத்தில் பனி போர்த்திய மலைகளையும் ரசித்தபடியே பொருட்களை வாங்கலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x