Published : 30 Mar 2016 11:04 AM
Last Updated : 30 Mar 2016 11:04 AM
மாயா பஜாரில் போன வாரம் ‘டைனோசார்கள் பதித்த காலடித் தடங்கள்’ பற்றி பார்த்தோம் அல்லவா? இந்த வாரம் டைனோசார் எந்த நிறத்தில் இருந்தது என்பது பற்றிய கண்டுபிடிப்பைப் பார்ப்போமா?
டைனோசார் என்ற உடனேயே அவை பச்சையும் கறுப்பும் கலந்த நிறத்தில்தான் இருக்குமென நினைக்கிறோம். ஆனால், சமீபத்திய ஆராய்ச்சிகள் வரலாற்றுக்கு முந்தைய உயிரினங்கள் நிஜமாகவே என்ன நிறத்தில் இருந்தன என்பதைக் கண்டறிய உதவியுள்ளன.
இந்தப் புதிய ஆராய்ச்சிகள் புதைபடிவ உயிரினங்களின் உண்மை நிறத்தைக் கண்டறிய உதவுகின்றன. அதற்கு முன்புவரை ஓவியரின் கற்பனையில் தோன்றிய வண்ணங்களே, இது போன்ற மிகமிகப் பழமையான உயிரினங்களுக்குக் கொடுக்கப்பட்டுவந்தது.
சீன டிராகன் பறவை
இந்தப் புதிய ஆராய்ச்சிக்கு வழி வகுத்தது ‘சினோசாரப்டெரிக்ஸ்' என்ற டைனோசார்தான். இது ஊர்வன வகை உயிரினம். சீனாவில் டிராகன் போன்ற கற்பனை உயிரினங்கள் உண்டு. இந்த டைனோசார், ‘சீன டிராகன் பறவை' என்று பொருள்படும் வகையில் அழைக்கப்படுகிறது.
இந்தப் பறவை 12 கோடி ஆண்டுகளுக்கு முன்பு வடகிழக்கு சீனாவில் வாழ்ந்துள்ளது. இந்த ஊனுண்ணிப் பறவைக்கு இழைகளைப் போன்ற சிறகுகள் உண்டு. அந்தச் சிறகுகளை அதன் புதைபடிவத்திலும் காண முடிகிறது. இது சிறகுள்ள டைனோசார் வகையைச் சேர்ந்தது. டைனோசார்களில் இருந்துதான் பறவைகள் பரிண மித்ததாகப் பரிணா மவியல் அறிஞர்கள் கருதுவதும் குறிப்பிடத்தக்கது.
முதல் வண்ணப் பறவை
‘சினோசாரப்டெரிக்ஸ்’ டைனோசார் வகைக்குத்தான் உண்மையான நிறம் முதன்முதலில் நிர்ணயிக்கப்பட்டது. பொதுவாகச் சிவந்த நிறமும் வாலில் பட்டைகள் போன்ற தோற்றத்தையும் இது கொண்டிருந்தது.
1996-ம் ஆண்டே இந்த டைனோசார் வகை கண்டறியப்பட்டுவிட்டாலும், 2010-ம் ஆண்டில் உண்மையான நிறத்துடன் வரையப்பட்ட முதல் டைனோசார் வகை என்ற பெருமையை இது பெற்றது. அதற்குப் பிறகு இறக்கைகளைக் கொண்ட மற்ற டைனோசார் வகைகளான ‘ஆர்கியோப்டெரிக்ஸ்’ (பழம்பறவை), ‘மைக்ரோராப்டர்’ போன்ற பறவைகளின் நிறங்களும் கண்டறியப்பட்டன.
எப்படி வந்தது உண்மை நிறம்?
கிட்டத்தட்ட 12 கோடி ஆண்டு களுக்கு முன்பு வாழ்ந்த இந்த டைனோசரின் உண்மை நிறம் எப்படித் துல்லியமாகக் கண்டுபிடிக்கப் பட்டது? அது ஒரு குட்டி துப்பறியும் கதை.
புதைபடிவமாக மாறிவிட்ட ‘மெலனசோம்ஸ்’ (melanosome) மூலம் இந்த நிறம் நிர்ணயிக்கப்பட்டது. மெலனசோம்கள் என்பவை பறவைகளின் இறக்கைகள், பாலூட்டிகளின் முடி போன்றவற்றின் உள்ளே இருக்கும் சிறிய பைகள். இவைதான் நம் முடி, தோலின் நிறத்துக்குக் காரணமாக இருக்கும் மெலனினை உருவாகும், சேமிக்கும், கடத்தும் இடமாகவும் இருக்கின்றன. உயிரினங்களில் மிகவும் பொதுவாகக் காணப்படும் ஒளியை கிரகிக்கும் வண்ணப்பொருள்தான் மெலனின்.
இப்படியாக ஒருவருடைய முடி, தோலுக்கு கறுப்பு, பழுப்பு, பொன்னிறம், இஞ்சி நிறம் போன்றவற்றை அளிப்பதற்குக் காரணமாக மெலனசோம்கள் திகழ்கின்றன. இந்த மெலனசோம்கள் மிகவும் உறுதியானவை. சரியான சூழ்நிலை இருக்கும்பட்சத்தில் கோடிக்கணக்கான ஆண்டுகளுக்குப் புதைபடிவத்தில்கூட அழியாமல் இருக்கக்கூடியவை.
நுண்ணோக்கி ஆராய்ச்சி
உயிரோடு இருக்கும் பறவைகளின் இறகில் உயர் திறன் எலக்ட்ரான் நுண்ணோக்கி மூலம் பார்க்கும்போது பல்வேறு வடிவங்களில் உள்ள மெலனசோம்களைப் பார்க்க முடிகிறது. அதேபோல புதைபடிவ இறகிலும் ஆராய்ச்சி நடத்தப்பட்டது.
இந்தத் தொழில் நுணுக்கத்தைப் பயன்படுத்தி இங்கிலாந்தில் உள்ள பிரிஸ்டல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மைக் பென்டன் குழுவினர் சினோசாரப்டெரிக்ஸ் டைனோசாரின் உண்மை நிறத்தைக் கண்டறிந்தனர். சினோசாரப்டெரிக்ஸின் பின்புறம், தலை, கழுத்து ஆகிய பகுதிகளில் இருந்த மென்மையான நுண்தூவிகளில் ஆராய்ந்து இந்த நிறத்தைக் கண்டறிந்தனர். இந்த ஊனுண்ணி டைனோசார் இஞ்சி நிறத்தைக் கொண்டது என்றும், வாலில் பட்டைகளைக் கொண்டது என்றும் கண்டறிந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT