Last Updated : 27 Apr, 2016 12:09 PM

 

Published : 27 Apr 2016 12:09 PM
Last Updated : 27 Apr 2016 12:09 PM

வேண்டாமே அந்த இயந்திரப் பெட்டி!

“நேயா, நான் சொல்ற புத்தகங்களைப் படிக்கிறது தவிர, லீவுல வேறென்ன செய்யுற?”

“இந்த கிரிக்கெட் எல்லாம் நடக்குதே, அதைக் கொஞ்சம் பார்த்தேன் புழு.”

“கிரிக்கெட்டா? பரீட்சை நேரத்துல வந்து தொல்லை பண்ணுமே, அந்த 20-20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிதான் முடிஞ்சிடுச்சே.”

“இல்ல, இது ஐ.பி.எல். கிரிக்கெட்.”

“மழை விட்டும் தூவானம் விடலையா? லீவுல வெளில விளையாடப் போகாம, இப்படி கிரிக்கெட் பார்த்துக்கிட்டு இருக்கியா? இந்த ‘முட்டாள் பெட்டி' பத்தி தெரியுமா உனக்கு?”

“டிரங்கு பெட்டி, சூட்கேஸ், தகர டப்பா இப்படி நிறைய பெட்டிகளைப் பத்தி கேள்விப்பட்டிருக்கேன். நீ சொல்ற பெட்டி வித்தியாசமா இருக்கே!”

“தெரிஞ்சுக்கிட்டே என்னை ஏமாத்தப் பார்க்குறியா?”

“ஆங்! டிவியைத்தானே சொல்றே.”

“ஆமா, டிவிதான். ‘தொலைக்காட்சி’: நம் குழந்தையின் வளர்ச்சியை எப்படி பாதிக்கும்’னு ஒரு புத்தகம் வந்திருக்கு தெரியுமா?”

“டிவியைப் பத்தி ஒரு புத்தகமா?”

“ஆமா, இந்தப் புத்தகத்தைத் தொகுத்தது மலேசியாவில் உள்ள பினாங்கு பயனீட்டாளர் சங்கம். அடையாளம் வெளியீட்டுக்காக தமிழில் மொழிபெயர்த்தவர் மூத்த பத்திரிகையாளர் பொன். தனசேகரன்.”

“அது சரி. இது பெரியவங்களுக்கா, என்னைப் போன்ற குழந்தைகளுக்கா?”

“நல்ல கேள்வி. பெரியவங்களுக்கானதுதான். நிறைய அப்பா, அம்மா டிவியைப் போட்டுவிட்டுட்டு அவங்க வேலையைப் பார்க்கப் போயிடுறாங்க இல்ல. அது ரொம்பத் தப்புன்னு இந்தப் புத்தகம் சொல்லுது. ரொம்ப முக்கியமான விஷயம் டிவி ஒரு இயந்திரம், அதுவும் உயிரற்ற இயந்திரம். குழந்தையால் அந்த இயந்திரத்துடன் பேச முடியாது. அதை நாம புரிஞ்சுக்கணும்.”

“இது பெரியவங்களோட தப்புதானே.”

“ஆனா, குழந்தைகள் டிவி பார்க்கிறதைப் பத்தித்தானே இந்தப் புத்தகம் பேசுது. அதனால நாமளும் நிச்சயமா தெரிஞ்சுக்கணும்.”

“இந்தப் புத்தகம், டிவி பார்க்கக் கூடாதுங்கிறதுக்கு என்னென்ன காரணங்களைச் சொல்லுது?”

“வீட்டில் கவனத்தில் படாத இடத்தில் டிவியை வைக்கணும். அதையும் மூடித்தான் வைக்கணும். அதேபோல சாப்பிடும்போது டி.வி. பார்க்கக் கூடாது. எல்லோரும் ஒன்றாக உட்கார்ந்து சாப்பிடும்போது மனம் விட்டுப் பேசலாம்.

12 வயசு வரைக்கும் குழந்தைகள் டி.வி.யே பார்க்கக் கூடாதாம். புத்தகம் வாசிக்கத்தான் ஊக்குவிக்கணும். 12 வயசுக்குப் பிறகு சினிமா பார்க்கப் பழக்கலாம்.

டி.வி. பார்க்க ஆரம்பிச்ச பிறகும் எந்த நிகழ்ச்சியைப் பார்க்கணும், எவ்வளவு நேரம் பார்க்கணுங்கிறதைத் திட்டவட்டமா முடிவு செய்யணும். லைட் போட்டுட்டுத் தள்ளி உட்கார்ந்து டிவியைப் பார்க்கணும். நிகழ்ச்சியில் வர்ற விஷயங்களைப் பத்தி உடனுக்குடன் குழந்தைகளிடம் அம்மா, அப்பா பேசணும்.

ஒரு நாளில் குறிப்பிட்ட நேரத்துக்கு மட்டுமே டிவியைப் பார்த்துட்டு, அதன் பிறகு வேறு வேலைக்குக் குழந்தைகளைத் திசைதிருப்ப வேண்டும். சின்ன வயசிலேர்ந்தே இப்படிச் செஞ்சா, பெருசா ஆனதுக்கு அப்புறமும் குழந்தைகள் அதையே பின்பற்றுவாங்க.”

“சரி, இதெல்லாம் டிவி பார்க்காம இருக்கிறதுக்கான காரணங்கள். டிவி பார்க்காம இருக்குற நேரத்துல வேற என்னதான் செய்றது?”

“அதுக்கும் நிறைய வழிகள் இருக்கே. அப்பா, அம்மா நிறைய புத்தகம் வாசிச்சுக் காட்டணும். நிறைய கதைகள் சொல்லணும். ஓவியங்கள் குறைவா இருக்கிற புத்தகங்களையும் தங்களுடைய வாழ்க்கையில் நடந்த கதைகளையும் நிறைய சொல்லலாம். இப்படிச் செஞ்சா குழந்தைகளுடைய கற்பனைத் திறன் ஊக்குவிக்கப்பட்டு உள்மனச் சித்திரங்கள் தூண்டிவிடப்படும்.

உலகின் மாபெரும் ஆசிரியர் இயற்கைதான். அது செழித்துள்ள இடங்களுக்குக் கூட்டிட்டு போகணும். டி.வி.யில் காட்சிகள் வேகமா மாறிட்டே இருக்கும். ஆனா, இயற்கை பொறுமையானது, அதேநேரம் மதிப்புமிக்க புதிய ஆச்சரியங்களை நிறைய அறிமுகப்படுத்தும்.

கடுமையான விதிமுறைகள் இல்லாத, குழந்தைக்குப் பிடித்த எந்த விளையாட்டை விளையாடவும் ஊக்கப்படுத்தலாம். இதன் மூலம் மூளை வளர்ச்சி மட்டுமல்லாமல், தசை இயக்கத் திறன்களும் வளரும்.

இதற்கெல்லாம் மேலாக உணவு தயாரிப்பது, துணி துவைப்பது, மற்ற வீட்டு வேலைகளில் குழந்தைகளால் செய்ய முடிந்த சின்னச்சின்ன வேலைகளில் ஈடுபடுத்த வேண்டும். அப்படிச் செய்வது அவர்களுக்குப் பிடிக்கும். அதை முறையாகப் பழக்கப்படுத்த வேண்டும்.

இதெல்லாம் டி.வி. பார்க்காம இருக்க, அந்தப் புத்தகம் சொல்லும் வழிமுறைகள்.”

“நல்லாத்தான் இருக்கு.”

“உங்க அப்பாவ கொஞ்ச நாள் டிவியை மூடி பரணில் வைக்கச் சொல்லு. அதுக்குப் பிறகு, ஒவ்வொரு நாளும் டி.வி. பார்க்க எவ்வளவு நேரத்தை வீணாக்கிக் கொண்டிருந்தோம்னு புரியும்.”

“நீ சொன்னா சரியாத்தான் இருக்கும் புழு.”

அடையாளம் வெளியீடு, தொடர்புக்கு: 04332 273444

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x