Last Updated : 13 Apr, 2016 11:32 AM

 

Published : 13 Apr 2016 11:32 AM
Last Updated : 13 Apr 2016 11:32 AM

தவளைக்கு விஷம் உண்டா?

சில சமயங்களில் உருவத்துக்கும் செயலுக்கும் தொடர்பு இருக்காது. அதற்கு நல்ல உதாரணம் தங்க விஷத் தவளை. இரண்டு அங்குலமே உள்ள இந்தத் தவளைதான் உலகிலேயே மிக அதிக விஷம் கொண்ட தவளை. ஒரு முறை விஷத்தைப் பீய்ச்சி அடித்தால் மூன்றே நிமிடங்களில் 10 மனிதர்களைக் கொன்றுவிடக்கூடியது.

10 ஆயிரம் சுண்டெலிகளைக் கொன்றுவிடக் கூடியது. கொலம்பியாவின் மழைக்காடுகளில் காணப்படும் தங்கத் தவளையின் விஷத்தை, பழங்குடி மக்கள் வேட்டைக்குப் பயன்படுத்தியிருக்கிறார்கள்.

தகதகவென்று அடர் மஞ்சள் நிறத்தில் மட்டுமின்றி, ஆரஞ்சு, வெளிர் பச்சை நிறங்களிலும் இவை காணப்படுகின்றன. நான் ஆபத்தானவன் என்று மற்ற விலங்குகளை எச்சரிப்பதற்காகவே இந்தக் கண்கவர் வண்ணங்கள்.

தங்கத் தவளைகள் ஆபத்தான உயிரினங்களே தவிர, கொடூரமான உயிரினங்கள் அல்ல. பொதுவாக விஷம் கொண்ட விலங்குகளும் பூச்சிகளும் பற்கள், கொடுக்குகள் மூலம் விஷத்தைச் செலுத்துகின்றன. ஆனால், தங்கத் தவளை ஆபத்து என்று உணர்ந்தால், தன்னைக் காப்பாற்றிக்கொள்வதற்காகத் தோலில் இருந்து விஷத்தைப் பீய்ச்சி விடுகிறது. இந்தத் தவளையை நம் கையில் உறையில்லாமல் வைத்திருந்தால், அடுத்த சில நொடிகளில் மரணம் உறுதி. ‘அல்கலாய்ட்’ என்ற விஷம் தவளையின் தோல் முழுவதும் பரவியிருக்கிறது. இந்த விஷம் நரம்புகளின் செயல்களைத் தடுத்துவிடும். தசைகளைச் சுருக்குகிறது. இறுதியில் இதயத்தைச் செயலிழக்க வைத்துவிடுகிறது.

தங்கத் தவளைகளின் விஷத்துக்கான சரியான காரணம் இன்னும் கண்டுபிடிக்கவில்லை. 4 கோடி ஆண்டுகளுக்கு முன்பு வட, தென் அமெரிக்கக் காடுகளில் வாழ்ந்த தவளைகளுக்கு விஷம் இல்லை. காலப் போக்கில் இவை சாப்பிடும் உணவுகளிலிருந்தே விஷத்தைப் பெற்றிருக்க வேண்டும் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். விஷத் தாவரங்கள், ஈக்கள், விஷ எறும்புகள், வெட்டுக்கிளிகள், வண்டுகள், கரையான்கள் போன்ற இரைகளின் மூலமே விஷம் தவளைகளுக்கு வந்திருக்க வேண்டும்.

2014-ம் ஆண்டு ஜான் கரோல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ரால்ப் சபோரிடோ செய்த ஆய்வு சுவாரசியமானது. தங்கத் தவளைகளின் தலைப்பிரட்டைகள், தங்கள் அம்மாக்கள் கொடுக்கும் உணவு மூலமே விஷத்தைப் பெற்றுக்கொள்கின்றன. பொரிக்காத முட்டைகளைத் தலைப்பிரட்டைகள் தொடர்ந்து சாப்பிடும்போது விஷம் உடலில் சேர்ந்துவிடுகிறது. எதிரிகளிடமிருந்து முட்டைகளைப் பாதுகாப்பதற்கே தாய்த் தவளைகள் முட்டைகளின் மீது விஷத்தைச் செலுத்தி வைக்கின்றன.

அழிந்துவரக்கூடிய அரிய உயிரினங்களின் பட்டியலில் இந்தத் தங்கத் தவளைகளும் உள்ளன. காடுகளை அழித்தல், சட்டத்துக்குப் புறம்பாகத் தங்கச் சுரங்கம் அமைத்தல், கோகோ பயிரிடுதல், மரங்களை வெட்டுதல் போன்ற பல காரணங்களால் தங்கத் தவளைகள் அழிவின் விளிம்புக்குத் தள்ளப்பட்டுள்ளன.

தங்கத் தவளைகளின் தோலுக்கு அடியில் விஷச் சுரப்பிகள் இருக்கின்றன. விஷம் தேவைப்படும் மக்கள், தங்கத் தவளைகளை ஒரு மரக்குச்சியால் பிடித்து, நகர விடாமல் செய்வார்கள். தவளையின் உடல் வியர்த்து, விஷம் வெளியேறும்போது, அவற்றைச் சேகரித்துக்கொள்வார்கள். அம்புகளில் விஷத்தைத் தடவி வேட்டைக்குப் பயன்படுத்துவார்கள். ஓராண்டு வரை விஷத்தைச் சேமித்து வைத்திருப்பார்களாம்.

தவளைகளின் விஷத்தை மருந்துகளில் பயன்படுத்த முடியுமா என்ற ஆராய்ச்சியும் நடைபெற்றுவருகிறது. ஆனால், தவளையின் விஷத்துக்கு அந்தத் தன்மை இல்லை என்கிறார்கள். இந்த விஷத்தை நேரடியாக வலி நிவாரணிகளில் பயன்படுத்த முடியாவிட்டாலும் புற்றுநோய் செல்களை அழிப்பதற்கு வேறு மருந்துகளுடன் பயன்படுத்த முடியுமா என்று ஆராய்ந்திருகிறார்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x