Published : 23 Mar 2016 12:51 PM
Last Updated : 23 Mar 2016 12:51 PM
வட மாநிலங்களில் இன்றைக்கு (மார்ச் 23) ஹோலி கொண்டாடப்படுகிறது. உங்கள் வீட்டில் அருகே உள்ள வட இந்தியர்களுடன் சேர்ந்து நீங்களும்கூட ஹோலி கொண்டாடியிருப்பீர்கள். இந்த வண்ணங்களின் பண்டிகையும், நம்முடைய பொங்கலும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியானவைதான்.
¬ ‘ஹோலா' என்ற வார்த்தைக்கு ‘நல்ல அறுவடைக்கு நம்முடைய நன்றியைத் தெரிவிப்பது' என்று அர்த்தம். நிலம் வளமாகத் திகழ வேண்டும் என்ற அம்சமும் ஹோலி பண்டிகையில் உள்ளடங்கி இருக்கிறது.
¬ அறுவடையைக் கொண்டாடடுவதோடு, அடுத்து வரும் வசந்த காலத்தில் இயற்கை வளம் செழிப்பாக இருந்து மனிதர்கள் மகிழ்ச்சியடைய வேண்டும் என்பதே இந்தப் பண்டிகையின் நோக்கம். அதற்காகத்தான் வண்ணப் பொடிகளை ஒருவர் மற்றொருவர் மீது வாரி இறைத்துக்கொண்டு, மகிழ்ச்சியைப் பரிமாறிக்கொள்கிறார்கள்.
¬ வசந்த காலத் தொடக்கத்தை வரவேற்கும் முகமாகவே ஹோலி உற்சாகமாகக் கொண்டாடப்படுகிறது. இதற்கு ‘வசந்த மகா உற்சவம்' என இன்னொரு பெயரும் உண்டு.
¬ வட மாநிலங்களில் நடுக்கும் குளிர் விடைபெற்று, இளஞ்சூடான வசந்தம் வருவதன் அறிகுறியாக ஹோலி கருதப்படுகிறது.
¬ பொதுவாக மார்ச் மாத முழு நிலவுக்கு அடுத்த நாள் ஹோலி வருகிறது. இரண்டு நாள் விழாவாக அது கொண்டாடப்படுகிறது. முழு நிலவு நாளன்று ‘சின்ன ஹோலி' என்று அழைக்கப்படும். அன்று சொக்கப்பனைக்குத் தீ வைத்து, அதில் தேவையில்லாத பொருட்களைப் போடும் வழக்கம் இருக்கிறது. இது நம்முடைய போகிப் பண்டிகையைப் போலவே இருக்கிறது அல்லவா? ‘பழையன கழிந்து புதியன புக வேண்டும்' என்பதன் அடையாளமாக இப்படிச் செய்யப்படுகிறது. ஹோலி என்றால் தீ - எரிப்பது என்றொரு அர்த்தமும் உண்டு.
¬ ஹோலியின்போது யாரும் யாரைப் பற்றியும் கவலைப்படுவதில்லை. தெருவுக்கு வந்து பார்க்கும் எல்லோர் மீதும் வண்ணப் பொடிகளைத் தூவுவது, வண்ண நீரை பீய்ச்சி அடிப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள்.
¬ இந்த வண்ணப் பொடிகள் வேதிப்பொருட்களால் செய்யப்பட்டிருப்பதால் தோல் ஒவ்வாமை, கண் எரிச்சல் போன்ற பிரச்சினைகள் ஏற்படலாம். எனவே செயற்கை வண்ணப் பொடிகள், வண்ண திரவங்களுக்கு மாற்றாக இயற்கை வண்ணங்கள், சாயங்களைப் பயன்படுத்துவதே நல்லது. இவை விலை குறைவானவை. துணியில் கறையாகாமல் எளிதில் கழுவக்கூடியவையும்கூட. மஞ்சள், மருதாணிப் பொடி போன்றவற்றை அப்படியே வண்ணப் பொடியாகப் பயன்படுத்தலாம். பீட்ரூட், குல்மோஹர் மலர், சாமந்தி மலர் போன்றவற்றைக் கொண்டு வண்ண திரவங்களை வீட்டிலேயே உருவாக்கலாம்.
¬ பண்டைக் காலத்தில் காட்டு மலர்கள், இலைகளிலிருந்து ஹோலி வண்ணங்கள் உருவாக்கப்பட்டன. உதாரணமாக, புரச மர மலர்களிலிருந்து ஆரஞ்சு வண்ணம் எடுக்கப்பட்டது.
¬ ஹோலியை ஒட்டி உறியடித் திருவிழாக்கள் வடமாநிலங்களில் மிகவும் பிரபலம். அப்போது, மிகப் பெரிய பிரமிட் போன்ற உருவத்தை மனிதர்கள் ஒருவர் மேல் மற்றொருவர் நின்று உருவாக்கி, உறியை அடிப்பது வழக்கம்.
¬ ஹோலியின்போது குஜியா (வட இந்தியா), பூரணபோலி (மகாராஷ்டிரா), மால்பூவா போன்ற இனிப்புகள், தண்டாய் எனப்படும் குளிர்பானம் போன்றவை முக்கிய விருந்து உணவாகத் திகழ்கின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT