Published : 15 Dec 2021 03:06 AM
Last Updated : 15 Dec 2021 03:06 AM
காற்றில் ஆக்சிஜன், நைட்ரஜன் உள்படப் பல வாயுக்கள் இருக்கின்றன. அவற்றில் ஆக்சிஜனை மட்டும் நாம் எப்படி சுவாசிக்கிறோம், டிங்கு?
- அனஃபா ஜகபர், 10-ம் வகுப்பு, பொன் ஜெஸ்லி பப்ளிக் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி, நாகர்கோவில்.
நல்ல கேள்வி அனஃபா. காற்றில் ஆக்சிஜன், நைட்ரஜன் போன்ற பல வாயுக்கள் கலந்துதான் இருக்கின்றன. நாம் சுவாசிக்கும்போது கலவையான வாயுக்களைத்தான் உள்ளே இழுக்கிறோம். ஆனால், நுரையீரல் எல்லா வாயுக்களையும் எடுத்துக்கொள்வதில்லை. நம் ரத்தச் சிவப்பு அணுக்கள் காற்றிலுள்ள ஆக்சிஜனை மட்டும் எடுத்துக்கொள்வதுபோல் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. உள்ளே செல்லும் ஆக்சிஜன், வெளியே வரும்போது அசுத்தமாகி, கார்பன் டை ஆக்சைடு வாயுவாக வருகிறது. வெளியில் இருக்கும் கார்பன்டை ஆக்சைடைவிட உள்ளிருக்கும் கார்பன்டை ஆக்சைடின் அழுத்தம் அதிகமாக இருக்கும். அதனால் அழுத்தம் குறைந்த இடத்தை நோக்கி, கார்பன்டை ஆக்சைடு வெளியேறிவிடுகிறது.
தோல் உரிந்தால் வளர்வதாக அர்த்தமா, டிங்கு?
- வி. ஹேம வர்ஷினி, 9-ம் வகுப்பு, எஸ்.ஆர்.வி. பப்ளிக் பள்ளி, திருச்சி.
இறந்த தோல் செல்கள் நம் கண்களுக்குத் தெரியாமல் தினமும் உதிர்ந்துகொண்டேதான் இருக்கின்றன. நம் கண்களுக்குத் தெரியும்விதத்தில் தோல் உரிந்தால், மருத்துவரைத்தான் பார்க்க வேண்டும் ஹேம வர்ஷினி. தோல் உரியும் பகுதியில் போதுமான அளவுக்குக் காற்று, ரத்த ஓட்டம் இல்லாமல் இருக்கலாம் அல்லது அலர்ஜியாக இருக்கலாம். வேறு ஏதாவது தோல் தொடர்பான பிரச்சினைகளாகவும் இருக்கலாம் என்பதால் மருத்துவரிடம் செல்வது நல்லது.
பெண்கள் நெற்றியில் பொட்டு வைப்பது ஏன், டிங்கு?
- பி. சுபிக் ஷா, 9-ம் வகுப்பு, ஸ்ரீவிக்னேஷ் வித்யாலயா மேல்நிலைப் பள்ளி, கூத்தூர், திருச்சி.
உலகம் முழுவதும் உள்ள பெண்கள் அனைவரும் பொட்டு வைத்துக்கொள்வதில்லை. இந்தியா, நேபாளம், வங்க தேசம், இலங்கை, மொரிஷியஸ் ஆகிய ஆசிய நாடுகளில் உள்ள பெண்கள் நெற்றியில் பொட்டு வைத்துக்கொள்கிறார்கள். நீண்ட காலமாக இது மதம் தொடர்பான ஒரு விஷயமாக இருந்தது. யாரெல்லாம் பொட்டு வைக்கலாம், என்ன நிறத்தில் பொட்டு வைக்கலாம் என்கிற கட்டுப்பாடுகள் எல்லாம் ஒரு காலத்தில் இருந்தன. இப்போது விதவிதமான வடிவங்களில் விதவிதமான வண்ணங்களில் பொட்டுகளை வைத்துக்கொள்வது ஃபேஷனாகிவிட்டது. பொட்டு வைத்துக்கொள்வதில் இருக்கும் கட்டுப்பாடுகளும் மறைந்துவருவது ஆரோக்கியமான விஷயமாக இருக்கிறது, சுபிக் ஷா.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT