Last Updated : 16 Mar, 2016 12:42 PM

 

Published : 16 Mar 2016 12:42 PM
Last Updated : 16 Mar 2016 12:42 PM

வாண்டு பாண்டு: பெங்குவின் காட்டும் பாசம்

வாண்டு: ஹாய் பாண்டு, நன்றியுள்ள விலங்கு நாய் மட்டும்தானே?

பாண்டு: என்னப்பா, வந்ததும் வராததுமா திடீர்னு நாயைப் பத்திக் கேள்வி கேட்க ஆரம்பிச்சுட்ட?

வாண்டு: நான் கேட்குறதுக்குப் பதிலை மட்டும் சொல்லு பாண்டு, நன்றியுள்ள விலங்கு நாய்தானே?

பாண்டு: ஆமா, நம்ம பாடப்புத்தகத்துலகூட நாம படிச்சிருக்கோமே.

வாண்டு: அதுலதான் ஒரு டவுட்டு வந்துடுச்சு பாண்டு.

பாண்டு: அப்படி என்ன டவுட்டு?

வாண்டு: பிரேசில்ல மனிதர் ஒருவரைப் பார்ப்பதற்காக ஒரு பெங்குவின், ஒவ்வொரு வருஷமும் 5 ஆயிரம் மைல் பயணம் செஞ்சு வருதாம்.

பாண்டு: ஆச்சரியமா இருக்கேப்பா...? கொஞ்சம் விவரமா சொல்லு வாண்டு.

வாண்டு: பிரேசில்ல ஐந்து வருஷத்துக்கு முன்னால ஜோ பெரேரா டிசோசான்னு ஒரு மீனவர், அப்போ கடல்ல மீன் பிடிச்சுட்டு இருந்தாரு. கடல்ல கலந்த எண்ணெயில மூழ்கி ஒரு பெங்குவின் உயிருக்கு ரொம்ப ஆபத்தான நிலையில இருந்துச்சாம். அதைப் பார்த்துட்டு அப்படியே விட்டுட்டு வர ஜோவுக்கு மனசு வரலை. அதை வீட்டுக்குத் தூக்கிட்டு வந்திட்டாரு. அதை 11 மாசம் வீட்டுல வச்சு சிகிச்சை கொடுத்திருக்காரு. பெங்குவினுக்கு உடம்பு சரியான பிறகு கடல்ல விடப் போயிருக்காரு ஜோ. ஆனா, அந்த பெங்குவினுக்குப் போக விருப்பமில்லை.

பாண்டு: வாண்டு, என்னப்பா ஏதோ கதை மாதிரி சொல்லிட்டுப் போற?

வாண்டு: ஏய், நான் சொல்றது கதை மாதிரி இருக்கா? முழுசா சொல்ற வரைக்கும் மூச்சு விடாதே. போக அடம் பிடிச்ச அந்த பெங்குவின் திடீர்னு ஒரு நாள் அதுவாவே போயிடுச்சாம். ஆனா, சில மாதங்கள் கழிச்சு அந்த பெங்குவின் ஜோவைப் பார்க்க திரும்ப வந்திருக்கு. அதைப் பார்த்து ஜோ ஆச்சரியத்துல மூழ்கிப்போய்ட்டாரு. அப்போ இருந்து ஒவ்வொரு வருஷமும் பெங்குவின் இப்படி வருதாம்.

பாண்டு: எங்க இருந்து அது வருதாம்?

வாண்டு: ரியோடி ஜெனிரோவுல ஜோ இருக்காரு பாண்டு. ஆனா, பெங்குவின் அர்ஜென்டினா, சிலி கடல் பகுதியிலதான் இருக்குதாம். ஜோவைப் பார்க்க 5 ஆயிரம் மைலுக்கு மேலே கடல்ல நீந்தி வருமாம். அப்படி ஒரு முறை வந்துச்சுனா 6 மாதங்கள் வரை ஜோவோடு இருக்குமாம். அப்புறம் திரும்பிப் போய்டுமாம். ஜோவுக்கு உறவுகள் யாரும் இல்லை போல. அதனால அந்த பெங்குவினைத் தன்னோட குழந்தை மாதிரி பார்த்துக்குறாரு. அதுக்கு ‘டிண்டிம்’ன்னு பேருகூட வச்சுருக்காரு.

பாண்டு:ரொம்ப ஆச்சரியமா இருக்கே வாண்டு. நன்றியுள்ள விலங்கு நாய்தானான்னு நீ கேட்டதுக்கு இதுதான் காரணமா? ஒருத்தருக்குச் செய்யுற உதவியை ஆறறிவு உள்ள மனுஷங்களே மறந்துபோயிடுறாங்க. ஆனா, ஐந்தறிவு உள்ள பெங்குவினுக்கு உள்ள நன்றி உணர்வைப் பார்க்குறப்ப உடம்பு சிலிர்க்குதுபா.

வாண்டு: கரெக்டா சொன்ன பாண்டு. சரி அதைவிடு, ரூபிக் க்யூப் வாங்கப் போறதா சொன்னியே, வாங்கிட்டியா?

பாண்டு: வாங்கிட்டேன் பாண்டு, இப்போதான் அதுல தீர்வைக் கண்டுபிடிக்கக் கத்துக்கிட்டு இருக்கேன்.

வாண்டு: கொஞ்சம் கொஞ்சமாதான் கத்துக்க முடியும். அதுக்கு நிறைய பயிற்சியும் செய்யணுமாம். மூளைக்கு நல்ல வேலை தரும்ணு எங்கப்பா சொன்னாரு.

பாண்டு: ஆமாப்பா, ஒரு ரூபிக் க்யூப்ல தீர்வு கண்டுபிடிக்கவே எனக்கு ரொம்ப நேரம் ஆகுது. ஆனா, ஒடிஷாவுல ஆருஷின்னு 7 வயசுக் குட்டி பொண்ணு ஒரு நிமிஷத்துல 24 ரூபிக் க்யூப்புக்குத் தீர்வு சொல்லி அசத்தியிருக்காப்பா.

வாண்டு: அம்மாடியோவ், பயங்கர ஸ்பீடா அந்தப் பொண்ணு விளையாடி இருப்பா போல.

பாண்டு: ஆமா, ரொம்ப ஸ்பீடு. இந்தச் சின்ன வயசுல ஒரு நிமிஷத்துல 24 ரூபிக் க்யூப்புக்குத் தீர்வு சொல்றது இந்தியா அளவுல சாதனையாம். ஆனா, ஆருஷிக்கு இதெல்லாம் பெரிய விஷயமே இல்லையாம். உலக அளவுல சாதனை படைக்குறதுக்காக ரொம்ப முயற்சி பண்ணிக்கிட்டு இருக்காப்பா.

ஆருஷி

வாண்டு: ரொம்ப நல்ல விஷயம்தானே. நீயும் ஆருஷி மாதிரி நல்லா பயிற்சி செஞ்சி சாதனை பண்ணு பாண்டு.

பாண்டு: நிச்சயமா வாண்டு. முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்...

வாண்டு: ம்... புரிஞ்சா சரி. அப்போ நான் வரட்டுமா?

பாண்டு: சரிப்பா, திரும்பவும் அப்புறம் பார்க்கலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x