Published : 29 Dec 2021 05:10 PM
Last Updated : 29 Dec 2021 05:10 PM

டிங்குவிடம் கேளுங்கள்: பூமி சுற்றும்போது நாமும் சுற்றுகிறோமா?

ரயில் தண்டவாளத்தில் சரளைக்கற்களை ஏன் போட்டு வைத்திருக்கிறார்கள், டிங்கு?

- ரா. கீர்த்தனா, 9-ம் வகுப்பு,

ஸ்ரீவிக்னேஷ் வித்யாலயா,

மேல்நிலைப் பள்ளி, கூத்தூர், திருச்சி.

அதிக எடை மிகுந்த ரயிலைத் தண்டவாளங்கள் தாங்குகின்றன. அந்தத் தண்டவாளங்களை, தண்டவாள அடிக் கட்டைகள் தாங்குகின்றன. முன்பெல்லாம் மரத்தால் ஆன அடிக்கட்டைகள் பயன்படுத்தப் பட்டன. தற்போது கான்கிரீட் அடிக்கட்டைகள் பயன்படுத்தப்படுகின்றன.

ரயில் தண்டவாளத்தின் மேல் செல்லும்போது நிலைப்புத்தன்மையை உண்டாக்குவதற்காக, சரளைக் கற்களை நிரப்பி வைக்கிறார்கள். உருண்டையான வழவழப்பான கற்கள் என்றால், வேகமாக ரயில் செல்லும்போது, அதிர்வில் உருண்டு ஓடிவிடும் வாய்ப்பு இருக்கிறது.

குறிப்பிட்ட உருவம் இல்லாமல் கூர்மையான விளிம்புகளுடைய சரளைக் கற்கள், ஒன்றோடு ஒன்று நெருக்கமாகப் பிணைத்துக்கொள்கின்றன. இதனால் நிலைப்புத்தன்மை நன்றாகக் கிடைக்கிறது. ரயில் செல்லும்போது உருண்டைக் கற்களைப் போல் சரளைக் கற்கள் உருண்டு ஓடுவதில்லை.

சரளைக் கற்களுக்கு மேல் சற்று உயரமாகத் தண்டவாளம் அமைக்கப்படுவதால், மண் மூடும் வாய்ப்பு இல்லை. மழை நேரத்தில் தண்ணீர் தேங்குவதில்லை. தாவரங்கள் முளைப் பதில்லை. அதனால்தான் தண்டவாளத்தில் சரளைக்கற்களைப் போடுகிறார்கள், கீர்த்தனா.

பூமி சுற்றும்போது நாமும் சேர்ந்து சுற்றுகிறோமா, டிங்கு?

- பா. ரித்திக்ரோஷன்,

4-ம் வகுப்பு, பிச்சாண்டி நடுநிலைப் பள்ளி, போடிநாயக்கனூர், தேனி.

ஆமாம் ரித்திக் ரோஷன். விமானத்திலோ காரிலோ பயணம் செய்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். பயணம் ஆரம்பித்த சிறிது நேரத்தில் வாகனம் ஓடுவதை நம்மால் உணர முடியாது. வேகத்தில் ஏதாவது மாற்றம் ஏற்பட்டால் மட்டுமே அதை உணர்ந்துகொள்ள முடியும். அதேபோலத்தான் பூமியும். மணிக்கு 1,000 மைல் வேகத்தில் பூமி சுற்றிக்கொண்டிருக்கிறது. இந்த வேகம் நிலையானது. அதனால் பூமி சுற்றுவதை நம்மால் உணர முடியவில்லை. பூமி சுற்றும் வேகத்தில் பெரிய அளவில் மாற்றம் நிகழ்ந்தால் மட்டுமே நம்மால் உணர முடியும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x