Published : 22 Dec 2021 11:20 AM
Last Updated : 22 Dec 2021 11:20 AM
‘வீட்டுக்குள்ளே பெண்ணைப் பூட்டி வைப்போம்’ என்று படித்திருக்கிறேன். எதற்காகப் பெண்களை வீட்டுக்குள் பூட்டி வைத்தார்கள், டிங்கு?
- சு.அ. யாழினி, 9-ம் வகுப்பு, ஸ்ரீ விக்னேஷ் வித்யாலயா, திருச்சி.
இப்படியெல்லாம் புத்திசாலித்தனமாகக் கேள்வி கேட்டுவிடக் கூடாது என்பதற்காகத்தான், யாழினி. வீட்டுக்குள் பூட்டி வைப்போம் என்றால், அறைக்குள் தள்ளி பூட்டி வைப்பதல்ல. இன்று ஓரளவுக்குப் பெண்கள் படிக்கிறார்கள், வேலைக்குச் செல்கிறார்கள், சொந்தமாக முடிவெடுக்கிறார்கள். ஆனால், நூறு ஆண்டுகளுக்கு முன்பு இதுபோன்ற சூழல் நிலவவில்லை. நம் நாட்டில் மட்டுமின்றி, உலகின் பெரும்பாலான பகுதிகளிலும் இதே நிலைமைதான் இருந்தது.
ஆண்கள் வேலைக்குச் சென்று பணம் ஈட்டுபவர்களாகவும் பெண்கள் வீட்டு வேலைகளைச் செய்து, குழந்தைகளைக் கவனித்து, குடும்பத்தைப் பார்த்துக்கொள்பவர்களாகவும் வைக்கப்பட்டிருந்தனர். அதனால், அவர்களுக்குக் கல்வி உள்பட ஆண்களுக்கு இருந்த பல உரிமைகளும் மறுக்கப்பட்டிருந்தன. ஆணுக்குக் கிடைக்கும் உரிமைகள் ஏன் நமக்குக் கிடைக்கவில்லை என்று பெண்கள் யோசிக்க ஆரம்பித்தனர். ஆண்களின் உழைப்பு சமூகத்துக்குப் பயன்பட்டது. ஆனால், பெண்களின் உழைப்பு வீட்டுக்குள் முடங்கிவிட்டது.
சமூகத்துக்குப் பயன்படக்கூடிய உழைப்பைச் செலுத்த வேண்டும் என்றால் அதற்குப் படிப்பு முக்கியம். படித்தால் நல்ல வேலை கிடைக்கும். சம்பாத்தியமும் வரும் என்பதைப் புரிந்துகொண்டவுடன் வீட்டைவிட்டு பெண்கள் வெளியே வர ஆரம்பித்தார்கள். உடனே அவர்களுக்கான உரிமைகளை இந்தச் சமூகம் வாரிவழங்கிவிடவில்லை. கல்வி, வேலை, வாக்குரிமை, சொத்துரிமை என ஒவ்வொன்றையும் போராடித்தான் பெண்கள் பெற வேண்டியிருந்தது. இன்னும்கூட அந்தப் போராட்டம் முடிந்துவிடவில்லை. ஆண்-பெண் சமத்துவத்துக்கான போராட்டம் தொடர்ந்துகொண்டேதான் இருக்கிறது. அடுத்த நூறாண்டுக்குள் அதையும் பெண்கள் பெற்றுவிடுவார்கள் என்று நம்புவோம்!
1816 பேரழிவு பற்றிச் சொல்ல முடியுமா, டிங்கு?
- நே. சான்டோ, 8-ம் வகுப்பு, டான்பாஸ்கோ பள்ளி, திருப்பத்தூர்.
வட அமெரிக்கா, கனடா, ஐரோப்பாவின் சில பகுதிகளில் 1816ஆம் ஆண்டு கோடைகாலம் வரவில்லை. வழக்கத்தைவிட குளிர் மிக அதிகமாக இருந்தது. இதனால், போதிய சூரிய ஒளி கிடைக்காததால் விவசாயம் செய்ய இயலவில்லை. பஞ்சம் ஏற்பட்டது. இந்தப் பஞ்சத்தால் உணவின்றி சுமார் ஒரு லட்சம் மக்கள் உயிரிழந்ததாகச் சொல்லப்படுகிறது.
வரலாற்றில் மிக மோசமான பேரழிவு நிகழ்ந்த ஆண்டாக 1816 நிலைத்துவிட்டது. 1815ஆம் ஆண்டு இந்தோனேஷியாவில் டாம்போரா எரிமலை வெடித்தது. இது வானிலையில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்த எரிமலை வெடிப்புக்கும் 1816ஆம் ஆண்டு கோடைகாலம் வராததற்கும் தொடர்பு இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கருதினர், சான்டோ.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT