Last Updated : 13 Apr, 2016 11:41 AM

 

Published : 13 Apr 2016 11:41 AM
Last Updated : 13 Apr 2016 11:41 AM

சிறார் இலக்கியம்: குட்டிப் பையன் காட்டிய அதிசய உலகம்

கதையோடு ஒன்றிப் போய் புத்தகத்திலிருந்து கண்ணை எடுக்காமல் வாசித்துக்கொண்டிருந்தாள் நேயா. அப்போது புத்தகத்தின் பின்பக்கத்திலிருந்து திடீரென்று தலையைத் தூக்கியது புத்தகப் புழு.

‘அம்மா' எனக் கத்தினாள் நேயா. பின்னர் சுதாரித்துக்கொண்டு, “நீதானா? ஏன் இப்படிப் பயமுறுத்துகிறாய்?” என்று கோபத்துடன் கேட்டாள் நேயா.

புத்தகப் புழு சிரித்தது. “இதுக்குப் போயி அலட்டிக்கலாமா? பள்ளியில் நீ விளையாட்டு வீராங்கனை ஆச்சே”

“அதுக்காக சுவாரசியமாக் கதை படிச்சுக்கிட்டு இருக்கும்போது, இப்படியா பயமுறுத்துவாங்க?”

“அட விடும்மா! நான் ஒரு குட்டிப் புழு என்னைப் பார்த்தே பயப்படுறீயே, எதிர்காலத்துல காட்டுக்குள்ள தங்கி ஆராய்ச்சி பண்ணப் போறேன்னு சொல்ற, அப்பல்லாம் எவ்வளவு தைரியமா இருக்கணும்?”

“இயற்கையைப் பத்தி ஆராய்ச்சி பண்ணப் போறேன்னு சொன்னது உண்மைதான். எனக்கு அந்த மாதிரி வேலைதான் பிடிக்கும்” என்றாள் நேயா.

“உனக்கு ஒரு கதை சொல்லவா? அதுவும் உன்னை மாதிரியே இயற்கையை நேசிக்கும் ஒரு குட்டிப் பையனின் கதை”

சட்டென்று இயல்புநிலைக்குத் திரும்பிய நேயா, “ஹை! சீ்க்கிரம் சொல்லு” என்றாள்.

“ரஷ்யாவில் பனி பொழியும் ஒரு பகுதியைச் சேர்ந்தவன் ஸாவுஷ்கின். அவன் பள்ளிக்கு தினசரி தாமதமாகவே வருகிறான். ஆனால், வீட்டிலிருந்து ஒரு மணி நேரத்துக்கு முன்னாலேயே புறப்பட்டுவிடுகிறான்.”

“அப்படியானால், இடையில் என்னதான் நடக்கிறது?”

“அதுதான் ரகசியம். இந்தக் கதையின் பெயரே ‘அவனது ரகசியம்'தான். அவன் வழக்கமான பாதை வழியே பள்ளிக்கு வருவதில்லை. காட்டின் வழியாக வருகிறான். அவன் தினசரி தாமதமாக வருவதால், அவனுடைய அம்மாவைப் பார்த்துப் பேச வேண்டுமென ஆசிரியை அன்னா வசீலியெவ்னா சொல்கிறார். அதனால், ஆசிரியையைக் காட்டின் வழியே தன் வீட்டுக்குக் கூட்டிக்கொண்டு போகிறான் ஸாவுஷ்கின். அந்தக் காட்டில் தேவதாரு, பிர்ச், பைன் என ஊசியிலை மரங்கள் நிரம்பியிருக்கின்றன. காட்டின் ஒரு பக்கத்தில் ஒரு ஓடை. அது குளிர்காலம் என்பதால் பார்க்கும் இடமெல்லாம் பனி பொழிந்து எல்லாமே வெள்ளை வெளேரென்று காட்சி தருகிறது. ஓடையும்கூட பனிப்பாளமாக உறைந்து போயிருக்கிறது. ஆனால், சில இடங்களில் தண்ணீர் உறையாமல் குமிழியிடுகிறது”.

“அதெப்படி?”

“ஆசிரியை வசீலியெவ்னாவுக்கும் அதே சந்தேகம்தான். குட்டிப் பையன் அழகாக விளக்கிவிடுகிறான். கண்ணாடிப் பனித்தரைக்கு அடியில் சுடுதண்ணீர் ஊற்றுகள் இருக்கின்றன. பனிக்குக் கீழே நீரோடை உயிரோடுதான் இருக்கிறது என்கிறான். அந்தக் காடு நீண்டுகொண்டே செல்கிறது. அந்தக் காட்டின் அதிசயங்களுக்கு முடிவில்லை. அதைப் பற்றி ஸாவுஷ்கினுக்குத் தெரிந்திருந்தது. அங்கே வரும் கடம்பை மான்களைப் பற்றிச் சொல்கிறான்.

அந்தப் பாதையின் ஒரு முக்கியமான திருப்பத்தில் மூன்று பேர் சேர்ந்தாலும் கட்டிப்பிடிக்க முடியாத பருமன் கொண்ட ஒரு பிரம்மாண்டமான ஓக் மரம் இருந்தது. அதன் மேல் பனி பொழிந்து பொழிந்து, ஒரு பெரிய வெள்ளைக் கோபுரம் போலத் தோன்றியது. அது ஸாவுஷ்கினுக்குப் பிடித்த பனிக்கால ஓக் மரம்.

அந்த மரத்தின் அடியில் பெய்திருந்த பனிப்பொழிவைத் தோண்டி ஒரு முள்ளெலி, பழுப்பு நிறத் தவளை, வண்டுகள், பூச்சிகள் என்று தன் ஆசிரியைக்கு ஒவ்வொன்றாகக் காட்டினான் ஸாவுஷ்கின். ஓக் மரத்தின் பட்டைகளிலும் ஒரு சில பூச்சிகள் இருந்தன.

அப்பிரதேசமே பனியால் மூடப்பட்டிருந்த நிலையில், இந்த பிரம்மாண்ட ஓக் மரம் கதகதப்பைத் தந்துகொண்டிருந்ததே அந்த உயிரினங்கள் அங்கே இருந்ததற்குக் காரணம். அந்த உயிரினங்கள் பார்ப்பதற்கு இறந்துபோய்விட்டதுபோல விறைத்துக் காணப்பட்டாலும், அவை குளிர்கால உறக்கத்தில் (Hibernation) இருக்கின்றன. வசந்தகாலம் வந்தவுடன் செயல்நிலைக்கு திரும்பிவிடும். கடும் குளிர்காலங்களில் உயிரினங்கள் இப்படி நீண்ட உறக்கத்துக்குப் போவது இயல்புதான்.

இப்படி அவர்கள் இருவரும் இயற்கையில் ஆழ்ந்துவிட்ட பிறகு, ஸாவுஷ்கினின் அம்மாவை சரியான நேரத்துக்குப் பார்க்கப் போக முடியவில்லை என்பது பின்னால்தான் ஆசிரியை அன்னா வசீலியெவ்னாவுக்கு உறைக்கிறது. அவரை ஆச்சரியப்படுத்தியது இயற்கை மட்டுமல்ல, அந்த இயற்கையை ஆழமாக நேசிக்கும் ஸாவுஷ்கினும் ஓர் ஆச்சரியம்தான். ஒரு நாளிலேயே இத்தனை புதிய விஷயங்களை அனுபவித்து ரசிக்க முடிகிறதென்றால், அந்த வழியை ஸாவுஷ்கின் எப்படி தவற விடுவான்?

தான் எல்லாம் தெரிந்தவர் என்றும் சிறந்த ஆசிரியை என்றும் நினைத்துக்கொண்டிருக்கும் வசீலியெவ்னாவின் மனதில், ஸாவுஷ்கினின் இயற்கை மீதான பிணைப்பும் அறிவும் அவருடைய கற்பிக்கும் திறனை மிகப் பெரிய கேள்விக்கு உள்ளாக்கின.”

“அற்புதம், அற்புதம். எனக்குக் காடும் இயற்கையும் பிடிக்கும்னு கரெக்டா புரிஞ்சுக்கிட்டு இந்தக் கதையைச் சொல்லியிருக்க புழு, உனக்கு ரொம்ப ரொம்ப நன்றி”

“நன்றியெல்லாம் இந்தக் கதையை எழுதிய பழைய ரஷ்ய எழுத்தாளர் யூரிய் நகீபின்-னுக்குத்தான் போய்ச்சேரணும். அதேநேரம் இந்தக் கதையை உன் அப்பா, அம்மாவிடம் வாசித்துக்காட்டச் சொல்ல வேண்டும். இந்தப் புத்தகத்தை, 8-வதுக்கு மேல் படிக்கும் குழந்தைகளாலேயே வாசிக்க முடியும்.

1980-கள்வரை ரஷ்ய இலக்கியங்கள் தமிழில் பெருமளவு மொழிபெயர்க்கப்பட்டுவந்தன. அவற்றில் சிறார் இலக்கியப் புத்தகங்கள், சிறார் அறிவியல் புத்தகங்கள் மிக முக்கியமானவை. அந்த வகையில் 3 கதைகளைக் கொண்ட ‘சுங்கான்' என்ற கதைத்தொகுப்பில் ‘அவனது ரகசியம்' கதை இடம்பெற்றுள்ளது. இக்கதையை மொழிபெயர்த்தவர் க. சுப்ரமணியம். இந்தக் கதை தமிழிலேயே நேரடியாக எழுதப்பட்டது போன்ற சரளமான தன்மையுடனும் சுவாரசியமான நடையுடனும் மொழிபெயர்க்கப்பட்டிருக்கு.”

“எனக்கும் இதுபோல நிறைய குட்டிக் குட்டி கதை எழுதணும்னு ஆசையா இருக்கு”

“நிச்சயமா எழுதலாம். அதுக்கு நீ நிறைய வாசிக்கணும் நேயா”

“வாசி்ப்பேன், அதுக்கு நீயும் உதவத்தானே போற”

“ஆமாமா, அடுத்த முறை புதுப் புத்தகத்தோடு பார்ப்போம்” - விடைபெற்றது புழு.

சுங்கான், யூரிய் நகீபின்,
தமிழில்: க.சுப்ரமணியம்,
தாமரை பப்ளிகேஷன்ஸ்,
41 பி, சிட்கோ இண்டஸ்ட்ரியல் எஸ்டேட்,
அம்பத்தூர், சென்னை - 600 098.
தொலைபேசி: 044-26251968

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x