Last Updated : 06 Apr, 2016 10:38 AM

 

Published : 06 Apr 2016 10:38 AM
Last Updated : 06 Apr 2016 10:38 AM

சித்திரக் கதை: குட்டி ஆமையும் குகை அரக்கர்களும்

அந்தக் கடற்கரையில் அம்மா ஆமையோடு சேர்ந்து நீந்திக்கொண்டிருந்தது குட்டி ஆமை அம்மு. உற்சாகத்தில் நீந்தி நீந்தி அம்மாவிடமிருந்து சற்று தூரத்துக்கு வந்துவிட்டது. அப்போது எதிர்பாராதவிதமாக புயல் காற்று வீசத் தொடங்கியது.

புயல் காற்றால் கடலில் பெரிய பெரிய அலைகள் எழும்பின. அந்த அலைகள் குட்டி ஆமை அம்முவை இழுத்துச் சென்றன. அம்மு அங்கும் இங்கும் தன் அம்மாவைத் தேடியது. கண்ணுக்கெட்டிய தூரம் வரை அம்மாவைக் காணவில்லை. எப்படியாவது கண்டுபிடித்துவிடலாம் என்ற நம்பிக்கையில் அது தொடர்ந்து நீந்திக் கொண்டிருந்தது. ஆனால், அம்மாவைக் கண்டுபிடிக்கவே முடியவில்லை.

தொடர்ந்து நீந்திக்கொண்டிருந்த அம்மு ஆமை, அலைகளில் சிக்கி ஒரு தீவில் கரை ஒதுங்கியது. அது ஒரு குட்டித் தீவு. மூன்று பக்கங்களிலும் கடலால் சூழ்ந்திருந்த அந்தத் தீவின் ஒரு புறம் மட்டும் செங்குத்தான மலை தெரிந்தது. ஆனால் மலை முழுவதும் பனியால் உறைந்திருந்தது.

தொடர்ந்து நீந்தியதாலும், புயல் காற்றில் சிக்கியதாலும் அம்மு மிகவும் களைத்துப் போயிருந்தது. அதற்கு பசி வயிற்றைக் கிள்ளியது. தீவில் உணவு கிடைக்குமா என்று அங்கும் இங்கும் தேடிப் பார்த்தது. எங்குமே உணவு கிடைக்கவில்லை. தீவிலும் உணவில்லை. கடலில் நீந்த முடியாமல் அது ரொம்ப களைத்துப் போயிருந்தது. உணவு கிடைக்க ஒரே வழி, அது அந்த மலையின் வழியாகத் தரைப்பகுதிக்குப் போவதுதான்.

மலையோ செங்குத்து மலை. கூடவே மலை பனியால் உறைந்திருந்தது. இருந்தாலும் மனதில் தைரியத்தை வரவழைத்துக்கொண்ட அம்மு, மலையில் ஏற முயற்சித்தது. மலையில் ஏறஏற அது பனியில் சறுக்கிக் கீழே விழுந்தது. மீண்டும் மீண்டும் அது மலையில் ஏறிஏறி சறுக்கி கீழே விழுந்தது.

அப்போது திரும்பவும் சுழற்காற்று வீசத் தொடங்கியது. மலையில் உறைந்திருந்த பனிக்கட்டிகள் உடைந்து விழுந்தன. பனிக்கட்டிகள் உடைந்து விழுந்த இடத்தில் சிறிய குகை ஒன்று தெரிந்தது. குகைக்குள் கொஞ்சம் வெளிச்சமும் தெரிந்தது. குகையின் வழியே சென்றால் மலையின் மறுபுறத்திற்குப் போய்விடலாம் என்று அம்முவுக்குத் தோன்றியது.

மலையின் அந்தப் பக்கம் சென்றால் எப்படியும் சாப்பிட எதுவும் கிடைக்கும். சாப்பிட்டுப் பசி தீர்ந்தால், பிறகு அம்மாவை தேடிக் கண்டுபிடித்துவிடலாம் என்று நினைத்தபடியே அம்மு குகைக்குள் நுழைந்தது.

அவ்வளவுதான், மறுகணம் அம்முவின் இதயமே பயத்தால் உறைந்து போனது. குகையிலிருந்து பயங்கரமான சத்தம் கேட்டது. குகைக்குள் இரண்டு அரக்கர்கள் நின்றுகொண்டிருந்தார்கள்.

அரக்கர்களைப் பார்க்க பயங்கரமாக இருந்தார்கள். பனைமரம் அளவுக்கு உயரத்துக்கும், கறுப்பாகவும், பார்ப்பவர்களை பயமுறுத்தும் அளவுக்கு இருந்தார்கள். அம்முவுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. பசியால் ஏற்கெனவே அது சோர்வாக இருந்தது.

‘ஐயோ, குகையின் வழியே மலையின் அந்தப் பக்கம் போனால் சாப்பிட ஏதாவது கிடைக்கும் என்று நினைத்தேனே... ஆனால், குகையில் இரு அரக்கர்கள் சத்தம் போட்டப்படி நிற்கிறார்களே!’ என யோசித்துக்கொண்டே அம்மு தரையைப் பார்த்தது.

அம்முவுக்கு பயம் அதிகமானது. ஆமாம்! தரையெங்கும் இறந்துபோன பல விலங்குகளின் எலும்புகள் சிதறி கிடந்தன.

‘தன்னைப் போலவே இந்தக் குகைக்குள் நுழைந்த விலங்குகளை இந்த அரக்கர்கள் தின்றுவிட்டு எலும்புகளைப் போட்டிருக்கிறார்களோ? பெரிய விலங்குகளையே கொன்று தின்ற இந்த அரக்கர்கள், குட்டி ஆமையாகிய என்னைக் கொல்ல எவ்வளவு நேரமாகும்?’ என்று நினைத்த அம்மு, பேசாமல் திரும்பி தீவுக்கே போய்விடலாமா என்று யோசித்தது.

ஆனாலும், அதன் மனதில் வேறு ஒரு எண்ணமும் வந்தது. ‘தீவுக்குத் திரும்பிப் போனால் தின்ன எதுவும் கிடைக்கப்போவதில்லை. குகை வழியே போனால் அரக்கர்களிடம் மாட்டிக்கொள்வேன். அரக்கர்களின் கண்ணில் படாமல் அந்தப் பக்கம் போக முடியுமா என்று முயற்சி செய்து பார்த்தால் என்ன?’ என்று நினைத்தது அது.

ஒரு வழியாக மனதில் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு குகைக்குள் நடந்தது. அரக்கர்களின் உருவமும் அலறல் சத்தமும் அம்முவைப் பயமுறுத்தின. என்றாலும் அது தைரியமாக உள்ளே போனது.

குகைக்குள் பதுங்கி நடந்து, அரக்கர்களின் பக்கத்தில் அது போனது. அப்போது அம்மு கண்ட காட்சி அதற்கு ஆச்சரியத்தை உண்டாக்கியது.

அரக்கர்கள் என நினைத்து அம்மு பயந்தது, உண்மையில் அரக்கர்களே இல்லை. அவை குகைக்குள் ஒரே மாதிரியாக இருந்த இரண்டு கரடு முரடான பாறைகள்தான். அரக்கர்களின் சத்தம் என்று நினைத்தது, குகையின் மறுபுறத்தில் வீசிய காற்றால் ஏற்பட்ட சத்தம்தான்.

‘ஐயோ! இருளில் தெரிந்த இரண்டு பாறைகளின் நிழல் உருவத்தைப் பார்த்து அவற்றை அரக்கர்கள் என்று நினைத்துவிட்டேனே. காற்றில் வந்த சத்தத்தை அரக்கர்களின் அலறல் என்று நினைத்துவிட்டேனே. அப்படியானால், குகையின் வாசலில் கிடந்த விலங்குகளின் எலும்புகள் எப்படி வந்தன? ஒருவேளை திசை மாறி இங்கே வந்து பசியால் இறந்து போன விலங்குகள்போல’ என்று புரிந்து கொண்டது அம்மு.

இப்படியே நினைத்துக்கொண்டு அரக்கர்கள் போல இருந்த பாறைகளைக் கடந்து குகையின் வழியாக போய், மலையின் மறுபக்கத்துக்கு வந்து சேர்ந்தது அது.

அங்கே ஒரே ஆச்சரியம். மலையின் மறுபக்கத்தில் குட்டி ஆமைக்கு நிறைய உணவு இருந்தது. அது அவற்றைத் தின்று பசியாறியது. அதன் களைப்பும் நீங்கியது. பிறகு அது தொடர்ந்து பயணித்து, தன் அம்மா இருந்த இடத்துக்குப் போனது. குட்டி ஆமை அம்முவைக் கண்ட அதன் அம்மா சந்தோஷத்தில் கட்டியணைத்துக்கொண்டது.

நம்மை பயமுறுத்தும் பல துன்பங்கள் உண்மையில் துன்பங்களே அல்ல. அவை நாமே மனதில் கற்பனை செய்துக்கொள்ளும் துன்பம்தான். தூரத்தில் நின்று பார்த்தால் அவை துன்பமாகவே தெரியும். குட்டி ஆமை அம்முவைப் போல, அவற்றை நெருங்கிப் பார்த்தால், அவை நம் மனதின் பயம்தான் என்று புரிந்துகொள்வோம். எளிதாக அவற்றைக் கடந்து போய்விடலாம். சரிதானே குழந்தைகளே!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x