Published : 16 Feb 2022 07:07 AM
Last Updated : 16 Feb 2022 07:07 AM

உணவுக்காக உயிரைவிடும் கடல் யானைகள் - புதிய கண்டுபிடிப்புகள்

கடல் யானைகளில் (Elephant Seals) ஆண்களின் எடை மிக அதிகமாக இருக்கும். அதிகமான உணவுக்காக குறிப்பிட்ட பகுதிகளில் மட்டுமே வேட்டையாடுவதால், ஆண் கடல் யானைகள் அதிக அளவில் உயிரிழப்பைச் சந்திக்கின்றன.

கடலில் வாழ்ந்தாலும் கடல் யானைகள் பாலூட்டிகள். காற்றை மூக்கால் உறிஞ்சி நுரையீரல் மூலம் சுவாசிக்கும். கடலுக்கு அடியில் டைவ் செய்யும்போது மனிதர்களைப் போல ‘தம்’ கட்டி மூச்சை இறுக்கிப் பிடித்து, சுமார் 1,550 மீட்டர் ஆழத்துக்குச் சென்று வேட்டையாடும்.

வட கடல் யானைகள், தென் கடல் யானைகள் என இரு வகைகள் உள்ளன. அமெரிக்காவின் வட பசிபிக் கடற்கரையை ஒட்டி வட கடல் யானைகள் வாழ்கின்றன. அண்டார்க்டிகா கண்டத்தைச் சுற்றி தென் கடல் யானைகள் வாழ்கின்றன. உடல் முழுவதும் கொழுப்பு நிறைந் திருக்கும் கடல் யானையை 19 ஆம் நூற்றாண்டில் ஐரோப்பியர்கள் அதிகமாக வேட்டையாடியதால், இவற்றின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துவிட்டது.

வட கடல் யானைகளில் ஆண் சுமார் 1,500 - 2,300 கிலோ எடை இருக்கும். பெண் 400- 900 கிலோ எடை இருக்கும். ஆண் கடல் யானைகள் சுமார் 5 மீட்டர் நீளமும் பெண் சுமார் 3.6 மீட்டர் நீளமும் வளரும்.

கலிபோர்னியாவில் உள்ள அனோ நியூவோ ஸ்டேட் பார்க் உயிரியல் பூங்காவில் ஆய்வு நடத்தப்பட்டது. சாரா கியென்லே தலைமையில் 39 ஆண் கடல் யானைகளிடமும் 178 பெண் கடல் யானைகளிடமும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. 2006 முதல் 2015ஆம் ஆண்டு வரை நடந்த ஆய்வில் பல தகவல்கள் சேகரிக்கப்பட்டன. ஆண் கடல் யானைகள் வேட்டையாடும் இடங்களில் பெண் கடல் யானைகள் வருவதில்லை என்பது ஆராய்ச்சியாளர்களை வியப்பில் ஆழ்த்தியது. பொதுவாக ஆண் கடல் யானைகள் கடற்கரை, கரையை ஒட்டிய கடற்பகுதிகளில் மட்டுமே இரை தேடி நீந்தின.

பெண் கடல் யானைகள் உணவு தேடி நீண்ட தொலைவு கடலுக்குள் சென்றன. சில பெண் கடல் யானைகள் கடற்கரையிலிருந்து ஆயிரம் கிலோ மீட்டர் வரைகூட இரை தேடிச் சென்றன. சுமார் 500 முதல் 600 மீட்டர் ஆழம் வரை சென்று கணவாய் மீன்களைப் பிடித்து உண்டன.

தாராளமாக உணவு கிடைப்பதால் ஆண் கடல் யானைகளின் எடை மிக அதிகமாக இருந்தது. நீண்ட தொலைவு பயணித்து உணவை உட்கொள்ளும் பெண் கடல் யானைகளைவிட, சுமார் ஆறு மடங்கு கூடுதல் எடையை ஆண் கடல் யானைகள் பெறுகின்றன.

கூடுதல் உடல் எடையுடன் இருக்கும் ஆண் கடல் யானைகள், பெண் கடல் யானைகளைவிட விரைவில் மரணம் அடைந்தன. இரை தேடிக் கடலில் நீந்தும்போது ஆண் கடல் யானை இறக்க 0.45 சதவீத வாய்ப்பும் பெண் கடல் யானை இறக்க 0.12 சதவீத வாய்ப்பும் இருப்பதாக ஆய்வில் தெரிந்தது. அதாவது பெண் கடல் யானைகளைவிட ஆண் கடல் யானைகள் ஆறு மடங்கு அதிகமாக இறப்பை எதிர்கொள்கின்றன.

ஏன் ஆண் கடல் யானைகள் அதிக அளவில் மரணம் அடைகின்றன? முழுமையான காரணத்தை இன்னும் கண்டறியவில்லை என்கிறார் கியென்லே. எனினும் கடற்கரையை ஒட்டிய பகுதிகளில் கூடுதல் மீன் வளம் இருப்பதால், வெள்ளைச் சுறாக்கள் குவிகின்றன. கடல் யானைகளைக்கூட இந்த வெள்ளைச் சுறாக்கள் வேட்டையாடக்கூடியவை. எனவே, சுறாக்களின் பிடியில் அகப்பட்டு ஆண் கடல் யானைகள் அதிக அளவில் மரணம் அடைவதாக கியென்லே நினைக்கிறார். அதாவது அதிக உணவு கிடைக்கும் என்பதற்காக ஆபத்தான பகுதிக்குச் செல்லும் ஆண் கடல் யானைகள், உயிரிழந்துவிடுகின்றன.

கட்டுரையாளர், விஞ்ஞானி தொடர்புக்கு: tvv123@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x