Published : 15 Dec 2021 03:06 AM
Last Updated : 15 Dec 2021 03:06 AM
ஏடிஎம் கருவியில் கார்டை நுழைத்ததும் நம் அடையாளத்தை உறுதிசெய்ய ‘பின்’ எனப்படும் கடவு எண்ணைப் பதிவுசெய்கிறோம். உடனே இணையம் மூலம் வங்கியைத் தொடர்புகொண்டு, இந்த நபரின் கடவு எண் சரியா என்று பார்க்கும், ஏடிஎம். அதற்குப் பிறகுதான் பணத்தை அளிக்கும். இவ்வளவு பாதுகாப்போடு இருந்தாலும் சில விஷமிகள் ரகசியத் தகவலைக் கைப்பற்றிவிடுகிறார்கள். இந்தப் பிரச்சினைக்கு ஐன்ஸ்டைனின் சார்பியல் தத்துவத்தின் உதவியுடன் புது சைபர் பாதுகாப்பு முறைமையை விஞ்ஞானிகள் உருவாக்கியிருக்கிறார்கள்.
தேர்வு நடக்கும் நாளன்று இரு மாணவர்கள் தூங்கிவிட்டார்கள். தாமதமாக வந்த அவர்கள், “சரியான நேரத்துக்குக் கிளம்பினோம். வழியில் கர்ப்பிணி ஒருவர் வந்த கார் பஞ்சர் ஆகிவிட்டது. அந்த கார் சக்கரத்தை மாற்றிக் கொடுத்ததில் நேரமாகிவிட்டது. எங்கள் இருவருக்கு மட்டும் தனியாகத் தேர்வு வைக்க வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்கள்.
ஒரு வாரம் கழித்துத் தேர்வு எழுதச் சொன்னார் ஆசிரியர். இரு மாணவர்களும் இடைப்பட்ட காலத்தில் நன்றாகப் படித்து, தேர்வுக்கு வந்தனர். அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. இரண்டு மாணவரையும் தனித்தனி அறையில் அமரச் சொன்னார் ஆசிரியர். கேள்வித் தாளில் இரண்டே கேள்விகள் இருந்தன. பஞ்சர் ஆனது முன் டயரா அல்லது பின் டயரா? பஞ்சர் ஆனது இடப் பக்க டயரா அல்லது வலப் பக்க டயரா? பொய் சொல்லியிருந்தால் இரண்டு மாணவர்களும் ஒரே பதிலைக் கூற முடியாது. உண்மை எனில் இரண்டு பேரின் தகவல்களும் ஒத்துப்போகும்.
இதே அடிப்படையில்தான் புதுமையான சைபர் பாதுகாப்பு முறைமை செயல்படுகிறது. கடவு எண்ணை ஏடிஎம் கருவியில் செலுத்தியதும், அந்த எண் சரியா என்று வங்கி உறுதிசெய்யும்.
நடந்த சம்பவம் உண்மையா என அறிய ஆசிரியர் முழு சம்பவத்தையும் ஆராய்ச்சி செய்யவேண்டியது இல்லை. எந்த டயர் பஞ்சர் ஆனது, கர்ப்பிணி எங்கே உட்கார்ந்திருந்தார், காரின் நிறம் என்ன என்பது போன்ற சில கேள்விகளைக் கேட்கலாம். இருவரும் ஒரே பதிலைக் கூறுகிறார்களா இல்லையா என்பதை வைத்து அவர்கள் கூறுவது உண்மையா பொய்யா என்பதைக் கண்டுபிடித்துவிடலாம். அதே போலச் சில சவால் கேள்விகளுக்கு இருவரும் அளிக்கும் பதில் ஒரே மாதிரி இருந்தால் ஏடிஎம் பயனரை உறுதிசெய்து, சேவை தரும் வகையில் இந்த சைபர் பாதுகாப்பு முறைமை அமைகிறது.
புதிய சைபர் பாதுகாப்பு முறைமையில் கடவு எண்ணைப் பயன்படுத்துவதில்லை. மாறாகத் தனித்துவம் கொண்ட கோட்டுரு (Graph coloring) வங்கிக் கணக்கோடு இணைக்கப்படும்.
கோட்டுருவில் முனைகள் எனப்படும் புள்ளிகள் இருக்கும். இரண்டு ஜோடி புள்ளிகளை விளிம்பு என்கிற சிறு கோடு இணைக்கும். ஒவ்வொரு முனையும் சிவப்பு, நீலம், மஞ்சள் ஆகிய மூன்று நிறங்களில் ஏதாவது ஒரு நிறத்தைக் கொண்டிருக்கும். அந்தப் புள்ளி மஞ்சள் எனில் அதனை இணைக்கும்
கோடுகளின் முனையில் உள்ள எந்தப் புள்ளியும் மஞ்சள் நிறத்தில் இருக்காது. அதாவது அடுத்துள்ள முனைகள் ஒரே நிறத்தைக் கொண்டிராதவாறு கோட்டுருவின் முனைகளுக்கு நிறங்கள் தீட்டப்பட்டிருக்கும்.
வாடிக்கையாளர் கார்டை நுழைக்கும்போது இந்தக் கோட்டுருவில் குறிப்பிட்ட புள்ளியின் ஜோடியாக உள்ள புள்ளியின் நிறம் என்ன என்ற கேள்வியை ஏடிஎம், வாடிக்கை யாளரிடமும் வங்கியிடமும் கேட்கும். இருவரிடமும் இதே கோட்டுரு உள்ளதால், இருவரும் சரியான பதிலைக் கூற முடியும். இருவரும் ஒரே பதிலைக் கூறினால், அடையாளத்தை உறுதிசெய்து ஏடிஎம் பணப் பட்டுவாடா செய்யும்.
ஒரு ஜோடி புள்ளி என்றால் அது மஞ்சள் - சிவப்பு, மஞ்சள் - நீலம், நீலம் - சிவப்பு என்கிற மூன்று சாத்தியக்கூறுகள் உள்ளன. எனவே மூன்றில் ஒருமுறை சைபர் திருடர்கள் வெற்றி பெற்றுவிடலாம். எனவே ஒரு ஜோடி புள்ளிகள் அல்ல; பல ஜோடி புள்ளிகளின் நிறங்களை இனம் காணச் சொல்லிக் கேட்கும். இந்தச் சூழலில் வெறும் ஊகம் வெற்றி தராது.
முதல்முறை முன்பக்க டயரா அல்லது பின்பக்க டயரா என்றும், அடுத்த முறை கர்ப்பிணிப் பெண் எந்த சீட்டில் உட்கார்ந்திருந்தார் என்றும் கேள்வியை மாற்றிக் கேட்கலாம். முதல்முறை தகவலை ஹாக்கிங் செய்பவர் திருடிப் பெற்றாலும் இரண்டாம் முறை அந்தப் பதில் உதவாது. அதே போலக் கடவுக் கோட்டுருவின் சில ஜோடிகளின் நிறங்களை அறிந்துகொண்டாலும் அதை மட்டும் வைத்து முழுக் கோட்டுருவை ஊகிக்க இயலாது.
மேலும் ஒவ்வொரு முனையின் நிறமும் சீரான கால இடைவெளியில் மாறும். மஞ்சள் புள்ளி சிவப்பு எனவும் நீலப் புள்ளி மஞ்சள் எனவும் மாறும். எனவே ஹேக்கிங் செய்பவர்கள் இடையில் புகுந்து தகவலைத் திருடினாலும் பயன் இல்லை. ஐன்ஸ்டைனின் சார்பியல் தத்துவத்தின்படி ஒளியின் வேகத்துக்குக் கூடுதலாகத் தரவுகள் பயணம் செய்ய முடியாது.
கணினி பயன்பாடு வளர்ந்து வரும்போது அதற்கு இணையாக சைபர் குற்றங்கள் பெருகுகின்றன. இந்தச் சூழலில் கணிதவியல் மற்றும் சார்பியல் துணையோடு சைபர் பாதுகாப்பை உறுதிப்படுத்த இந்த முறை உதவும் என்கிறார்கள்.
கட்டுரையாளர், விஞ்ஞானி தொடர்புக்கு: tvv123@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT