Published : 30 Mar 2016 11:41 AM
Last Updated : 30 Mar 2016 11:41 AM
உலகின் நீளமான கதை எது என்று உங்களுக்குத் தெரியுமா?
முன்னொரு காலத்தில், ஒரு ஊரில் கிராமத் தலைவர் இருந்தார். அவருக்குக் கதைகள் கேட்பது என்றால் ரொம்பப் பிடிக்கும். அதனால், அவருக்கு நிறைய கதைகளும் தெரியும். சில சமயங்களில் யாராவது ஒருவர் கதை சொல்லிக்கொண்டிருந்தால், பாதிக் கதையில் அவரை நிறுத்திவிட்டு, மீதிக் கதையை இவரே சொல்லி முடித்துவிடுவார்.
ஒரு நாள் - ஊரில் யாராவது நல்ல கதைசொல்லிகள் இருக்கிறார்களா எனக் கண்டுபிடித்து வரும்படி தன்னுடைய வேலையாட்களை நான்கு திசைகளுக்கும் அனுப்பினார்.
“உலகின் மிக நீளமான கதையைச் சொல்லி, கிராமத் தலைவரை ரசிக்க வைப்பவருக்குப் பரிசுகள் காத்திருக்கின்றன” என்று தண்டோரா போட்டபடி தெருக்களில் வேலையாட்கள் போனார்கள். இந்த அறிவிப்பைக் கேட்ட மக்களில் பலரும் தலைவரைச் சந்தித்து நீளமான கதைகளைச் சொன்னார்கள். ஆனால், அவரை ரசிக்க வைக்க முயற்சி செய்தார்கள். ஆனால், யாராலும் அவரை ரசிக்க வைக்கவும் முடியவில்லை; சிரிக்க வைக்கவும் முடியவில்லை.
“இது நீளமான கதையே இல்லை. எனக்கு சிரிப்பே வரவில்லை” என்று கதை சொல்ல வந்தவர்களைத் திருப்பி அனுப்பிக்கொண்டிருந்தார் தலைவர்.
ஓரிரு நாட்கள் கழித்து, சிறுவன் ஒருவன் தலைவருக்குக் கதை சொல்ல வந்தான். “நான் உலகின் நீளமான கதையைச் சொல்லி உங்களை ரசிக்க வைக்க முயற்சி செய்யட்டுமா?” என்று கேட்டான்.
உடனே தலைவர், “சரி சரி, இங்கே வந்து உட்கார்ந்து உன் கதையைச் சொல்லு பார்ப்போம்” என்றார்.
சிறுவன் கதையைச் சொல்லத் தொடங்கினான்.
“பல ஆண்டுகளுக்கு முன்னால், மொகாம்போ என்ற மனிதன் வாழ்ந்துவந்தான். சாப்பிடுவதில் அவனை மிஞ்ச ஆளே இல்லை. எப்போதும் சாப்பிட்டுக்கொண்டேயிருப்பான். அவனுக்கு வயிறு ரொம்ப யாராலும் சாப்பாடு போட முடியவில்லை. மொகாம்போவைப் பற்றி கேள்விப்பட்ட அந்த நாட்டு ராஜா, ‘அவனை என்னிடம் அழைத்துவாருங்கள்! நான் அவனுக்கு சாப்பாடு போடுகிறேன்’ என்று சொன்னார்.
ராஜா தன் மக்களிடம் பல ஆயிரக்கணக்கான பானைகளில் சூப்பையும், மாமிச உணவுகளையும், பழங்களையும் எடுத்துவரச் சொல்லிக் கட்டளையிட்டார். நூற்றுக்கணக்கான ஒட்டகங்கள் பானைகளை சுமந்தபடி ராஜாவின் மாளிகைக்கு வந்து நின்றன. மொகாம்போ சாப்பிடுவதைப் பார்க்க மக்கள் திருவிழாபோல கூடிநின்றார்கள்.
அதன் பிறகு, மொகாம்போ வந்தான். மேளதாளத்துடன் அவனை வரவேற்றார்கள். ராஜாவை மொகாம்போ வணங்கிய பிறகு சாப்பிடத் தயாரானான்.
“நான் சாப்பிடுவதைப் பாருங்கள்! நான் சாப்பிடுவதைப் பாருங்கள்!’ என்று மக்களிடம் கூறியபடியே அவன் சாப்பிட ஆரம்பித்தான். முதலில் சூப்பிலிருந்து தொடங்கினான். அவன் சூப்பைக் குடித்தான், குடித்தான், குடித்துக்கொண்டேயிருந்தான்….”
“ம்.. அப்புறம் என்னவாயிற்று” என்று சிறுவனிடம் கேட்டார் தலைவர். “சூப்களைக் குடித்த பிறகு மொகாம்போ என்ன செய்தான்?”
“அய்யோ தலைவரே, அவன் இப்போதுதான் முதல் பானை சூப்பைக் குடித்திருக்கிறான். இன்னும் எத்தனை ஆயிரம் பானைகள் இருக்கின்றன? அதனால், கொஞ்சம் பொறுமையாக இருங்கள். அவன் ஒவ்வொரு பானையில் இருந்த சூப்பையும் குடித்தான், குடித்தான், குடித்துக்கொண்டேயிருந்தான்” என்றான் சிறுவன்.
இப்படிச் சொல்லி சொல்லி மாலை வேளையாகிவிட்டது. அந்தச் சிறுவன் இதையே திரும்பித் திரும்பி சொல்லிக்கொண்டிருந்தான்.
தலைவர் சோர்வடைந்தார். அடுத்த நாள் காலை வரை, கதை சொல்வதை நிறுத்தி வைக்கச்சொன்னார் அவர். பொழுது விடிந்தது. சிறுவன் தன் கதையை மீண்டும் சொல்லத் தயாரானான்.
“மொகாம்போவைப் பற்றி இப்போது என்ன சொல்லப்போகிறாய்?” என்று கேட்டார் தலைவர்.
“தலைவரே, அவன் சூப்களைக் குடித்து முடித்துவிட்டான். இப்போது மாமிசங்களையும், பழங்களையும் சாப்பிடத் தொடங்கியிருக்கிறான். அவன் சாப்பிட்டான், சாப்பிட்டான், சாப்பிட்டுக்கொண்டேயிருந்தான்.”
இன்னும் சத்தமான குரலில், “அப்புறம் அவன் சாப்பிட்டான், சாப்பிட்டான், சாப்பிட்டுக்கொண்டேயிருந்தான்” என்று தன் கதையைத் தொடர்ந்தபடி இருந்தான் சிறுவன்.
சிறுவனிடம் வசமாக மாட்டிக்கொண்டோம் என நினைத்துத் தலைவர் நெளிந்தார். கூடியிருந்த மக்கள் கலகலவென்று சிரித்தார்கள்.
“ஐய்யய்யோ, இத்தோடு உன் கதை போதும்பா. உன் கதைதான் உலகிலேயே நீளமான கதைன்னு ஒப்புக்கொள்கிறேன்!'' என்றார் தலைவர்.
அதோடு சிறுவனுக்கு நிறைய பரிசுகளைக் கொடுத்து வழியனுப்பினார் தலைவர். பரிசுகளுடன் ஒட்டகத்தின் மீதேறித் தன் வீட்டுக்குச் செல்லத் தயாரானான் சிறுவன்.
அப்போது அந்தச் சிறுவன், “அவன் சாப்பிட்டான், சாப்பிட்டான், சாப்பிட்டுக்கொண்டேயிருந்தான்” என்று திரும்பவும் சொல்ல ஆரம்பிக்க, தலைவரும் ஊர் மக்களும் தலைதெறிக்க ஓடினார்கள்.
(ஆப்ரிக்க நாட்டுப்புறக் கதையைத் தழுவியது)
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT