Published : 09 Mar 2022 06:00 AM
Last Updated : 09 Mar 2022 06:00 AM
ஃபிடிப்பஸ் ஆடாக்ஸ் வட அமெரிக்காவில் பொதுவாகக் காணப்படும் குதிக்கும் சிலந்தி (Jumping spider). இந்த வகை சிலந்திகள் வலை பின்னுவதில்லை. இரையைப் பிடிக்கவும் எதிரியிடமிருந்து தப்பவும் குதித்துச் செல்லும்.
குதிக்கும் சிலந்திக்கு உடல் முழுவதும் கண்கள். அதாவது நான்கு ஜோடி கண்களை உடையது. எட்டுக் கண்களும் வெவ்வேறு காட்சிகளைக் காண்கின்றன. எனினும் அவை ஒன்றுடன் ஒன்று இணைந்து கூட்டாகச் செயல்படுகின்றன என்கிறார் மாசசூசெட்ஸ் பல்கலைக்கழக ஆய்வாளர் எலிசபெத் ஜேக்கப்.
பூச்சிகளுக்குக் கூட்டுக் கண்கள். நூற்றுக்கணக்கான லென்ஸ்களில் இருந்து காட்சியைப் பெற்று, அந்தக் காட்சிகளை இணைத்துப் பார்வையைப் பெறுகின்றன. மனிதர்கள், விலங்குகளின் கண்கள் கேமரா அமைப்பு கொண்டவை. ஒரே ஒரு லென்ஸ் கொண்டு ஒளிக்கற்றைகளை விழித்திரையில் குவித்து, பார்வை பெறுகின்றன. குதிக்கும் சிலந்தியின் நான்கு ஜோடி கண்களும் கேமரா வகை கண்கள் தாம்.
நான்கு ஜோடி கண்களும் ஒரே தன்மை கொண்டவை அல்ல. தலையின் முன்புறம் துருத்திக்கொண்டிருக்கும் இரண்டு கண்கள் தாம் முதன்மைக் கண்கள். இந்தக் கண்களால் நிறங்களைக் காண முடியும். மிகவும் கூர்மையான பார்வை கொண்டவை. சிலந்தியின் உடல் 2 முதல் 20 மில்லிமீட்டர்கள் தாம். எனினும் இவற்றின் கண்களின் பார்வைக் கூர்மை புறா, யானை, பூனைகளின் கண்களை ஒத்து உள்ளது. துல்லியமாக இரையைப் பிடிக்கவும் எதிரியிடமிருந்து தப்பி ஓடவும் இந்த முதன்மைக் கண்கள் தாம் உதவுகின்றன.
குதிக்கும் சிலந்தியின் முதன்மைக் கண்களின் மையத்தில் தான் கூர் பார்வைத் திறன் உள்ளது. விளிம்புப் பகுதியில் குவியாத பெரிஃபெரல் பார்வை எனப்படும் புறப் பார்வை மட்டுமே உள்ளது. எனவே இரண்டும் இணைந்து வேலை செய்யும்போது சிலந்தியின் முன்புறம் ‘X’ வடிவத்தில் ஒரு சிறு பகுதி மட்டுமே வண்ணப் பார்வையோடு உயர் தெளிவுத்திறன் கொண்டதாக இருக்கும். அதைச் சுற்றியுள்ள பகுதி குறைவான கூர்மை கொண்ட பார்வை மட்டுமே தரும்.
கவனம் தேவைப்படும் இடத்தை நோக்கி உயர் தெளிவுத்திறன் கொண்ட பகுதி பார்வை குவிய, அதனைச் சுற்றிய பகுதி கறுப்பு வெள்ளையில் மந்தமான காட்சியாகப் புலப்படும். மற்ற மூன்று ஜோடிகளும் குறைந்த தெளிவுத்திறன் கொண்ட கண்கள் தாம். பின்புறமாக உள்ள கண்கள் தலைக்குப் பின்னே உள்ள காட்சிகளைக் குறித்து தகவல் தரும். குதிக்கும் சிலந்தியால் எட்டுக் கண்களைக் கொண்டு கிட்டத்தட்ட 360 டிகிரி காட்சியைக் காண முடியும்.
ஆப்தல்மாஸ்கோபி எனும் விழித்திரை கருவி கொண்டு குதிக்கும் சிலந்தியின் கண்களை ஆய்வு செய்தார் ஜேக்கப். இந்த ஜோடி கண்கள் மீது திரை போட்டு மூடியபோது, முதன்மைக் கண்கள் எதன் மீது கவனம் குவிப்பது என தெரியாமல் அங்கும் இங்கும் அலைவதைக் கண்டார். முன்னந்தலையில் உள்ள இரண்டு துணைக் கண்கள் நகரும் பொருள்களைக் கவனித்து, முதன்மைக் கண்கள் எதை நோக்கிக் கவனம் செலுத்த வேண்டும் என வழிநடத்தின.
குதிக்கும் சிலந்திக்கு விருப்ப உணவான சுவர்க்கோழி அல்லது சில்வண்டு பூச்சி வீடியோ திரையில் காட்டப்பட்டதும் அந்தத் திசை நோக்கி முதன்மைக் கண்களின் பார்வை குவிந்தது. துணைக் கண்களில் எந்தப் பொருளின் காட்சிப் படும்போது முதன்மைக் கண்களின் கவனம் திசை மாறுகிறது என ஆய்வு செய்தார். துணைக் கண்களில் உணவாகக்கூடிய வேறு ஒரு பூச்சியின் காட்சி தெரிந்தால், கவனம் திரும்புமா? துணைக் கண்களில் காட்சிப் படுமாறு சில்வண்டை வைத்தபோது கவனம் மாறவில்லை.
முட்டை வடிவம் கொண்ட ஒரு பொருளைக் குதிக்கும் சிலந்திக்கு அருகில் கொண்டு சென்றபோது, முதன்மைக் கண்களின் கவனம் சட்டென்று உணவிலிருந்து இந்தப் பொருள் நோக்கித் திரும்பிவிட்டது. அதாவது உருவம் பெரிதாகும்போது ஏதோ ஒன்று தன்னைத் தாக்க வருகிறது என்று நினைக்கிறது என அறிந்து கொண்டார்.
குதிக்கும் சிலந்தியின் முதன்மைக் கண்கள் இரையை நோக்கிக் கவனத்தைக் குவிக்கும். மற்ற கண்கள் பூச்சியைச் சுற்றியுள்ள பகுதியில் ஏற்படும் மாற்றங்களைக் கண்காணித்தபடி இருக்கும். ஏதாவது ஆபத்தை உணர்ந்தால், எச்சரிக்கை உணர்வில் கவனத்தைத் திருப்புகிறது. அதாவது முதன்மைக் கண் அந்தக் கணத்தில் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றின் மீது கவனம் செலுத்த, மற்ற கண்கள் குறைவான முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்களைக் கவனித்து, புறக்கணிக்கின்றன என்கிறார் ஜேக்கப்.
கட்டுரையாளர், விஞ்ஞானி தொடர்புக்கு: tvv123@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT