Published : 30 Mar 2016 11:52 AM
Last Updated : 30 Mar 2016 11:52 AM
வாண்டு: ஹாய் பாண்டு. முழு ஆண்டுப் பரீட்சையே இன்னும் தொடங்கலை. அதுக்குள்ள எப்பவும் புத்தகத்தோட திரியிரியேப்பா.
பாண்டு: முழு ஆண்டுப் பரீட்சைக்காகப் புத்தகத்தைப் படிக்கலை. முழு ஆண்டு லீவு விட்டவுடன், புதுசா ஒரு கோச்சிங் கிளாஸ்ஸுக்குப் போகப் போறேன். அதுக்காக ஒரு எக்ஸாம் இருக்கு. அதுக்காகத்தான் இந்தப் புத்தகத்தைப் படிச்சுக்கிட்டு இருக்கேன்.
வாண்டு: லீவு விடுறதுக்கு முன்னாடியே கோச்சிங் கிளாஸுக்குத் தயாராயிட்டியா?
பாண்டு: ஆமா, லீவுல சும்மா உட்கார்ந்திருக்குறதுக்கு இப்படிப் போகலாம் இல்லையா? சரி, நீ ஏதும் கோச்சிங் போற ஐடியா இல்லையா?
வாண்டு: கோச்சிங் போக வேண்டாம்ணு அம்மா சொல்லிட்டாங்க. ஆனா, வீட்டுலேயே சின்னதா கைவினைப் பொருள் செய்ய கத்துக்கொடுக்கிறதா சொன்னாங்க.
பாண்டு: கைவினைப் பொருளா?
வாண்டு: ஆமா பாண்டு. பொம்மை, விளையாட்டுப் பொருள், காகிதத்தில் குட்டிக்குட்டிப் பொம்மைகள் செய்யுறதைக் கைவினைப் பொருள்னு சொல்லுவாங்க. இங்கிலீஷ்ல இதை ‘கிராஃட்’ன்னு சொல்லுவாங்க. எங்க அம்மா ஸ்கூல் படிக்குறப்ப, முழு ஆண்டு லீவுல தையல், எம்பிராய்டரி கத்துக்கப் போவாங்களாம். அது மாதிரி என்னையும் கைவினைப் பொருள் செய்ய கத்துக்க சொன்னாங்க.
பாண்டு: என்னப்பா நீயும் ஏதாவது கோச்சிங் கிளாஸ் வருவேன்னு பார்த்தேன். இப்படிச் சொல்லிட்ட.
வாண்டு: வருஷம் பூராவும் புத்தகத்தை வைச்சுக்கிட்டுப் படிச்சுக்கிட்டுதான் இருக்கோம். முழு ஆண்டு லீவுலையும் புத்தகத்தைப் படிக்கணுமா? இப்படி ஜாலியா புது விஷயங்களைக் கத்துக்கலாமே. அப்புறம் பல்லாங்குழி, பரமபதம், கல்லாங்கல், ஆடுபுலி ஆட்டம்னு அந்தக் கால விளையாட்டைச் சொல்லித் தரதா எங்க பாட்டியும் சொல்லியிருக்காங்க. அதனால நான் எந்த கோச்சிங்குக்கும் வரலைப்பா.
பாண்டு: நீ சொல்றதைக் கேட்கவே ரொம்ப நல்லாயிருக்கே வாண்டு. அம்மாகிட்ட சொல்லி நானும் உங்க வீட்டுக்கே வந்துடுறேன்பா.
வாண்டு: வா பாண்டு, ரெண்டு பேரும் சேர்ந்து கைவினைப் பொருள் செய்யக் கத்துக்குவோம்.
பாண்டு: நிச்சயமா வாண்டு. அப்புறம் எங்க மாமா நேத்திக்கு வீட்டுக்கு வந்தப்ப, ரோலர் ஸ்கேட்டிங் ஷூ வாங்கிட்டு வந்தாரே.
வாண்டு: ம்... இனிமே அந்த ஷூவைப் போட்டுக்கிட்டு சுத்திக்கிட்டு இருப்பேன்னு சொல்லு.
பாண்டு: சும்மா சாதாரணமா கால்ல போட்டுக்கிட்டு சுத்த முடியாதாம். கொஞ்சம் பயிற்சி செஞ்சாதான் முடியும்னு மாமா சொன்னாரு. அதனால, வழுக்குத் தரை இருக்குற இடத்தை முதல்ல தேடிப் பிடிக்கணும்.
வாண்டு: சரியாதான் உங்க மாமா சொல்லியிருக்காரு. ஸ்கேட்டிங் பத்திச் சொல்றப்ப எனக்கு கே. தர்ஷினி ஞாபகம்தான் வருது.
பாண்டு: தர்ஷினியா? எனக்குத் தெரியாம உனக்கு ஒரு பிரெண்டா? யாரு அது?
வாண்டு: தர்ஷினி ஒன்னும் என்னோட பிரெண்டு இல்லை. அவ 6 வயசுக் குட்டிப் பொண்ணு. கோயமுத்தூர்ல இருக்காப்பா. இந்தக் குட்டிப் பொண்ணு ஸ்கேட்டிங் மாரத்தான்ல கலந்துக்கிட்டு சாதனை படைச்சுருக்கா.
பாண்டு: என்ன சாதனை? கேட்டாத்தான் நீ சொல்லுவியோ?
வாண்டு: அட இரு, சொல்ல மாட்டேனா? சில நாட்களுக்கு முன்னால கோயமுத்தூர்ல ஸ்கேட்டிங் மாரத்தான் போட்டி வைச்சாங்க. அதுல 7 வயதுக்குட்பட்ட பிரிவுல தர்ஷினி கலந்துகிட்டா. 10.5 கிலோ மீட்டர் தூரத்தை 45 நிமிஷத்துல கடக்கணும்னுங்கிறதுதான் போட்டி. ஆனா, இந்தக் குட்டிப் பொண்ணு 41.03 நிமிஷத்துல இந்தத் தூரத்தைக் கடந்துட்டாப்பா.
பாண்டு: ஓ... அப்படியா? இதுல என்ன சாதனைன்னு நீ சொல்லவேயில்லையே வாண்டு.
வாண்டு: குறைஞ்ச நேரத்துல ஒரு குட்டிப் பொண்ணு மாரத்தான் ஸ்கேட்டிங்ல இந்தியாவுல ஜெயிக்கிறது இதுதான் முதல் முறையாம். அதனால, தர்ஷினியோட சாதனையை இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸல அங்கீகரிச்சுருக்காங்க. அது மட்டுமில்லை பாண்டு, ஆசியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்லயும் தர்ஷினி இடம் பிடிச்சுருக்கா. இது சாதனைதானே?
பாண்டு: அடேங்கப்பா, பெரிய சாதனைதான் போலிருக்கு. தர்ஷினிக்கு நாமளும் வாழ்த்து சொல்லிடுவோம்பா.
வாண்டு: நிச்சயமா வாண்டு. அப்புறம், வழக்கம்போல நீ ஏதாவது தகவல் வைச்சுருப்பியே. ஏதும் இருக்கா?
பாண்டு: கனடாவுல ‘மப்பெட்’னு பேருள்ள ஒரு பூனை ரொம்ப பாப்புலராகிடுச்சுப்பா.
வாண்டு: பாப்புலராகுற அளவுக்கு அந்தப் பூனை என்ன செஞ்சது?
பாண்டு: அந்தப் பூனை ஒன்னும் செய்யலை. பூனைக்கு மீசை இருக்குமில்லையா?
வாண்டு: பூனைக்கு மீசை இருக்குறதால பாப்புலராயிடுச்சா? எல்லா பூனைக்கும்தான் மீசை இருக்கே.
பாண்டு: அது எனக்கும் தெரியும். முழுசா கேளு. இந்தப் பூனை கறுப்பு - வெள்ளை நிறத்துல இருக்கு. அதோட மூக்குக்குக் கீழே ஆம்பளைங்களுக்கு இருக்குற மாதிரி முறுக்கு மீசை சைசுல கறுப்புத் திட்டு இருக்கு. அதைப் பார்க்க நிஜ மீசை மாதிரியே இருந்ததால, அதோட உரிமையாளர் அந்தப் பூனையை போட்டோ எடுத்து இண்டர்நெட்டுல போட்டிருக்காரு. அதை எல்லோரும் பார்க்க உலக அளவுல பாப்புலராயிடுச்சு.
வாண்டு: இப்படியும் ஒரு பாப்புலரா? பூனைக்கு வந்த வாழ்வுன்னு சொல்லு.
பாண்டு: கரெக்டா சொன்ன. சரி பாண்டு, அப்போ நான் வரேன்.
வாண்டு: சரிப்பா, அப்புறம் பார்ப்போம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT