Published : 13 Oct 2021 06:10 AM
Last Updated : 13 Oct 2021 06:10 AM
முதல் மாடி ஜன்னல் ஓரம் சாரதா, பிரபா, விமல், கேசவ் ஆகிய நால்வரும் கேரம் விளையாடிக்கொண்டிருந்தார்கள். திடீரென்று காற்று பலமாக வீச, ஜன்னல் கதவுகளை மூட எழுந்தான் விமல். மூட முடியாமல், “ஏய், எல்லாரும் இங்கே பாருங்க” என்று மகிழ்ச்சிக் குரல் கொடுத்தான்.
பின் வீட்டு மாமரத்தில், ஜன்னலை ஒட்டிய ஒரு கிளையில், நான்கு மாங்காய்களுடன் கூடிய ஒரு மாங்கொத்து அவன் கண்ணில் பட்டதுதான் மகிழ்ச்சிக்குக் காரணம்! அதுவும் கைக்கெட்டும் தொலைவில்! எல்லாரும் அந்த மாங்கொத்தை ஆசையுடன் பார்த்தனர். கை நீட்டி மெதுவாகத் தொட்டும் பார்த்தனர். அவற்றின் மேல்புறம் பாதிக்குமேல் மஞ்சள் நிறம் வந்துவிட்டிருந்தது. அந்த மாம்பழத்தின் சுவையே தனி! பின் வீட்டு மகேஷ் ஒருமுறை பள்ளி இடைவேளையில் விமலுக்கு அந்த மாம்பழத் துண்டுகளைக் கொடுத்திருக்கிறான். அன்று முதல் விமலுக்கு அந்த மாம்பழத்தின் மீது ஆசை வந்துவிட்டது.
விமல் அம்மாவைக் கூப்பிட்டு, “அம்மா, அந்த மாங்கொத்தைப் பறித்துப் பழுக்கப் போட்டுச் சாப்பிடலாமா?” என்று கேட்டான்.
“அதெல்லாம் தப்பு. மாங்கொத்திலிருந்து கையை எடு” என்றார் அம்மா கோபமாக.
“அம்மா, பின் வீட்டுக்காரங்க வெளியூர் போயிருக்காங்க. வர பத்து நாள் ஆகும்னு மகேஷ் விளையாடும்போது சொன்னான். அவங்க வர்றதுக்குள்ளே இந்த மாங்கொத்தை அணிலும் காக்கையும் கொத்திக் கீழே தள்ளி வீணாக்கிடும். அதுக்கு நாம பறிச்சு, சாப்பிடலாம்.”
“ஆமாம்மா, விமல் சொல்றது சரிதான்“ என்றனர் மற்றவர்களும்.
இதையெல்லாம் கேட்டுக்கொண்டே பின்னால் வந்து நின்ற அப்பா, “விமல், நமக்குச் சொந்தமில்லாத பொருள், நம்மளத் தேடி வந்தாலும் அந்தப் பொருளுக்கு ஆசைப்படக் கூடாது” என்றார்.
“ஆனா, இந்த மாங்கொத்து யாருக்கும் பயன் இல்லாம வீணாயிடும்” என்றான் விமல். அவன் சொல்வதும் சரி என்று தோன்றியது அப்பாவுக்கு.
“சரி விமல், ஒண்ணு செய்வோம். அந்த மாங்காய்களைப் பறிங்க.”
“ஹைய்யா” என்று எல்லோரும் குதித்தனர்.
“இருங்க, ஒரு நிபந்தனை... மாங்காய் பழுத்து, சாப்பிடறதுக்குள்ளே பின் வீட்டுக்காரங்க வந்துட்டாங்கனா, மாம்பழங்களை அவங்ககிட்டே கொடுத்துடணும்! அப்படியில்லாம அவங்க வர்றதுக்குள்ளே நீங்க சாப்பிட்டுட்டா, அவங்ககிட்டே நடந்ததைச் சொல்லி, அதற்கான பணத்தைக் கொடுத்துடணும். ஏன்னா அவங்க வியாபாரம் செய்யறவங்க” என்றார் அப்பா.
பிள்ளைகள் வேறுவழியின்றி “சரி” என்று சம்மதித்தனர். விமலும் கேசவும் நான்கு மாங்காய்களையும் பறித்தனர். அம்மா அவற்றைப் பழுக்கப் போட்டார்.
மூன்றே நாட்களில் நான்கும் நன்றாகவே பழுத்துவிட்டன. அன்று மதிய உணவு நேரம். உணவருந்தும் மேஜைக்கு மாம்பழக்கூடை வந்துவிட்டது. கமகமவென்று வாசனை பரவியது.
“அப்பா, ஜன்னல் கிட்டே என்ன பார்த்துக்கிட்டிருக்கீங்க? இங்கே வந்து மாம்பழத்தை ‘கட்’ பண்ணிக் கொடுங்க” என்று கூப்பிட்டான் விமல்.
அப்பா மேஜை அருகே வந்தார். “பத்மா, பக்கத்து வீட்டுக்காரங்க நேத்து ராத்திரியே வந்திருக்காங்க. மாமரத்துக்குக் கீழே நின்னு பேசிக்கிட்டிருக்காங்க” என்றார். உடனே அம்மா மாம்பழக் கூடையை எடுத்துச் சென்றுவிட்டார்.
“என்னப்பா நீங்க? பழத்தைச் சாப்பிட்டா என்ன? காசு கொடுத்துடலாம் இல்லே?” என்றான் விமல்.
“விமல், நிபந்தனைப்படி நடப்போம். நாம பழத்தைச் சாப்பிடறதுக்குள்ளே பின் வீட்டுக்காரங்க வந்துட்டா, மாம்பழங்களைக் கொடுத்துடு வோம்ங்கிறதுதானே நிபந்தனை! இப்போ பின் வீட்டுக்காரங்களும் வந்துட்டாங்க. என்ன செய்யலாம்?” என்றார் அப்பா.
“ஆமாம் விமல், அப்பா சொல்வதும் சரிதான்” என்றனர் சாரதாவும் பிரபாவும்.
அம்மா மாம்பழங்களை ஒரு பையில் போட்டு விமலிடம் கொடுத்து, “விமல், இதைப் பின் வீட்டு அத்தைகிட்டே கொடுத்துடு, உங்க மாமரத்துலருந்து பறிச்சதுனு மட்டும் சொல்லிட்டு வந்துடு” என்றார்.
பையுடன் பின்வீட்டை அடைந்தான் விமல். விஷயத்தைச் சொன்னான்.
“அப்படியா சந்தோஷம்!” என்று சொல்லிவிட்டுப் பையுடன் அத்தை உள்ளே சென்றுவிட்டார்.
வீட்டிற்குத் திரும்பி வந்த விமல் ஏமாற்றத்துடன் அமர்ந்திருந்தான். அதைக் கவனித்த அம்மா, “விமல், பக்கத்து வீட்டுப் பொருளை அவங்ககிட்டேயே கொடுத்தாச்சு. சந்தோஷமா இருக்கணும் விமல். நாளைக்குக் கடையிலிருந்து நல்ல மாம்பழம் வாங்கித் தரேன்” என்றார்.
அப்பொழுது அழைப்பு மணி கேட்டது. மகேஷ் வந்திருந்தான். “அத்தை, அம்மா இதைக் கொடுக்கச் சொன்னாங்க” என்று சொல்லிவிட்டு, ஓடிவிட்டான்.
பையைத் திறந்து பார்த்த அம்மாவுக்கு ஆச்சரியமாகிவிட்டது. ”அவங்களோட பழத்தை, அவங்ககிட்ட கொடுக்க ரொம்ப யோசிச்சீங்களே... இங்கே பாருங்க, நீங்க கொடுத்த பழங்களோட அவங்க நாலு பழம் சேர்த்துக் கொடுத்திருக்காங்க” என்றார்.
“அப்படியா!” என்று பையை எட்டிப் பார்த்த விமல், “இனிமேல் அடுத்தவங்க பொருளை அவங்ககிட்டேயே கொடுத்துடலாம். நமக்கு டபுளா கிடைக்கும்” என்று சிரித்தான்.
எல்லாருக்கும் சிரிப்பு வந்துவிட்டது.
“அவங்க பொருளை அவங்ககிட்ட கொடுக்கறதுக்கு ஏதாவது எதிர்பார்ப்பதும் தப்பு. எதிர்பார்க்காமல் கொடுத்தே, டபுளா கிடைச்சது” என்றார் அப்பா.
“நான் விளையாட்டுக்குச் சொன்னேன் அப்பா” என்று சிரித்தான் விமல்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT