Published : 02 May 2022 01:51 PM
Last Updated : 02 May 2022 01:51 PM
கலரும் சுவையும் மிகுந்த ஃபலூடா ஐஸ்கிரீம் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள், அதைச் சுவைக்கவும் விரும்புவீர்கள். சரி, ஃபெலூடா பற்றித் தெரியுமா? இரண்டுக்கும் ஓர் எழுத்துதான் வித்தியாசம் என்று சொல்லக்கூடாது.
ஃபெலூடா, உலகப் புகழ்பெற்ற வங்கத் திரைப்பட மேதை சத்யஜித் ராய் உருவாக்கிய ஒரு துப்பறியும் கதாபாத்திரம். சத்யஜித் ராய்க்குத் துப்பறியும் கதைகளில் ஆர்வம் ரொம்ப அதிகம். உலகப் புகழ்பெற்ற துப்பறியும் நிபுணர் ஷெர்லாக் ஹோம்ஸ் துப்பறியும் கதைகள் அனைத்தையும், பள்ளி நாட்களிலேயே அவர் வாசித்து முடித்துவிட்டாராம். ராய் வளர்ந்து பெரியவர் ஆன பிறகு, துப்பறியும் கதைகளை எழுத ஆரம்பித்தார். ஷெர்லாக் ஹோம்ஸால் உத்வேகம் பெற்று ஃபெலூடா கதாபாத்திரத்தையும், ஷெர்லாக்குக்கு உதவும் டாக்டர் வாட்சனைப் போல தாப்ஷீ கதாபாத்திரத்தையும் அவர் உருவாக்கினார். தனியார் துப்பறியும் நிபுணர்களுக்கு ஷெர்லாக் ஹோம்ஸ்தான் குரு என்று ஃபெலூடா கதாபாத்திரமே ஒரு கதையில் சொல்கிறது.
குழந்தைகள் இதழ்
ராயின் தாத்தா உபேந்திர கிஷோர் ராய் சௌத்ரி, சந்தேஷ் என்ற குழந்தைகள் இதழைத் தொடங்கி நடத்திவந்தார். சத்யஜித் ராய் ஒரு பக்கம் உலகப் புகழ்பெற்ற திரைப்படங்களை இயக்கி வந்த அதேநேரம், இடையில் நின்றுபோன சந்தேஷ் இதழை மீண்டும் தொடங்கி, அதற்கு ஆசிரியராகவும் செயல்பட்டுவந்தார். அந்த இதழில் 1965-ல் அவர் அறிமுகப்படுத்திய கதாபாத்திரம்தான் ஃபெலூடா. ‘டார்ஜீலிங்கில் ஓர் அபாயம்' என்பதுதான் முதல் கதை. அந்த ஒரு கதையோடு ஃபெலூடா நின்றுபோகவில்லை. முதலில் கதைகளாகவும் பிறகு நாவல்களாகவும் வெளிவந்து புகழ்பெற்றன ஃபெலூடா துப்பறிந்த பல கதைகள். பிறகு அந்தக் கதைகள் திரைப்படங்களாகவும், தொலைக்காட்சித் தொடராகவும் வந்திருக்கின்றன. ஃபெலூடா துப்பறியும் சோனார் கெல்லா (1974), ஜொய் பாபா ஃபெலுநாத் (1978) ஆகிய இரண்டு குழந்தைகள் சினிமாவை சத்யஜித் ராயே எடுத்துள்ளார்.
யார் இந்த ஃபெலூடா?
கொல்கத்தாவில் வாழ்ந்ததாகக் கூறப்படும் ஃபெலூடாவின் உண்மையான பெயர் பிரதோஷ் சந்திர மித்ரா. ஆறடி 2 அங்குல உயரம், தடகள வீரரைப் போன்ற உடல், தற்காப்புக் கலைகளை அறிந்தவர். ஆனால், எந்தக் கதையிலும் உடல் வலு, ஆயுதங்கள் மூலம் அல்லாமல் தனது பகுத்தறியும் திறன், உற்றுநோக்கும் திறன் மூலமே துப்புத்துலக்கி பிரச்சினைக்குத் தீர்வு கண்டுபிடிப்பதே ஃபெலூடாவின் தனித்திறமை. அவரிடம் இருக்கும் கைத்துப்பாக்கியைச் சுடுவதற்காக அவர் பயன்படுத்துவதே இல்லை. அது மட்டுமில்லை, தனது புத்திசாலித்தனத்துக்கு வேலை இருந்தால்தான், ஒரு துப்பறியும் வழக்கையே அவர் எடுத்துக்கொள்வார். கிளைமேக்ஸ் காட்சிகளில் தனது பேச்சுத்திறமை மூலம் குற்றவாளியை மயக்கி, குற்றத்தை ஒப்புக்கொள்ளச் செய்துவிடுவார்.
துப்பறியும் சிறுவன்
சரி, இந்தக் கதைகளில் எல்லாம் ஃபெலூடா மட்டுமே துப்பறிந்துகொண்டிருந்தால் போரடிக்காதா? ஃபெலூடாவின் உறவுக்காரச் சிறுவன் தபேஷும் அவருடன் இணைந்து துப்பறிவான். தபேஷை ஃபெலூடா செல்லமாக தாப்ஷீ என்றுதான் அழைப்பார். துப்பறியும்போது தபேஷ் சொல்லும் யோசனைகளை அவர் கேட்டுக்கொள்வார். இந்த தாப்ஷீதான் கதையை நமக்குச் சொல்லும் கதாபாத்திரமாக இருப்பான்.
‘இதுபோன்ற பயனுள்ள கட்டுரைகளை தவறவிடாமல் படிக்க': https://www.hindutamil.in/web-subscription
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment