Published : 09 Mar 2016 11:24 AM
Last Updated : 09 Mar 2016 11:24 AM
பாண்டு: ஹாய் வாண்டு, என்னப்பா ஞாயிற்றுக்கிழமை வந்தா உன்னைப் பார்க்கவே முடிய மாட்டேங்குது.
வாண்டு: அப்படியெல்லாம் இல்லையே. போன ஞாயிற்றுக்கிழமை அப்பா, அம்மாகூட வெளியே போனேன். அதை வைச்சு கேக்கறியா?
பாண்டு: வெளியே போறதுன்னா உனக்குதான் அல்வா சாப்பிடுற மாதிரியாச்சே. பீச் போனீங்களா?
வாண்டு: பீச்சுக்கு மட்டுமல்ல, கிண்டி பாம்புப் பண்ணைக்கும் போயிருந்தோம்.
பாண்டு: ஓ... பாம்புப் பண்ணையா? விதவிதமாப் பாம்புகளையெல்லாம் பார்த்திருப்ப.
வாண்டு: ஆமா பாண்டு. நிறைய பாம்புகளைப் பார்த்தேன். பார்க்கவே பயமா இருந்துச்சு. அதேசமயம் பாம்புகள் பத்தி எழுதி வைச்சிருந்த தகவல்களைத் தெரிஞ்சுக்கவும் முடிஞ்சது.
பாண்டு: என்கிட்டகூட ஒரு பாம்பு பண்ணை சங்கதி இருக்கு வாண்டு.
வாண்டு: கிண்டி பாம்புப் பண்ணை பத்தியா?
பாண்டு: இல்லை வாண்டு. இது இங்கிலாந்துல இருக்குற பாம்புப் பண்ணை செய்தி.
வாண்டு: அது என்னான்னு சட்டுன்னு சொல்லேன்.
பாண்டு: இங்கிலாந்துல வொடோங்கோன்னு ஒரு ஊரு இருக்கு. கிண்டியில இருக்குற மாதிரி அங்கேயும் ஒரு பாம்புப் பண்ணை இருக்கு. இந்தப் பாம்பு பண்ணையில அபூர்வமா இரட்டைத் தலையோட ஒரு பாம்பு பிறந்திருக்கு.
வாண்டு: இரட்டைத் தலையோடயா? கேட்கவே ஆச்சரியமா இருக்கே.
பாண்டு: ஆமா ஆச்சரியம்தான். அந்தப் பாம்புப் பண்ணையில இருக்குற ஐந்து வயசு பாம்பு ஒண்ணு, கொஞ்ச நாளைக்கு முன்னால 10 முட்டைகளைப் போட்டுச்சாம். அந்த முட்டைகள்ல இருந்து பாம்புக் குஞ்சுகள் வெளியே வந்துச்சு. ஒரு முட்டையிலருந்து மட்டும் இரண்டு பாம்போட ரெண்டு தலைகள் மட்டும் வெளிவந்திருக்கு. இதைப் பார்த்து பாம்புப் பண்ணையில இருக்குறவங்க முதல்ல பயந்துட்டாங்க.
வாண்டு: கேட்குறப்பவே பயமா இருக்குன்னா, பார்த் தவங்களுக்குப் பயம் வராதா, என்ன?
பாண்டு: முழுசா கேளுப்பா. பாம்புக் குட்டி முழுசா வெளியே வந்த பிறகு அதுக்கு இரண்டு தலை இருந்ததைப் பார்த்திருக்காங்க. இது ஒட்டிப் பிறந்த இரட்டைப் பாம்புகள்ன்னு சொல்றாங்க. இப்படி அரிதாகத்தான் பாம்பு பிறக்குமாம். இந்த இரட்டைத் தலை பாம்புகளுக்கு கதனா, வகீசாஷின்னு பெயர் வைச்சுட்டாங்கப்பா.
வாண்டு: ஓ… பேருகூட வைச்சுட்டாங்களாம்... அதை விடு, உன்னோட குட்டித் தம்பி எப்பவும் புதுசா பொம்மை எடுத்துட்டு வரானே, வீட்டுல நிறைய பொம்மைகள வாங்கி வைச்சுருக்கீங்களா?
பாண்டு: அதை ஏன் கேக்குற? வீடு பூரா பொம்மையா கிடக்கு. பொம்மைகள்னா அவனுக்கு ரொம்ப உசுரு. பொம்மைகளுக்கு நடுவுலதான் தூங்குறான்னா பார்த்துக்கோயேன்.
வாண்டு: நாமளும் அப்படித்தானே இருந்தோம்.
பாண்டு: அதெல்லாம் சரி, இப்போ எதுக்கு பொம்மை கதையை பேசிக்கிட்டு.
வாண்டு: விஷயம் இல்லாம எதையாவது நாம பேசுவோமா? விஷயம் இருக்குப்பா.
பாண்டு: பொம்மையில அப்படி என்ன விஷயம் இருக்கு வாண்டு?
வாண்டு: இருக்கே. ஜப்பான்ல பொம்மைகள் தயாரிக்குற ஒரு கம்பெனி இருக்கு. அந்த கம்பெனி பேரு பண்டாய் (Bandai). அங்க விதவிதமா பொம்மைகள் செய்வாங்க. உன் தம்பி மாதிரி ரொம்ப குட்டி பசங்களுக்குப் புடிச்ச மாதிரி பொம்மைகள நிறைய செய்யுறாங்க. புதுசா கார்ட்டூன் கதாபாத்திரமான போக்கேமான் (Pokemon) உருவத்துல பெட் பொம்மை ஒன்றைச் செஞ்சிருக்காங்க.
பாண்டு: பெட் வடிவத்துலையா? அப்போ வீட்டுல இருக்குற பெட் மாதிரி இதுவும் ரொம்ப பெரிசா இருக்குமோ?
வாண்டு: இல்லை பாண்டு. குட்டிப் பசங்க அந்த பெட்ல படுத்து தூங்குற மாதிரி குட்டி பெட்டுதான். குட்டிப் பசங்க அதுல படுத்து ஜம்முன்னு தூங்கலாம். அதோட, பொம்மை அவுங்களோடயே இருக்குற மாதிரி உணர்வையும் தருமில்லையா?
பாண்டு: சின்னப் பசங்களைக் கவருவதற்காக இது மாதிரியெல்லாம் பொம்மை வர ஆரம்பிச்சிடுச்சா. இந்த பொம்மையைப் பத்தி என் குட்டித் தம்பிக்கிட்ட சொல்லிடாத வாண்டு. அதை வாங்கிக் கொடுன்னு அம்மாகிட்ட தொல்லை பண்ணுவான்.
வாண்டு: இதை ஒரு தகவலாத்தான் உன்கிட்ட சொன்னேன். அப்புறம், இன்னைக்குப் பூரா வெளிநாட்டுத் தகவல்களையே பேசிக்கிட்டு இருக்கோமே. நம்மூர்ல ஒண்ணுமே இல்லையா பாண்டு?
பாண்டு: ஏன் இல்லை? நம்மூர் குட்டிப் பையன் செய்தி ஒண்ணு இருக்கே.
வாண்டு: அப்படியா? நான் கேட்டாதான் அதைச் சொல்லுவியா? நீயா சொல்ல மாட்டியா?
பாண்டு: அட இருப்பா. சொல்லாம எங்க போகப்போறேன். சென்னையில வருண் ராம்னு ஒரு குட்டிப் பையன் இருக்கான். அவனுக்கு இரண்டரை வயசுதான் ஆகுது. அந்தக் குட்டி பையன் போன டிசம்பர்ல ஒரு சாதனையைப் படைச்சான். ஒரு நிமிஷத்துல 52 வடிவங்களையும், அதோட அளவுகளையும் மனப்பாடமா சொன்னான்.
வாண்டு: இரண்டரை வயசுலேயே இவ்வளவு ஞாபக சக்தியா?
பாண்டு: ஆமா வாண்டு. இதை சாதனையாக ‘இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்’ அங்கீகரிச்சு பரிசு கொடுத்தாங்க. இப்போ வருண் ஸ்ரீராமோட சாதனையை அதிகாரபூர்வமா அவுங்களோட இணையதளத்துல போட்டிருக்காங்க.
வாண்டு: இந்த வயசுலேயே சாதிச்ச அந்தக் குட்டிப் பையனை நாமளும் பாராட்டிடுவோம்.
பாண்டு: ஆமா பாராட்டுவோம். சரி வாண்டு, எனக்குப் பசிக்குதுப்பா. நான் வீட்டுக்குப் போறேன்.
வாண்டு: சரி சரி. டாட்டா…
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT