Last Updated : 16 Mar, 2016 12:38 PM

 

Published : 16 Mar 2016 12:38 PM
Last Updated : 16 Mar 2016 12:38 PM

தேர்வும் உணவும்: குட்டிப் பருப்பின் பெரிய பின்னணி

சாம்பார் இல்லாமல் இட்லி, தோசை, சோற்றை நினைத்துப் பார்க்க முடியுமா? பருப்பில்லாமல் சாம்பார் கிடையாது. விளையாட்டு வீரர்கள் அதிகம் சாப்பிட வலியுறுத்தப்படும் சத்தான உணவுகளில் ஒன்று, பருப்பு வகைகளால் செய்யப்பட்ட சுண்டல். இது, சாயங்கால வேளைகளில் குழந்தைகள் சாப்பிடக்கூடிய சத்தான உணவும்கூட.

பொதுத் தேர்வுகள் தொடங்கியுள்ள இந்த நேரத்தில் நீண்ட நேரம் சுறுசுறுப்பாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கப் பருப்பு வகைகள் உதவக்கூடியவை. மூளையும் நன்றாகச் செயல்படும். அதற்குக் காரணம் பருப்பு வகைகளில் அடங்கியுள்ள அதிக அளவு புரதச்சத்து (Protien).

இந்த ஆண்டை சர்வதேசப் பருப்பு ஆண்டாக (International Pulses year) ஐ.நா. சபை அறிவித்திருக்கிறது. ஊட்டச்சத்துமிக்க பயறு, பருப்பு, மொச்சை வகைகள் தரும் ஊட்டச்சத்தைப் பிரபலப்படுத்துவதே இந்த அறிவிப்பின் நோக்கம். பருப்புகளைப் பற்றி இன்னும் கொஞ்சம் தெரிந்துகொள்வோமா?

# அவரை வகைத் தாவரங்கள் ‘லெக்யுமனேசியே’ (leguminosae) குடும்பத்தைச் சேர்ந்தவை. இவற்றிலிருந்துதான் பெரும்பாலான மொச்சை, பருப்பு, பயறு வகைகள் கிடைக்கின்றன. தாவரங்களின் விதைகள் அல்லது பழங்கள் ஒரு உறைக்குள் பொதிந்து வைக்கப்பட்டிருப்பதைத்தான் ‘லெகுமனேசி’ என்ற சொல் குறிக்கிறது.

# அவரை, துவரையைப் பச்சையாகப் பறித்துப் பயன்படுத்தாமல் அவற்றைக் காய வைத்துக் கிடைக்கும் விதையைப் பத்திரப்படுத்திப் பயன்படுத்தினால், அது பருப்பு எனப்படுகிறது. காய வைத்த பயறு, பருப்பு, மொச்சை வகைகளைப் பல மாதங்களுக்குச் சேமித்து வைக்கலாம். அப்படிச் சேமித்தாலும் அவற்றிலுள்ள ஊட்டச் சத்து குறையாது.

# பல ஆயிரமாண்டுகளாக மனிதர்களின் முதன்மை உணவாகப் பருப்பு வகைகள் திகழ்ந்துவருகின்றன. ஏனென்றால், அவரை, கொண்டைக் கடலை, துவரம்பருப்பு போன்றவை கி.மு. 7000 8000-ம் ஆண்டிலிருந்து பயிரிடப்பட்டு வருவதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன.

# பயறு - மொச்சைத் தாவரங்களை ஊடுபயிராகவும் பயிரிடலாம். இதன் மூலம் ஒரு விவசாயப் பண்ணை அதிக லாபம் பெறும். அது மட்டுமல்லாமல் இந்தப் பயிர்கள் மண்ணில் நைட்ரஜனை நிலைப்படுத்துவதால் மண் வளம் அதிகரித்து, நிலத்தின் உற்பத்தித் திறன் அதிகரிக்கும். அங்கே பறவைகள், பூச்சிகளுக்கு எளிதாக உணவு கிடைப்பதால், பயறு - மொச்சை பயிரிடப்பட்டுள்ள வயல்கள் உயிர் பன்மயத்துடன் (Bio-Diversity) திகழ்கின்றன.

# பயறு - மொச்சை எடுக்கப்பட்ட தாவரத்தின் எஞ்சிய பகுதியைக் கால்நடைகளுக்குத் தீவனமாகப் பயன்படுத்தலாம்.

# வளமற்ற மண், ஓரளவு வறண்ட பகுதிகளில் துவரை, பாம்பரா பீன்ஸ் போன்ற தாவரங்களை வளர்க்கலாம்.

# பயறு-மொச்சைக்கு மிக அதிக விவசாய இடுபொருட்கள் தேவையில்லை என்பதால், பசுங்குடில் வாயுக்களை (Greenhouse Gases) அவை குறைவாக வெளியிடுகின்றன. எனவே, இவற்றை அதிகம் விளைவிப்பது பூமி கூடுதலாக வெப்பமடைவதைக் கட்டுப்படுத்தும்.

# உலகில் பயறு-மொச்சை வகைகள் மிக அதிக எண்ணிக்கையில் இருப்பதால், புவி வெப்பமடைதலால் ஏற்படும் அதிக வெப்பம், அதிக மழை போன்ற பாதிப்புகளைத் தாங்கி, வளரும் பருப்பு வகைத் தாவரங்களைக் கண்டறியவும் வாய்ப்பு இருக்கிறது.

# மனித உடலை வளர்க்கப் புரதம் அத்தியாவசியம். ஆனால், அந்தப் புரதம் மிகக் குறைந்த செலவில், மிகக் குறைந்த ஆதாரங்கள் மூலமாக பயறு, மொச்சைகள் மூலமாகவே கிடைக்கிறது. ஒரு கிலோ கடலைப் பருப்பு - துவரம் பருப்பை விளைவிக்க 50 லிட்டர் தண்ணீர் போதும். அதேநேரம் ஒரு கிலோ கோழிக் கறிக்கு 4,325 லிட்டர் தண்ணீரும், ஒரு கிலோ ஆட்டுக்கறிக்கு 5,520 லிட்டர் தண்ணீரும், ஒரு கிலோ மாட்டுக் கறிக்கு 13,000 லிட்டர் தண்ணீரும் தேவைப்படுகிறது (இது சராசரி அளவு மட்டுமே).

# இந்தியாவில் மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரம், ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம் ஆகிய நான்கு மாநிலங்கள் மட்டும் நாட்டின் 70 சதவீதப் பயறு - மொச்சை சாகுபடியை மேற்கொள்கின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x