Published : 20 Apr 2016 12:16 PM
Last Updated : 20 Apr 2016 12:16 PM
பாண்டு: ஹாய் வாண்டு, வீட்டை விட்டு வெளியே வரவே மாட்டேன்கிறீயே. வீட்டுக்குள்ள இருக்குறது அலுப்பா இல்லையா?
வாண்டு: வெயில் ரொம்ப ஓவரா இருக்கேப்பா? வீட்டை விட்டு எப்படி வெளியே வரது? வீட்டுக்குள்ள இருக்குறது அலுப்பாத்தான் இருக்கு. ஆனாலும் வீட்டுல நிறைய புத்தகம் இருக்கறதால வாசிச்சுக்கிட்டே இருக்கேன்.
பாண்டு: ஓ... அப்படியா? அதெல்லாம் சரி, இந்த வாரம் (ஏப்ரல் 23) உனக்கு ரொம்ப பிடித்த நாள் வருதே. அதுபத்தி எதுவும் சொல்வேன்னு பார்த்தேன். ஒண்ணும் சொல்லலியே.
வாண்டு: இந்த வாரத்துல என்னோட பிறந்தநாளுகூட இல்லியே. எதைச் சொல்ற?
பாண்டு: நிறைய புத்தகம் வாங்கி படிக்குற. அதுகூட உனக்கு ஞாபகத்துல இல்லீயா? வர 23-ம் தேதி ‘உலக புத்தக நாள்’ வாண்டு.
வாண்டு: ஓ... மறந்தேபோய்ட்டேன் பாண்டு.
பாண்டு: உலக புத்தக நாளைப் பத்தி டி.வி.யில சொன்னாங்க. இது உனக்குப் பிடிச்ச விஷயமாச்சேன்னு உன்கிட்ட கேட்டேன்.
வாண்டு: உலகப் புத்தக நாள் பத்தி டி.வி.யில் என்ன சொன்னாங்க?
பாண்டு: உலகப் புத்தக நாள் ஏன் வந்துச்சு? எதுக்காக அதைக் கொண்டாடுறாங்கண்ணு சொன்னாங்க.
வாண்டு: அதை சொன்னா நானும் கேட்டுப்பேன்ல.
பாண்டு: நான் சொல்லலைன்னா மட்டும் நீ விடுவியா? சொல்றேன் வாண்டு. வாசிக்கிற பழக்கத்தை அதிகப்படுத்தவும், நிறையப் புத்தகங்களை அச்சடிக்கவும், புத்தகங்களைப் பாதுகாக்குறதுக்காகத்தான் உலக புத்தக நாள் கொண்டாட்டம் வந்துச்சு. ஐ. நா.வோட கலாச்சார நிறுவனமான யுனெஸ்கோ சார்பாதான் இந்த நாள் அறிவிக்கப்பட்டுச்சு. 1995-ம் வருஷத்துல இருந்து ஒவ்வொரு வருஷமும் ஏப்ரல் 23-ம் தேதி உலகப் புத்தக நாள் கொண்டாடி வரோம்.
வாண்டு: அதெல்லாம் சரி, ஏப்ரல் 23 ஏன் உலகப் புத்தக நாள் கொண்டாடுறோம்? அதுக்கு ஏதாவது காரணம் இருக்கணுமே?
பாண்டு: காரணம் இல்லாமலா? புகழ்பெற்ற ஸ்பானிஷ் எழுத்தாளர்களான மிகேல் தெ செர்வாண்டீஸ், இன்கா கார்சிலாஸோ டீ லா வேகா ஆகியோர் 1616-ம் ஆண்டு இந்த தேதியிலதான் இறந்தாங்க. இதேபோல உலகப் புகழ்பெற்ற நாடக ஆசிரியர் வில்லியம்ஸ் ஷேக்ஸ்பியரும் 1616-ம் ஆண்டு ஏப்ரல் 23-ம் தேதிதான் இறந்தாரு. பல புகழ்பெற்ற எழுத்தாளர்கள் ஏப்ரல் 23-ம் தேதியில பிறந்திருக்காங்களாம்.
இவங்கள நினைவுபடுத்ததான் ஏப்ரல் 23-ம் தேதியை உலக புத்தக நாளாக யுனெஸ்கோ அறிவிச்சது. 1995-ம் வருஷத்துல இதை ஒரு தீர்மானமா யுனெஸ்கோ போட்டுச்சு. அதன்பிறகு, அந்த வருஷம் ஏப்ரல் 23-ம் தேதியிலிருந்து இந்தத் தினத்தைக் கொண்டாடி வரோம்.
வாண்டு: அடேயப்பா, நிறைய விஷயங்களைத் தெரிஞ்சு வைச்சுருக்குறியே பாண்டு. சரி...சரி... உன்னை மாதிரி நானும் இன்னைக்கு ஒரு செய்தி பார்த்தேனே.
பாண்டு: ஓ... அப்படியா? என்ன செய்தி அது?
வாண்டு: மனுஷனை சுமந்துக்கிட்டு ஓட்டப் பந்தயம் ஓடின பறவையைப் பத்திய ஒரு செய்தி.
பாண்டு: மனுஷனைப் பறவையால எப்படி சுமக்க முடியும்? சும்மா பொய் சொல்லாதே.
வாண்டு: நான் ஏன் பொய் சொல்லப் போறேன். நெருப்புக் கோழி (Ostrich) தெரியுமில்லையா? அந்தப் பறவையால மனுஷனையே சுமக்க முடியும்.
பாண்டு: ஆமா, அந்தப் பறவை ரொம்ப பெரிசா இருக்கும்னு தெரியும். ஆனா, அது மனுஷனை சுமந்துக்கிட்டு, ஓட்டப் பந்தயம்கூட ஓடும்னா ஆச்சரியமா இருக்கே.
வாண்டு: நெருப்புக் கோழிங்க சராசரியா 6 அடி முதல் 9 அடி வரைகூட வளரும். அதோட எடை 65 கிலோவுல இருந்து 115 கிலோ வரைக்கும் இருக்குமாம். சில சமயம் 125 கிலோகூட இருக்குமாம். அது மட்டுமில்ல, ஒரு மணி நேரத்துல 70 கிலோ மீட்டர் ஸ்பீடுல ஓடுமாம். அதனால அந்தப் பறவையை ஓட்டப் பந்தயத்துல பயன்படுத்துறாங்க. நெருப்புக் கோழிங்க ஆப்பிரிக்காவுலதான் ரொம்ப அதிகமா இருக்கு. அதனால் தென் ஆப்பிரிக்காவுல ஒவ்வொரு வருஷமும் இந்த சீசன்ல நெருப்புக் கோழி பந்தயம் நடக்கும். மனுஷங்க குதிரை மேலே உட்கார மாதிரி, நெருப்புக் கோழி மேலே உட்கார்ந்து அதுங்கள விரட்டுவாங்க. அதுங்களும் அந்த எடையைச் சுமந்துக்கிட்டு வேகமாக ஓடுங்க. தென் அமெரிக்கா மட்டுமல்லாம, அமெரிக்காவுலகூட நெருப்புக் கோழி பந்தயம் நடத்துறாங்க.
பாண்டு: நெருப்புக் கோழியால மனிதனையே சுமக்க முடியுதுன்னா, வியப்பாதான் இருக்கு. சரி வாண்டு, எனக்குப் பசிக்குது. நான் வீட்டுக்குப் போறேன்.
வாண்டு:சரிப்பா, டாட்டா
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT