Last Updated : 27 Apr, 2016 12:06 PM

 

Published : 27 Apr 2016 12:06 PM
Last Updated : 27 Apr 2016 12:06 PM

முயல்களுக்கென ஒரு தீவு!

இரண்டாம் உலகப் போர் நடந்தபோது நச்சு வாயு உற்பத்தி செய்யும் தீவாக இருந்தது ஜப்பானில் உள்ள ஒகுனோஷிமா. அந்தத் தீவு இன்று முயல்களின் சரணாலயமாக இருக்கிறது என்றால் நம்ப முடிகிறதா? அதுமட்டுமல்ல, ஒகுனோஷிமா என்ற தீவின் பெயர் ரேபிட் ஐலண்ட் (முயல் தீவு) என்றும் மாறிவிட்டது.

நூற்றுக்கணக்கான முயல்கள் வசிக்கும் இந்தத் தீவை நோக்கி ஏராளமான சுற்றுலாப் பயணிகள் தினமும் வருகிறார்கள். இங்கே வரும் சுற்றுலாப் பயணிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்துகின்றன முயல்கள். இங்கே வருகிறவர்கள் கண்டிப்பாக முயல்களுக்கான உணவுகளுடன்தான் வருகிறார்கள். கேரட், கீரைகள், கோஸ், ஆப்பிள், வாழைப்பழம், பருப்புகள் என்று விதவிதமான உணவைக் கொண்டுவருபவர்களை, முயல்கள் நன்றாகப் புரிந்து வைத்துள்ளன. உணவு கிடைக்காத காலங்களில் சுற்றுலாப் பயணிகள் தரும் உணவையே இவை நம்பி இருக்கின்றன. அதனால், மனிதர்களிடம் மிகவும் நெருக்கமாக இருக்கின்றன முயல்கள்.

தீவில் இறங்கி, முயல்கள் இருக்கும் பகுதிக்குள் நுழைந்தால் மனிதர்களை அவை சூழ்ந்துகொண்டுவிடுமாம். போட்டி போட்டுக்கொண்டு உணவைச் சாப்பிடுமாம். சுற்றுலாப் பயணிகள் தரையில் உட்கார்ந்தால் மடி, தலை மீது ஏறி ஜாலியாக உட்கார்ந்துகொண்டு சேட்டைகள் செய்யுமாம். சிலரை அப்படியே படுக்க வைத்து, அவர்கள் மீது ஏறி விளையாடி மகிழுமாம்.

முயல்களின் இந்த அளவுக்கு அதிகமான பாசத்தைக் கண்டு குழந்தைகள்கூட பயப்படுவதில்லை. முயல்களால் எந்தப் பிரச்சினையும் மனிதர்களுக்குக் கிடையாது அல்லவா? ஆனால், அப்படி விளையாடும்போது சில சமயங்களில் சிறுநீர் கழித்துவிடுமாம். அது மட்டும்தான் பிரச்சினை. உணவுப் பொருட்களுடன் யாராவது ஓடினால், நூற்றுக்கணக்கான முயல்கள் அவரைத் துரத்திக்கொண்டு வரும் காட்சியைப் பார்க்க அற்புதமாக இருக்குமாம்!

அதெல்லாம் சரி, ஒகுனோஷிமா தீவுக்கு முயல்கள் எப்படி வந்தன?

1929 முதல் 1945-ம் ஆண்டு வரை இந்த இடம், நச்சு வாயு தயாரிக்கக்கூடிய ரகசிய இடமாக இருந்தது. இரண்டாம் உலகப் போரில் பயன்படுத்துவதற்காக 6 ஆயிரம் டன் நச்சு வாயு ராணுவத்தினரால் இங்கே உற்பத்தி செய்யப்பட்டது. வாயுவைப் பரிசோதனை செய்வதற்காக முயல்களை இங்கே கொண்டு வந்து, வளர்த்தார்கள். உலகப் போர் முடிந்த பிறகு, இந்தத் தீவில் இருந்த கட்டிடங்களை இடித்துவிட்டார்கள். அங்கே இருந்த மனிதர்கள் வெளியே அனுப்பிவிட்டார்கள். வரைபடத்தில் இருந்தே ஒகுனோஷிமா தீவு மாயமானது. ஆனால், முயல்கள் மட்டும் தொடர்ந்து அந்தத் தீவிலேயே இருந்தன என்கிறார்கள் சிலர். இன்னொரு கருத்தும்கூட உண்டு. 1971-ம் ஆண்டு இங்கே சுற்றுலா வந்த பள்ளி மாணவர்கள், தாங்கள் கொண்டு வந்த 8 முயல்களை அப்படியே விட்டுச் சென்றுவிட்டார்களாம். அந்த முயல்கள் குட்டி போட்டுப் பெருகிவிட்டன என்கிறார்கள்.

முயல்கள் இந்தத் தீவுக்கு எப்படி வந்தன என்பதற்கான உண்மையான காரணம் இதுவரை தெரியவில்லை. முயல் தீவில் நாய்களுக்கும் பூனைகளுக்கும் மட்டும் அனுமதி கிடையாதாம். முயல்களைக் காப்பாற்றுவதற்காகவே இந்தக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருக்கிறது.

இரண்டாண்டுகளுக்கு முன்புதான் முயல் தீவு பற்றி வெளி உலகத்துக்குத் தெரிய ஆரம்பித்தது. அதற்குள்ளாகவே முயல் தீவு பிரபலமாகிவிட்டது. குறைந்த காலத்திலேயே ஏராளமான மனிதர்களைத் தீவை நோக்கி வரவழைத்துவிட்டன இந்த அழகிய முயல்கள்! அதே நேரம், இயற்கையில் திரியும் விலங்குகளுக்கு நாம் உணவு, நொறுக்குத் தீனி போன்றவற்றைக் கொடுத்தால் அந்த விலங்குகள் இயற்கையாக இரை தேடும் பழக்கத்தை விட்டுவிட்டு மனிதர்களைச் சார்ந்து வாழ ஆரம்பித்துவிடும். ஆகவே, விலங்குகள் மீது நமக்கு உண்மையான அன்பிருந்தால் அவை வாழ்வதற்கான இயற்கையான சூழலை அவற்றுக்குத் தருவோம்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x