Published : 02 May 2022 02:32 PM
Last Updated : 02 May 2022 02:32 PM

மலைநெல்லியும் குட்டிப் பிசாசும்! - வனிதாமணி

என் குழந்தைப் பருவம் முழுவதுமே சுவாரசியங்களால் நிரம்பியது. அதில் நண்பர்களோடு பள்ளிக்கூடத்திலிருந்து மாலை வீடு திரும்பும் நேரம் இருக்கிறதே... அடடா! வாழ்க்கையில் அதீத அற்புதங்களும் மாயாஜாலங்களும் ஆச்சரியங்களும் நடந்த காலம். இலக்குமி ஆலை நடுநிலைப் பள்ளியில் மணி அடித்த உடன் வகுப்பறையிலிருந்து எடுக்கும் ஓட்டம் கொடிக்கம்பம், சவுக்குச் செடிகள் தாண்டி வலது பக்கம் திரும்பிய உடன் சட்டென்று நின்றுவிடும். பிள்ளையார் கோவிலில் உள்ள அத்தி மரத்திலிருந்து கீழே விழுந்து கிடக்கும் மிதிபடாத அத்திப் பழங்களை எடுப்போம்.

வட்டமிட்ட படம் வனிதாமணி

திடீரென்று, ‘மலை நெல்லிக்கா கொண்டு வந்தேனே...’ என்று ஒரு குரல் கேட்கும். அத்திப் பழங்களை வீசியெறிந்துவிட்டு, நெல்லிக்காய் கொண்டு வந்தவனைச் (ளை) சுற்றிக் கூட்டம் கூடும். காக்கா கடியாகக் கடித்து அல்லது நகத்தில் கிள்ளியெடுத்து அனைவருக்கும் பங்கு வைக்கும்போது, சிறு சண்டைகள் தோன்றி மறையும்.

தோழி ஒருத்தி நண்பனின் காதில் ரகசியம் சொல்லி, ‘யாருகிட்டயுமே சொல்லக் கூடாது’ என்று சத்தியம் வாங்குவாள். கூட்டம் முழுவதும் ரகசியம் சொன்னவளை விட்டுவிட்டு, ரகசியம் கேட்டவனைப் படுத்தியெடுக்கும். அப்படியே பையைத் தோளிலும் தலையிலும் வயிற்றுலுமாக, ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமாகக் கட்டிக்கொண்டு நடக்க ஆரம்பிப்போம்.

அப்போது, ‘ராமாத்தா கடைக்குப் போலாமா?’ என்று ஒருத்தி கேட்பாள். அனைவரும் ஒரே குரலில் காசு என்று கேட்டதும் அவள் இரண்டு பத்து பைசாக்களையும் ஓர் இருபது பைசாவையும் ஓர் ஐந்து பைசாவையும் எடுப்பாள். அடுத்த சில நிமிடங்களில் காசுகள் எல்லாம் இலந்தைப்பொடி, தேன்மிட்டாய், கமர்கட், குச்சி மிட்டாய்களாக மாறியிருக்கும். தாறுமாறாகப் பங்கு பிரித்துத் தின்றுகொண்டே நடக்கும்போதுதான் யாரோ ஒருவருக்கு ஞாபகம் வரும், இந்த இடத்தில் குட்டிப் பிசாசு ஒன்று இருப்பதாக... அவ்வளவுதான் ஓட்டம் பிடிப்போம்.

அடுத்து நாவல் மரத்தடிக்குச் செல்வோம். கீழே கிடக்கும் நாவல் பழங்களைச் சட்டையில் துடைத்துவிட்டுத் தின்போம். வழியில் இருக்கும் வீடுகளில் உள்ள நெல்லி, சீனிப்புளியங்காய் (கோணப்புளியங்கா) மரங்களை நோட்டம் விடுவோம். சிலர் காவல் காக்க, சிலர் மரத்தில் ஏறிப் பழங்களைப் பறிப்போம்.

இந்த மகிழ்ச்சிக்கு இடையில் திடீரென்று ஒருவருக்கு வீட்டு நினைவு வந்து ஓட ஆரம்பித்தால், அத்தனை பேரும் அவரவர் வீடு நோக்கி ஓடிவிடுவோம். வீட்டுக்குச் சென்றாலும் உள்ளே போக மாட்டேன். வாசலிலிருந்து பையை உள்ளே விட்டெறிவேன். அது மிகச் சரியாகக் கட்டிலுக்கு அருகில் போய் நிற்கும். ‘அம்மா, விளையாடப் போயிட்டு வர்றேன்’ என்று சொல்லிவிட்டு, பதிலுக்குக் காத்திருக்காமல் ஓடிவிடுவேன். அடுத்தடுத்த தெருக்களில் உள்ள பிள்ளைகள் எல்லோரும் கூடுவோம். கண்ணாமூச்சியில் ஆரம்பித்து கபடி, பம்பரம், நொண்டி, சைக்கிளில் குரங்கு பெடல் என வரிசையாக விளையாடி, இறுதியில் ‘ஒளிஞ்சு விளையாட்டு’க்கு வந்து சேர்வோம்.

எங்கள் ஊரான இலக்குமி மில்ஸில் வீடுகள் வரிசையாக அமைந்திருக்கும். ஒவ்வொரு வீட்டையும் ஒவ்வொரு வீதியையும் சுற்றிப் பெரிய இடைவெளி இருக்கும். அதில் ஓடி ஒளிந்து விளையாட வசதியாக இருக்கும். இருட்டும்போதுதான் கூடடையும் பறவைபோல் வீட்டுக்குத் திரும்பும் உணர்வு மேலெழுந்து கலைந்து செல்வோம்.

அன்று பங்கு போட்டுத் திங்கும்போது நோய்த்தொற்று பற்றி எல்லாம் நாங்கள் அறிந்திருக்கவே இல்லை. மண்ணில் கிடந்த நாவல் பழங்களையும் நெல்லிக்காய்களையும் துடைத்துத் தின்றபோது, சுத்தம் பற்றித் தெரிந்திருக்கவே இல்லை. சைக்கிளில் மூன்று, நான்கு பேர் எனச் சர்வசாதரணமாகப் போவோம். பேச்சும் சிரிப்பும் சண்டையும் ரகசியங்களும் சமாதானங்களுமாக ஒவ்வொரு பொழுதும் சுவாரசியாமாகவே கழிந்தது. இன்று கடைகளில் அழகாக அடுக்கி வைத்திருக்கும் நெல்லிகனிகள் மீது எனக்கு ஈர்ப்பே இல்லை. மாறாக எங்கேனும் நெல்லிக்காய்கள் தொங்கும் மரங்களைப் பார்த்தால் ஏறிப் பறிக்கலாமா என்று மனம் பரபரக்கும்.

வனிதாமணி, கதைசொல்லி, கதைக்களம்

இதுபோன்ற பயனுள்ள கட்டுரைகளை தவறவிடாமல் படிக்க: https://www.hindutamil.in/web-subscription

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x