Last Updated : 09 Mar, 2016 10:59 AM

 

Published : 09 Mar 2016 10:59 AM
Last Updated : 09 Mar 2016 10:59 AM

இது அந்தக் கால வேட்டை!

‘Buffalo Jump Park’ என்ற பெயரில் வட அமெரிக்காவின் பல பகுதிகளில் பூங்காக்கள் உள்ளன. சமவெளியில் 20 அடி உயரக் குன்றுகளுடன் காணப்படும் இந்த அமைதியான பூங்காக்கள் ஒரு காலத்தில் பரபரப்பான இடங்களாக இருந்தவை.

பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவில் வசித்தவர்கள் செவ்விந்திய பூர்வகுடிகள். இவர்கள்தான் அமெரிக்க மண்ணின் மைந்தர்கள். வேட்டையாடுவதே இவர்களது வாழ்க்கை. அதிலும் எருதுகளையே ஒவ்வொரு விஷயத்துக்கும் சார்ந்திருந்தனர். எருதுகளின் தோல்களை வைத்து ஆடைகளைச் செய்தார்கள். கூடாரங்களைப் போட்டனர். படுக்கை விரிப்புகளைத் தயாரித்தனர். எருதுகளின் முடிகளையும் வாலையும் கயிறுகளாகவும் தூரிகைகளாகவும் பயன்படுத்தினார்கள். தசைநார்களில் இருந்து நூல், வில் நாண் போன்றவற்றை உருவாக்கினர். எலும்புகளையும் கொம்புகளையும் பல்வேறு கருவிகளாக மாற்றினர். இறைச்சியைச் சாப்பிட்டுக்கொண்டனர். அதாவது எருதிலிருந்து உணவு, உடை, தங்கும் இடம் போன்ற அத்தியாவசியமான மனிதத் தேவைகள் எல்லாமே கிடைத்தன.

வரலாற்றுக்கு முந்தைய காலகட்டத்தில் மனிதர்கள் பிரமாதமாக வேட்டையாடினர்கள். மிகச் சிறிய ஆயுதங்கள்கூட இல்லாமல் இந்த வேட்டை நடத்தப்பட்டது. காலம் செல்லச் செல்ல வேட்டையாடுவதிலும் புதுப்புது நுட்பங்கள் புகுத்தப்பட்டன. எருதுக் கூட்டங்களைத் துரத்திச் செல்வார்கள். வேறு வழியின்றி 20 அடி குன்றுகளிலிருந்து எருதுகள் தலை குப்புற விழ ஆரம்பிக்கும். கீழே விழுந்து இறந்துபோன எருதுகளை எடுத்துச் சென்று பயன்படுத்திக்கொள்வார்கள். கருவிகளைப் பயன்படுத்தாமல், பெரிய அளவில் போராட்டங்களை நடத்தாமல் இந்த வேட்டையை எளிமையாக நடத்தினார்கள். இப்படி ஒரு முறை வேட்டையாடினால் ஓர் ஊருக்குத் தேவையான சில மாதங்களுக்கான உணவும் உடையும் கிடைத்துவிடும்.

நல்ல உயரமான குன்றும் ‘V’ வடிவ பாதையும் இருந்தால்தான் இந்த வேட்டை சாத்தியம் என்பதால் பூர்வகுடி மக்கள் குன்றைத் தேடி அலைவார்கள். அப்படி ஓர் இடம் கிடைத்து, அருகில் எருதுக் கூட்டம் வசித்தால் வேட்டைக்குத் தயாராகி விடுவார்கள். ஓர் எருதுக் கன்றை ஒரு மனிதர் துரத்திக்கொண்டு செல்லும்போது, எருது கூட்டம் அவர்களைத் துரத்திக்கொண்டு பின்னால் வரும். குன்று வந்தவுடன் மனிதர்கள் விலகிக்கொள்வார்கள். எருதுகள் பாய்ந்து குதித்துவிடும். V வடிவ பாதையில் மனிதர்கள் இறங்கி, எருதுகளை இழுத்துச் செல்வார்கள்.

தோல்களை எடுத்து ஒரு குழு பதப்படுத்தும். இன்னொரு குழு இறைச்சியை வெட்டும். எதிர்காலத் தேவைக்காக மற்றொரு குழு இறைச்சியைப் பதப்படுத்தும். எருதுகளின் ஒவ்வொரு பாகத்தையும் வீணாக்காமல் பயன்படுத்திவிடுவார்கள்.

இதுபோன்ற எருது வேட்டைகள் 12 ஆயிரம் ஆண்டுகளாகத் தொடர்ந்துவந்துகொண்டிருந்தன. குதிரைகளின் பயன்பாடு வந்த பிறகு கூட்டமாக எருதுகளை வேட்டையாட வேண்டிய அவசியம் இல்லாமல் போனது. தேவையானபோது குதிரைகளில் சென்று எருதுகளை வேட்டையாடினர். காலப் போக்கில் எருதுகள் தலை குப்புற விழும் வேட்டை முற்றிலும் கைவிடப்பட்டது. 200 ஆண்டுகளுக்கு முன்பு எருதுகள் வேட்டையைப் பூர்வகுடி மக்கள் விட்டுவிட்டனர்.

இன்று எருது பூங்காக்கள் பாரம்பரியச் சின்னங்களாகப் பாதுகாக்கப்பட்டுவருகின்றன. எருது வேட்டை குறித்த ஓவியங்கள், மனிதர்கள் பயன்படுத்திய பொருட்கள், பூர்வகுடிகளின் வரலாறு போன்றவை காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கின்றன. பறவைகளை உற்றுநோக்குதல், குன்றுகளில் ஏறுதல், வில் வித்தை பயிற்சி, விலங்குகளைப் பார்த்தல், புகைப்படங்கள் எடுத்தல் போன்ற நிகழ்ச்சிகள் இங்கே நடைபெறுகின்றன.

ஒரு சில இடங்களில் கண்களுக்குப் புலப்படும் எருதுகளின் எலும்புகள் இன்றும் மனிதர்களின் திறமையான வேட்டையை உலகுக்குச் சொல்லிக்கொண்டிருக்கின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x