Published : 20 Apr 2016 11:44 AM
Last Updated : 20 Apr 2016 11:44 AM
“வணக்கம் புத்தகப் புழு. நீ சொன்ன ஸாவுஷ்கின் கதையை அப்பாவிடம் கொடுத்துப் படித்துக் காட்டச் சொன்னேன். மிகவும் நன்றாக இருந்தது.”
“ஓ! நான் சொன்னதை நிஜமாவே செய்து காட்டிட்டியா நேயா, நல்லது.”
“ஆமா, இந்த வாரம் என்ன புத்தகத்தைப் பத்தி சொல்லப் போற?”
“அது வந்து, அது வந்து ரகசியம்.”
“அட! இதிலென்ன ரகசியம். எப்படியும் நல்ல புத்தகத்தை பத்தித்தான் சொல்லப் போற. அதுவும் இந்த வாரம் உலகப் புத்தக நாள் வேற வருதே!”
“சரியா சொல்லிட்ட நேயா. ஏப்ரல் 23-ம் தேதி உலகப் புத்தக நாள். அதையொட்டி நான் வாசிச்ச முக்கியமான புத்தகத்தைப் பத்தித்தான் இந்த வாரம் சொல்லப் போறேன். உலகக் குழந்தை இலக்கியங்களை எல்லாம் தமிழுக்குக் கொண்டுவரும் எழுத்தாளர் யூமா. வாசுகி மொழிபெயர்த்த புத்தகம் அது. அதில் இன்னொரு முக்கியமான விஷயமும் இருக்கு. அது உன்னைப் போலவே, புத்தகங்களை நேசிக்கிற ஒரு குட்டிப் பெண்ணைப் பற்றிய கதையும்கூட”
“போன வாரம் என்னையப்போலவே, இயற்கையின் மீது ஆர்வம் கொண்ட ஸாவுஷ்கினின் கதையைச் சொன்ன, இந்த வாரம் புத்தகங்களை நேசிக்கும் குட்டிப் பெண்ணின் கதையா? சீக்கிரம் சொல்லேன்.”
“இது ஆலியா முகம்மத் பேக் என்ற பெண் சம்பந்தப்பட்ட நிஜ சம்பவத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு கதை. இராக் பத்தி கேள்விப்பட்டிருக்கேல்ல?”
“சதாம் உசே அதிபரா இருந்தாரே, அந்த இராக்தானே”
“ஆமாம். இன்னைக்கு சதாம் உசேன் பேர் மூலமாதான் இராக் உங்களுக்கெல்லாம் தெரிகிறது. ஆனால், உலகப் புகழ்பெற்ற மெசபடோமிய நாகரிகம் தழைத்த பகுதி அது.”
“உலகின் தொன்மையான நாகரிகங்களில் அதுவும் ஒண்ணுன்னு படிச்சிருக்கேன்.”
“போன நூற்றாண்டில் கச்சா எண்ணெய் வளத்துக்காகவும் தொடர்ச்சியான போருக்காகவும் இராக் பிரபலமாச்சு.”
“சரி, இதுதான் கதையா?”
“இல்ல. இதெல்லாம் வரலாறு.”
“வரலாறு இருக்கட்டும் புழு. எனக்குக் கதைய சொல்லு”
“வரலாறும் ஒரு கதைதானே. சரி கதை என்னன்னா, ஆலியான்னு ஒரு சின்னப்பெண். அவளுக்கு உன்னை மாதிரியே கதை கேட்கிறதுன்னா ரொம்பப் பிரியம். அவளோட அப்பாவும் அம்மாவும் அவளுக்கு நிறைய கதை சொல்றாங்க. நிறைய நல்ல புத்தகங்களைச் சின்ன வயசிலேயே அவளுக்கு அறிமுகப்படுத்துறாங்க. கதைகளையும் புத்தகங்களையும் படிக்கக் கத்துக்கொடுக்குறாங்க.
நிறைய கதைகளையும் நிறைய புத்தகங்களையும் அவள் தொடர்ச்சியா வாசிக்கிறா. அந்தப் புத்தகங்கள் மூலமா அவள் அறிவை வளர்த்துக்கிறது மட்டுமல்லாம, நிறைய சிந்திக்கவும் வைக்கிறது. எது சரி, எது தவறு, எதைச் செய்ய வேண்டும், எதைச் செய்யக் கூடாது என்றெல்லாம் யோசிக்க வைத்து, உயர்ந்த எண்ணங்களைத் தோற்றுவித்து ஒரு சிறந்த மனிதராக உருவாகக் காரணமாக புத்தகங்கள் அமைகின்றன. சுருக்கமாக, புத்தகங்கள் மனிதர்களை தேவர்களைப்போல மாற்றுகின்றன.”
“அவள் எந்த மாதிரி புத்தகங்களைப் படிக்கிறாள்?”
“இந்தப் புத்தகம் ஒரு குறுநாவலைப் போலிருந்தாலும், இதுக்குள்ள நிறைய கதைகள் இருக்கு. அதனால ஒரே புத்தகத்துல நிறைய சுவாரசியமான கதைகளைப் படிக்கலாம்.”
“அப்ப, சீக்கிரமா வாங்கிடணும்”
“இந்தப் புத்தகத்தை எழுதியவர் பிரபல மலையாள எழுத்தாளர், பேராசிரியர் எஸ். சிவதாஸ். இவர் ரொம்ப சுவாரசியமா எழுதறதுக்காக புகழ்பெற்றவர். அவர் இயற்கையைப் பற்றி எழுதிய ‘வாசித்தாலும் வாசித்தாலும் தீராத புத்தகம்' ரொம்பப் புகழ்பெற்றது. தமிழிலேயும் மொழி பெயர்க்கப்பட்டிருக்கு.”
“ஓ! இன்னொரு நல்ல புத்தகமும் எழுதியிருக்காரா?”
“இந்தப் புத்தகத்தில் குறிப்பிடத்தக்க இன்னொரு விஷயமும் இருக்கு. ஓவியர் தமிழ்ங்கிறவர் ரொம்ப எளிமையா, அழகா நிறைய கறுப்பு வெள்ளை ஓவியங்களைப் பொருத்தமா வரைஞ்சிருக்கார்.”
“அப்ப, இந்த வாரம் அப்பாவை ‘புத்தக தேவதை'யை வாசிச்சுக் காட்ட சொல்ல வேண்டியதுதான்.”
புத்தக தேவதையின் கதை,
எஸ். சிவதாஸ், தமிழில்: யூமா. வாசுகி,
புக்ஸ் ஃபார் சில்ரன் வெளியீடு,
7, இளங்கோ சாலை, தேனாம்பேட்டை,
சென்னை - 18. தொலைபேசி: 044-2433 2424
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT